
குளிர்பானம், ஜூஸ் போன்றவற்றை குடிப்பதற்கு நாம் அதிகமாக ஸ்ட்ராவை பயன்படுத்துகிறோம். இந்த ஸ்ட்ரா பிளாஸ்டிக்கால் ஆனவையாகும். பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்துவதால் ஏற்படும் மிகபெரிய ஆபத்து என்னவென்றால், இது மக்குவதற்கு 100 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும்.
இதனால் நம் சுற்றுச்சூழலுக்கு மிகபெரிய சேதம் ஏற்படுகிறது. கடல், ஆறு, நிலம் போன்றவை மாசுப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு தான் இந்தியா மற்றும் பல நாடுகள் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதத்தில் ஸ்ட்ராக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
காகித ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாகும். பிளாஸ்டிக் ஸ்ட்ராவை ஒப்பிடுகையில், காகித ஸ்ட்ராக்கள் மக்குவதற்கு 3 முதல் 6 வாரங்களே எடுத்துக் கொள்கின்றன. தாவரம் மற்றும் மூங்கில் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் காகித ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், சமீபத்தில் காகித ஸ்ட்ராக்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்ட்ராக்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
காகிதம், பிளாஸ்டிக் மற்றும் மூங்கில் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ராக்களை பரிசோதித்து பார்த்ததில் இதில் பாலி புளூரோ அல்கைல் பொருட்களின் கலவை உள்ளதாக கண்டுப்பிடித்துள்ளனர். அதிலும், காகித ஸ்ட்ராக்களில் பிளாஸ்டிக்கை விட அதிக அளவு ரசாயனம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாலி ப்ளூரோ அல்கைல் நீரில் அதிகமாக கரையக்கூடியது என்பதால், அதைப் பயன்படுத்தி நாம் பருகும் பானத்தில் கலந்து நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
முதன்முதலில் காகித ஸ்ட்ராக்களே பிரபலமாக இருந்தன. ஆனால், காகித ஸ்ட்ராவால் பானங்களை குடிக்கும் போது அதன் சுவை மாறிவிடுவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் தான் காகித ஸ்ட்ராக்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சொல்லி மறுபடியும் காகித ஸ்ட்ராக்கள் புழக்கத்தில் வரத்தொடங்கியுள்ளது.
ஆனால், காகித ஸ்ட்ராக்களில் உள்ள பாலி ப்ளூரோ அல்கைல் பல்வேறு உடல் நலப்பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம், கருவுறுதலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியில் குறைப்பாடு, எலும்புகளில் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
நாம் பயன்படுத்தும் ஸ்ட்ராக்கள் நமக்கு உடனடியாக பாதிப்பை ஏற்றபடுத்துவதில்லை என்றாலும் காலப்போக்கில் இதனுடைய தாக்கத்தை நாம் உணர முடியும் என்று சொல்லப்படுகிறது. எனவே, காகித ஸ்ட்ராவோ அல்லது பிளாஸ்டிக் ஸ்ட்ராவோ எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.