கோயில்களில் வழங்கப்படும் சுத்தமான விபூதி என்பது பசுவின் சாணத்தை மூலப்பொருளாகக் கொண்டு கோசாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இதைச் செய்ய அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களின் குழு தேவைப்படுகிறது. பெரும்பாலான கோசாலைகளில் விபூதி தயாரிக்க நாட்டு மாடுகளின் சாணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். சாணம் தட்டையான வட்டவடிவ கேக்குகளாக மையத்தில் துளைகளுடன் தயாரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட இந்த சாண கேக்குகள் பிறகு மிக நுண்மையான துகள்களாக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
தினமும் கடவுளை வழிபடும் வழக்கம் இருப்பவர்கள் வழக்கமாக காலையிலும் மாலையிலும் பிரார்த்தனைகளின் போது இதைப் பயன்படுத்துகிறார்கள்.
நெற்றியில் திருநீறு பூசுவதால் கிடைக்கும் பலன்கள்:
நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது!
திருநீறு எனப்படும் புனித சாம்பல் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் மணம், அதைப் பூசும் விதம், பூசிக் கொள்வதற்கு முன் நம்பிக்கையுடன் நாம் உச்சரிக்கும் ஸ்லோகங்கள் இவை அனைத்துமே திருநீற்றின் தெய்வீகத் தன்மையையும், அதன் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கின்றன. நம் தாய்மார்களும் பாட்டிகளும் தினமும் காலையிலும் மாலையிலும் ஜெபித்து, நெற்றியில் விபூதி பூசுவதை எப்போதும் வலியுறுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்.
தலைவலியைத் தடுக்கிறது!
நெற்றியில் திருநீறு பூசுவதால் தலைவலி குணமாகும் என்பது பாட்டி வைத்திய முறைகளில் ஒன்று. வலி நிவாரணி மற்றும் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்ட அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஏராளமான மூலிகைகளாலும் இந்த பஸ்மம் தயாரிக்கப்படுவதால், விபூதியை நம் நெற்றியில் பூசியதும் தலைவலி விரைவில் குறைகிறது. உங்களுக்கு தலைவலி இருக்கும்போது உங்கள் நெற்றியில் வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டாம்.விபூதியைப் பயன்படுத்திப் பாருங்கள். மாட்டுச்சாணம் அல்லது மூலிகைகளை எரிப்பதன் மூலமாகத் தயாரான சுத்தமான விபூதி எனில் நிச்சயம் உடனடி பலன் கிடைக்கும்.
குண்டலினி சக்கரங்களை ஒழுங்குபடுத்துகிறது!
திருநீறு பயன்படுத்துவது நமது உடலின் 7 குண்டலினி சக்கரங்களையும் ஒழுங்குபடுத்துவதாகக் கூறப்படுகிறது, இது நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும். நமது ஏழு சக்கரங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு காரணமாகவே நோய்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள் யோகிகள்.விபூதி பூசுவதால் இந்தச் சக்கரங்களை சமன் செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையும் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது தான்.
வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறது!
இது நம் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை எப்போதும் நினைவுபடுத்துகிறது, இந்த உலகத்தில் நிலையற்றது மனித வாழ்வு என்ற எண்ணம் நம் உலக ஆசைகளை குறைக்கும், மற்றவர்களிடம் இரக்கத்தை அதிகரிக்கும் எனபது மூத்தோர் வாக்கு. அது அழுத்தமான நிஜமும்கூட.
இப்போது திருநீறு இட்டுக்கொள்ளும் முறைகளையும் அவற்றின் பயன்களையும் பற்றி பார்ப்போமா?
உங்கள் கட்டைவிரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையில் ஒரு சிட்டிகை விபூதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
1. அதை அப்படியே ஆக்ஞா சக்கரம் எனப்படும் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள நெற்றிப் பகுதியில் இட்டுக் கொண்டால் நமது அறிவாற்றம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் என்கிறார்கள் யோகிகள்.
அதையே;
2. விசுத்தி சக்கரம் எனப்படும் தொண்டைக் குழியில் இட்டுக்கொண்டால், நமது உயிராற்றலை சக்தியாகப் பரிணமிக்கச் செய்ய முடியும் என்கின்றன சைவ மத போதனைகளும் நம்பிக்கைகளும்.
3. அதே திருநீற்றை அனாஹதச் சக்கரம் எனப்படும் விலா எலும்புகள் சந்திக்கும் மார்பின் மையத்தில் பூசிக் கொண்டால் உயிரை அன்பாகப் பெற முடியும் என்கிறார்கள் யோகிகளும், சைவ சமய அடியார்களும்.
4. காது மடல்களின் பின்புறத்தில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கமும் சைவர்களிடையே உண்டு.
5. உடல் முழுவதும் கட்டுக்கட்டாகத் திருநீறு இடும் வழக்கமும் சைவர்களிடையே அதிகமும் உள்ளது.
சிவபெருமானுக்கும் திருநீறுக்குமான தொடர்பு!
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் ஏஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
'பஸ்மா' என்ற சொல்லுக்கு 'நம்முடைய பாவங்கள் அழிந்தன' என்று பொருள். பஸ்மாவை குறிப்பாக சிவபெருமானுடன் தொடர்புபடுத்துகிறார்கள்,சிவன் தன்
உடல் முழுவதும் திருநீறு பூசிய நிலையில் வணங்கப்படுவதால் சைவர்கள் அதைத் தங்கள் நெற்றியில் திரிபுந்திரம் அல்லது மூன்று இணையான கிடைமட்டக் கோடுகளாகப் பூசிக் கொள்வது வழக்கம். திரிபுந்திராவின் மையத்தில் குங்குமத்தால் பொட்டு இட்டுக் கொண்டால் அந்த குறியீடு சிவனுடன் சக்தியையும் இணைத்துக் குறிக்கிறது. இது ஆற்றல் மற்றும் பொருளின் ஒருங்கிணைந்த தத்துத்தை விளக்குகிறது.
சில பக்தர்கள் மேல் கைகள், மார்பு மற்றும் தொண்டை போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் திருநீறு பயன்படுத்துகிறார்கள். துறவிகள் அதை தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்.
திருநீறு வீணாகாமல் தடுப்பது எப்படி?
கோயில்களில் பிரசாதமாகப் பெறப்படும் திருநீற்றை நெற்றிக்கு இட்டுக் கொண்ட பின் கையை உதறி அப்படியே காற்றில் பறக்க விடவோ, அல்லது கோயில் தூண் இடுக்குகளில் சிதற விடவோ கூடாது. தேவையான அளவுக்கு மட்டுமே பெற்றுக் கொண்டு அங்கேயே ஒரு சின்ன நாட்காட்டித் துணுக்கை வாங்கி அதில் பத்திரப்படுத்தலாம்.
திருநீறு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது எனில் அதை வீணாக்காமல் சிறிது சிறிதாக வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்கு உரமாகத் தூவலாம்.
வெள்ளி பூஜை சாமான்களைத் துடைத்து பளபளப்பாக்கப் பயன்படுத்தலாம்.
கண்ணாடி ஜன்னல்கள், முகம் பார்க்க உதவும் ஆளுயரக் கண்ணாடிகளை துடைத்துப் புதிது போலச் செய்ய திருநீறு உதவும்.
திருஷ்டி கழிக்கச் சூடம் கொளுத்தும் போது தட்டில் கொஞ்சம் விபூதி கொட்டி அதன்மேல் சூடத்தை ஏற்றினால் உலோகத் தாம்பாளங்களில் சூடக்கறை படிவதைத் தடுக்கலாம்.
வீட்டில் திருநீறு பாக்கெட்டுகள் நிறையச் சேர்ந்து விட்டது எனில் சிரமம் பாராமல் அதை தோட்டங்களுக்கு எடுத்துச் சென்று தூவி மண்ணை வளமாக்கலாம்.
நிச்சயமாக வாயில் போட்டுக் கொள்ளக் கூடாது. அது ரத்த சோகையை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தோலில் ஒவ்வாமை காரணமாக தடிப்புகள் வந்தால் கிராமப்புறங்களில் இப்போதும் கோமியத்தில் திருநீறு கலந்து உடல்முழுவதும் தடவும் வழக்கம் இருக்கிறது.
இப்படிப் பல வழிகளில் திருநீற்றை வீணாக்காமல் நாம் மறு உபயோகம் செய்யப் பழகலாம்.