
இந்திய சமையலில் பயன்படுத்தும் தக்காளி சாம்பார் முதல் சட்னி வரை பலவிதமான உணவுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால், காய்கறிகளை அதில் சேமித்து வைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், தக்காளியை நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பது அதன் தரம் மற்றும் சுவையை பாதிக்கக்கூடும் என்பதைப் பலர் அறிவதில்லை. தக்காளியைச் சரியாகப் பராமரிப்பது அதன் சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்க உதவும்.
நன்கு பழுத்த தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கலாம். இருப்பினும், அவற்றை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான சூழல் தக்காளியின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்று கூறப்படுகிறது. எனவே, வாங்கிய தக்காளியை முடிந்தவரை விரைவாகப் பயன்படுத்திவிடுவது அதன் முழுமையான சுவையை அனுபவிக்க உதவும்.
பழுக்காத பச்சைத் தக்காளியை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அவை பழுப்பதற்கு மிதமான வெப்பமும் காற்றோட்டமும் தேவை. பழுக்காத தக்காளியை அறை வெப்பநிலையில், நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் வைத்தால் விரைவில் பழுத்துவிடும். பழுக்காத தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அது பழுக்கும் செயல்முறை தடைபட்டு, அதன் சுவை மந்தமாகிவிடும்.
பழுத்த தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, காய்கறிகளுக்கென உள்ள தனிப் பகுதியில் வைப்பது நல்லது. இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலேயே வெளியில் வைத்திருக்கலாம்.
தக்காளியை ஒரு வாரத்திற்கு மேல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அது உள்ளிருந்து அழுகத் தொடங்கலாம். வெளிப்படையாக நன்றாகத் தெரிந்தாலும், உள்ளே கெட்டுப்போயிருக்க வாய்ப்புள்ளது. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் தக்காளியின் மீது பூஞ்சை அல்லது பாசி வளர வழிவகுக்கும். இதுபோன்ற தக்காளியை உட்கொள்ளும்போது குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இது மேலும் ஆபத்தாக அமையலாம்.
நாம் உணவைச் சமைப்பதே அதன் சுவைக்காகத்தான். ஆனால், தக்காளியை நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதன் சுவை குறைந்துவிடும். அத்துடன், அதில் உள்ள வைட்டமின் சி, லைகோபீன் போன்ற சத்துக்களின் அளவும் குறையக்கூடும். எனவே, தக்காளியைப் புதியதாக இருக்கும்போதே பயன்படுத்துவது அதன் சுவையையும், ஆரோக்கியப் பலன்களையும் முழுமையாகப் பெற உதவும்.