வீட்டிற்கு வரும் விருந்தினர்களை குங்குமம் கொடுத்து வரவேற்பது நம் பண்பாடு. அதேபோல், வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் நாம் அழைக்கச் செல்பவர்களின் வீட்டிற்கு குங்குமம் கொடுத்து பத்திரிக்கை வைத்து அழைப்பது நம் மரபு. இப்படி ஆன்மிகம், ஆரோக்கியம் என்று அனைத்திலும் முன்னுரிமை வகிக்கும் குங்குமத்தின் மங்கல குணங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இன்றும் சில பிரிவினர் திருமணத்திற்குப் பிறகு குங்குமம் வைப்பதை தனி சடங்காக நடத்தி வருகின்றனர். நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதை முன்னோர் மிக கௌரவமான ஒன்றாகவே கருதி இருந்தனர். இப்பொழுதும் பெண்கள் அதை அணிய விருப்பப்படுவதைக் காணலாம். வட இந்தியாவில் திருமணமான பெண்கள் வகிடு முழுவதும் குங்குமத்தால் நிரப்பிக்கொள்வதைக் காணலாம்.
ஆன்மிகத்தில் முக்கிய இடம் வகிக்கும் குங்குமம் அழகு சாதனப் பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் செய்யப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்பு சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்குப் பயன்படுகிறது. இதனால் தொற்று நோய்க் கிருமிகள் எட்டிப் பார்க்காது என்பதும் ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது என்பதும் உறுதி.
மேலும், நாம் குங்குமத்தை தினசரி நெற்றியில் அணியும்பொழுது, சூரியனின் கதிர்கள் நெற்றி குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் வைட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன. இதனால் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்பவர்களுக்கு புதிய சக்தி கிடைக்கிறது.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியே. இப்படி நெற்றியில் குங்குமம் இடுவதால் அது உடல் சூட்டை தணிக்கிறது. நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் தனி பலன் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.
குங்குமம் தரித்தவர்களை ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் செய்வது கடினம். ஒருவரை அமைதிப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. நெற்றி, வகிட்டில் குங்குமம் இட்ட பெண்களை பார்க்கும்போது லட்சுமிகரமாக தோன்றுவதைக் காணலாம். இதனால் மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு சக்தி கிடைக்கிறது.
ஒவ்வொரு விரல்களால் குங்குமம் வைக்கும்போதும் குறிப்பிட்ட பலன் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. மோதிர விரலால் குங்குமம் இடும்பொழுது சாந்தியும், நடுவிரல் நீடித்த ஆயுளும், பெருவிரல் படைப்பும், ஆள்காட்டி விரல் மோட்ச காரணமும் ஆகும் என்பதே கணக்கு. ஆனால், சுண்டுவிரல் மற்றும் நகத்தால் குங்குமம் வைப்பது ஆரோக்கிய நன்மையை அளிப்பதில்லை. ஆதலால் அதைத் தடை செய்து ஒதுக்கி விடுகிறோம்.
இத்தனை நன்மைகளை அளிக்கும் குங்குமத்தை திருமணமான இளம் பெண்களும் அவ்வப்பொழுதாவது அணிந்து மேன்மையுற்றால் நன்று. குறிப்பாக, விசேஷ தினங்களிலாவது இதைக் கடைபிடித்தால் நமது கலாசாரம் பாதுகாக்கப்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.