
அதுவா.? இதுவா? அவரா..? இவரா..? நான் சொல்வதுதான் சரி. இல்லை... இல்லை நான் சொல்வதுதான் சரி என்று இப்படி ஏதாவது தமக்கு சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, ஏதாவது செயலைப் பற்றி ஓயாமல் வாதம் செய்துகொண்டு பொழுதையும் வீணடித்து, வம்பையும் விலைக்கு வாங்கி வருவோர் பலர் நம் இடையே இருந்துகொண்டு இருக்கிறார்கள்.
ரயில் பயணங்களிலும், வேறு பல பொது இடங்களிலும் பலர் இந்த வீண் வாதத்தில் ஈடுபட்டுக் கசப்பான விளைவுகளைச் சந்திக்கின்றனர். சில நேரங்களில் தீவிரமாக வாதம் செய்து, பேச்சு முற்றிப்போய் கடைசியில் அடிதடியில்போய், ஏன் கொலையிலே முடிவதை நாம் அன்றாடும் செய்தித்தாள்களில் பார்க்கின்றோம்..
இந்த விவாதப் பேய் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்து சிந்தனை செய்து முடிவு எடுக்கும் திறனை மழுங்கடித்து, தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இதனால்தான் பல பொது இடங்களில், "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று எழுதி வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றோம்.
ஒருவர் தன் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடுபட்டாவது நிலை நிறுத்தத்தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன் வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தன் நிலையில் இருந்து மாறமாட்டார்கள்.
கடைசியில் கசப்பு உணர்வுதான் மிஞ்சும். பின் ஏன் இந்த வீண் வாதம்? இதில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்றும் உள்ளது.
ஒருவர் தன் மனத்தளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப்படுத்திக் கொள்கிறார் (Personification).
அதனால் அந்த வாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சிவசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சி உருவதால், சமநோக்கில் எந்தவிதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார்.
ஆகையால்தான் வாதப்பிரதி வாதங்களைத் தவிருங்கள் என்ற அறிவுரையை நமக்குப் போதித்து இருக்கிறார்கள். ''வாதத்தில் வென்றாரே தோற்றார், ஏனெனில் அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண்'' என்கிறார் ஒரு மனோதத்துவ அறிஞர்.
சில நேரங்களில் மற்றவர்களுடன் ஏதாவது பொருள் பறறிய வாதங்கள் செய்யவேண்டிய சூழ்நிலை அமைந்தால் அது ஆக்கபூர்வமான வாதமாக இருத்தல் வேண்டும்.
மேலும், அந்த வாதம், எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி இருக்க வேண்டும் அல்லாமல், அதில் ஈடுபடும் தனி நபர் பற்றியதாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்திலோ, அல்லது நண்பர்களுடனோ ஒரு சாதாரண உரையாடல், பேச்சு தடித்தனால் கடும் வாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் ஒருவர் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வெளிவருவது நலம். அல்லது ஏதாவது நகைச்சுவைகளைச் சொல்லி அங்கு தோன்றும் இறுக்கமான சூழ்நிலையை திசை திருப்பி மனங்கள் முறுக்கிக் கொண்டு நிற்பதைத் தவிர்க்க முயலவேண்டும்.
பல குடும்பங்களில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு செயலுக்காக வாதம் செய்துகொண்டே இருப்பர். பேரன், பேத்தி எடுத்தப் பிறகும் கூட ஓயாமல், தான் செய்ததுதான் சரி என்று இருவரும் வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறு நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் வாதங்களைச் சரியான அணுகுமுறையால் முடிவுக்குக்கொண்டு வரவில்லையெனில், சில நேரங்களில் உறவுகள் நாடைவில் முறிந்துவிட ஏதுவாகும்.
சில சமயம் உடல் நிலை, மன அழற்சி, வெளியே கொண்ட கோபம் போன்ற காரணங்களால் பேச்சு தடிக்கும். அப்போது சரியான காரணத்தை உணர்ந்து மற்றவர் தணிந்துப் போகவேண்டும்.
ஒன்றுக்குமே ஆகாத குப்பை வாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக, நம் கருத்தை அது எவ்வளவுதான் உண்மை மற்றும் பொருள் செறிந்ததாக இருந்தாலும், ஏனையோர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
ஏனெனில் அது இயற்கைக்கு எதிரான நிகழ்ச்சி! அவரவர்க்குத்தான் சொல்வதுதான் பெரிது.
அவரவர் வழியே சிறிது சென்றுதான் அவர்களை நம் வழிக்குத் திருப்ப முயற்சிக்க வேண்டும். நாம் நினப்பதுபோல் இவ்வுலகம் சுழல்வது இல்லை.