அதிகம் பேசுவதை விட, காது கொடுத்துக் கேட்பது சிறந்தது!

காது கொடுத்து கேட்டல்
காது கொடுத்து கேட்டல்https://ta.quora.com

ந்தப் பள்ளிக்கு புதியதாக ஒரு மாணவன் சேர்ந்தான். இதற்கு முன் படித்த பள்ளியில் அவனே முதலிடம். எப்போதும் வகுப்பில் ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை தப்பு இல்லாமல் திரும்ப ஒப்புவிப்பதில் சிறந்தவனாக இருந்தான். இந்தப் பள்ளியிலும் அவன் சிறப்பாகவே படித்தாலும் அவனால் முதல் மாணவனாக வர முடியவில்லை. ஆசிரியர் கற்றுக்கொடுத்ததை தயங்காமல் பேசவும் செய்கிறான். ஆனால், அவன் இடத்தை வேறொரு மாணவன் தட்டிச் செல்கிறான். இவ்வளவுக்கும் அந்த மாணவன் வாயைத் திறந்து பேசுவதே கிடையாது. இது எப்படி?

புதிதாய் வந்த மாணவன் அவனிடம் சென்று, "எப்படி உன்னால் எப்போதும் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது?" என்று கேட்டான். அப்போது அவன் சொன்னான், "எனக்கு எப்போதும் பேசுவதை விட கேட்பது மிகவும் பிடிக்கும். ஆசிரியர் சொல்வதை செவிமடுத்துக் கேட்டு என் அறிவில் நிறுத்தி அதை ஆழ்ந்து நோக்குவேன். அதில் இருக்கும் நிறை குறைகளை என் அறிவு சுட்டுக்காட்டும். அதன் பின் அதை அப்படியே எழுத்தில் வடிப்பேன். ஆசிரியர் சொல்வதை மனனம் செய்வதை விட, இப்படி அதைத் தெள்ளத் தெளிவாக உன்னிப்புடன் கேட்டு அதை நினைவில் நிறுத்தி மேம்படுத்துவதே எனக்கு வெற்றி தருகிறது" என்றான். அதிகம் பேசுவதை விட. சிறந்தது செவிமடுத்துக் கேட்பது என்பது புரிந்தது கேள்வி கேட்ட அந்த மாணவனுக்கு.

‘சரி நாமும்தானே எல்லாவற்றையும் கேட்கிறோம். இதில் என்ன சிறப்பு இருக்கிறது. கேட்பதற்கும் செவிமடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆம். கேட்டல் என்பது இயற்கை தந்த உடல் திறன். செவிமடுத்தல் என்பது அறிவு தரும் செயல் திறன் ஆகும். கேட்டல் குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்ற அனைத்து உயிர்களுக்கும், கேட்கும் உடல் திறன் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமும் எத்தனையோ விதமான ஒலிகள் நமது செவிகளில் விழுந்தவண்ணமே இருக்கின்றன. அவற்றிலிருந்து நமக்குத் தேவையானதை செவிமடுத்துக் கேட்பதில் உள்ளது நம் முன்னேற்றம்.

ஒரு குழந்தை பிறக்கும் முன்னர் கருவிலேயே செவிமடுத்தல் ஆரம்பமாகி விடுகிறது என்பது அதிசயிக்கத்தக்க உண்மை. இதற்கு சான்று கருவில் இருந்து சக்ரவியூகத்தின் விதிமுறையை செவிமடுத்துக் கேட்ட அபிமன்யு. கேட்டல் எனும்போது நாம் விரும்பும் அல்லது வெறுக்கும் ஒலிகள் நம்மை அறியாமல் நம் உத்தரவின்றி காதுகளை வந்தடையும். செவிமடுத்தல் என்பது உன்னிப்பாகவும் ஒருமுகப்படுத்தி விரும்பும் ஒலிகளுக்கு நம் செவிகளை வழங்குவதைக் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:
'ஊட்டச் சத்துக்களின் உறைவிடம்' எனப்படும் 10 வகை தென்னிந்திய உணவுகள்!
காது கொடுத்து கேட்டல்

சொல்லப்போனால் வளவளவென்று அதிகம் பேசுபவர்களை விட மௌனமாக அதிகம் செவிமடுப்பவர்களையே உலகம் விரும்புகிறது. சிலர் தங்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் மிகச்சிறப்பான முறையில் மற்றவர்களுக்கு சொல்வதற்கான நாவன்மையும் சொல்வளமும் வாய்த்தவர்களாக இருப்பார்கள். எனினும், அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும்போது விரைவில் அவர்களை மக்கள் புறக்கணிக்கத் துவங்குவார்கள்.

நல்ல செவிமடுப்பாளர்களாக இருப்பது நல்ல வாழ்க்கைத் துணைகளாகவும், சிறந்த பெற்றோர்களாகவும் இருப்பதற்கு மட்டுமல்லாது, வாழ்க்கையில் பல துறைகளிலும் தனித்துவமான முத்திரை பதிக்க நிச்சயமாக துணை புரியும். வீட்டில் மனைவி சொல்வதை செவிமடுத்துக் கேட்டால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி சொல்வதை செவிமடுத்துக் கேட்டால் பணி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் சொல்வதை செவிமடுத்துக் கேட்டால் எதிர்கால சந்ததி வளமாக வளரும்.

ஆகவே, அதிகம் பேசுவதுதான் நன்மை தரும் என்று எண்ணாமல், நல்ல செவிமடுப்பாளராக இருந்தும் வாழ்வில் அதிக நன்மைகள் பெறலாம் என்பதை கவனத்தில் நிறுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com