

கடைகளில் ஜாம், சாஸ் அல்லது ஊறுகாய் வாங்கும்போது, அந்தப் பொருட்கள் தீர்ந்த பிறகு பாட்டிலைப் தூக்கி எறிய மனம் வராது. அதில் மளிகைப் பொருட்களைப் போட்டு வைக்கலாம் என்று நினைப்போம். ஆனால், அந்தப் பாட்டிலின் அழகைக் கெடுப்பது அதன் மேலே ஒட்டப்பட்டிருக்கும் விலைப்பட்டியல் மற்றும் பிராண்ட் ஸ்டிக்கர்கள் தான். நகத்தால் சுரண்டினாலும், கத்தியால் தேய்த்தாலும் அந்தப் பிசுபிசுப்புத் தன்மை மட்டும் போகாது. பாதியும் மீதியுமாக ஒட்டிக்கொண்டு பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இனி அந்தக் கவலை வேண்டாம்.
வெந்நீர்!
ஸ்டிக்கர்களைக் கிழிப்பதற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, அதை அப்படியே பிய்க்க முயற்சிப்பதுதான். அதற்குப் பதிலாக வெப்பத்தைப் பயன்படுத்தினால் வேலை சுலபமாகும். இதற்கு நமக்குத் தேவைப்படுவதெல்லாம் நன்கு கொதிக்க வைத்த தண்ணீர் மட்டுமே. பாட்டிலின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பசையானது அடிப்படையில் ஒரு பாலிமர் வகையைச் சார்ந்தது. இது சாதாரண வெப்பநிலையில் கெட்டியாக இருக்கும். ஆனால், சூடு படும்போது இளகும் தன்மை கொண்டது. இந்த அறிவியலைப் புரிந்து கொண்டாலே போதும்.
முக்கிய விஷயம்!
இந்த முறையைச் செய்வதற்கு முன், ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. நீங்கள் சுத்தம் செய்யப்போகும் பாட்டில் அதிகக் குளிராகவோ அல்லது ஃப்ரிட்ஜில் இருந்தோ எடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. குளிர்ந்த பாட்டிலில் திடீரெனக் கொதிக்கும் நீரை ஊற்றினால், கண்ணாடி வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது. எனவே, பாட்டில் சாதாரண அறை வெப்பநிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
செயல்முறை!
முதலில் பாட்டிலின் வாய் விளிம்பு வரை நன்கு கொதிக்கும் சூடான நீரை ஊற்ற வேண்டும். பிறகு பாட்டிலின் மூடியை இருக்கமாக மூடி விடுங்கள். இப்போது பாட்டிலுக்கு உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இந்த வெப்பம் கண்ணாடியின் வழியாக ஊடுருவி, வெளியே ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் பசையை லேசாக உருகச் செய்யும். பாட்டிலை அப்படியே ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்கள் ஓரமாக வைத்து விடுங்கள்.
குறிப்பிட்ட நேரம் கழிந்த பிறகு, பாட்டிலில் உள்ள நீரை கீழே ஊற்றிவிட்டு, ஸ்டிக்கரின் ஒரு மூலையைப் பிடித்து மெதுவாக இழுங்கள். ஆச்சரியப்படும் வகையில், பேப்பர் கிழியாமல் முழு ஸ்டிக்கரும் தனியாகக் கழன்று வரும். ஒருவேளை ஆங்காங்கே லேசான பசை ஒட்டிக்கொண்டிருந்தால், பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது திரவத்தைத் தொட்டு மென்மையான துணியால் துடைத்தாலே போதும். ஸ்டிக்கர் இருந்ததற்கான சுவடே தெரியாமல் பாட்டில் கண்ணாடி போல மின்னும்.
நாம் அன்றாடம் தூக்கி எறியும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நல்லது. இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், சாஸ் பாட்டில்கள் முதல் ஊறுகாய் ஜாடிகள் வரை அனைத்தையும் கலைப்பொருளாக மாற்றலாம். இனி ஸ்டிக்கரைப் பார்த்துப் பயப்படாமல், உங்களுக்குப் பிடித்த பாட்டில்களைச் சமையலறையில் அழகுற அடுக்கி வையுங்கள். ஒரு சிறிய டம்ளர் சுடுதண்ணீர் உங்கள் வீட்டுப் பாட்டில்களின் தலையெழுத்தையே மாற்றிவிடும்.