

Bug goes into the ear: நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதோ அல்லது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதோ திடீரென காதுக்குள் ஒரு விசித்திரமான அசைவு ஏற்படுவதை உணர்ந்திருப்போம். அதுவரை அமைதியாக இருந்த உலகம், திடீரென ஒரு சிறிய எறும்பு அல்லது வண்டு காதுக்குள் நுழைந்தவுடன் தலைகீழாக மாறிவிடுகிறது.
அந்தச் சிறிய உயிரினம் உள்ளே நகரும்போது ஏற்படும் சத்தம் இடி முழக்கம் போலக் கேட்கும். அந்தத் தருணத்தில் ஏற்படும் பயம் மற்றும் பதற்றம் காரணமாக நாம் செய்யும் சில அவசரச் செயல்கள், அந்தப் பூச்சி ஏற்படுத்தும் பாதிப்பை விடப் பன்மடங்கு ஆபத்தை விளை வித்துவிடும். எனவே, இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாம் எதையெல்லாம் செய்யவேண்டும், எதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம்.
மூளைக்குப் ஆபத்து இல்லை!
காதுக்குள் பூச்சி சென்றவுடன் நம் மனதில் எழும் முதல் பயம், அது காதைக் குடைந்துகொண்டு மூளைக்குள் சென்றுவிடுமோ என்பதுதான். அல்லது அது உள்ளே சென்று முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்துவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாகப் பார்த்தால் நமது காது என்பது ஒரு முட்டுச்சந்து போன்ற அமைப்பாகும்.
வெளிப்புறக் காதின் இறுதியில் செவிப்பறை எனப்படும் மெல்லிய ஜவ்வு உள்ளது. இது காதின் உட்பகுதியையும் வெளிப்புறத்தையும் பிரிக்கிறது. எந்த ஒரு பூச்சியாலும் இந்த ஜவ்வைத் துளைத்துக்கொண்டு மூளைக்குச் செல்ல முடியாது. எனவே பூச்சி உள்ளே போனதும் ஏற்படும் தேவையற்ற கற்பனைகளையும் பயத்தையும் தூக்கி எறிவது முதல் படியாகும்.
காதுக்குள் எதையும் போடாதீர்கள்!
காதுக்குள் நமைச்சல் அல்லது அசைவு தெரிந்தவுடன், கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து அதை எடுக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஹேர்பின், சாவி, குண்டூசி அல்லது பட்ஸ் போன்றவற்றை உள்ளே விட்டுத் துழாவுவது நிலைமையை மோசமாக்கும். பூச்சி உயிருடன் இருக்கும்போது இப்படிச் செய்தால், அது பயந்துபோய் இன்னும் ஆழமாகச் செல்ல முயற்சிக்கும் அல்லது அதன் கால்களால் காதின் மென்மையான சுவர்களைக் கீறிவிடும். நாம் பயன்படுத்தும் கூர்மையான பொருட்கள் செவிப்பறையைக் கிழித்துவிட்டால், அது நிரந்தரமான காது கேளாமைக்கு வழிவகுக்கும்.
திரவங்களின் ஆபத்து!
பலர் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, பூச்சியை மூச்சுத் திணறச் செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றுவது. காதுக்குள் தண்ணீர் சென்றால், அந்தப் பூச்சி தப்பிப்பதற்காக நீரில் நீந்தத் தொடங்கும் அல்லது சிறகடித்துப் பறக்க முயற்சிக்கும். அந்தச் சமயத்தில் அது காதின் சுவர்களில் மோதித் தாங்க முடியாத வலியை உண்டாக்கும். இதைவிட ஆபத்தானது எண்ணெய் ஊற்றுவது.
அதிலும் சிலர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் காய்ச்சிக் காதுக்குள் ஊற்றுவார்கள். காதின் ஜவ்வு மிக மிக மென்மையானது. சூடான எண்ணெய் அதன் மீது பட்டால், அது வெந்துபோய் உருகிவிடும் அபாயம் உள்ளது. இது பூச்சியை விடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மருத்துவரை அணுகவும்!
பூச்சி உள்ளே சென்றுவிட்டால் பதற்றப்படாமல் அமைதியாக இருப்பதே சிறந்தது. பூச்சியின் அசைவு எரிச்சலைத் தந்தாலும், பொறுத்துக்கொண்டு உடனடியாக அருகில் உள்ள காது, மூக்கு, தொண்டை மருத்துவரைச் அணுக வேண்டும். அவர்கள் நவீனக் கருவிகள் மூலம் காதின் உட்புறத்தைப் பார்த்து, உறிஞ்சும் கருவி மூலமாகவோ அல்லது இடுக்கி மூலமாகவோ அந்தப் பூச்சியை லாவகமாக வெளியே எடுத்து விடுவார்கள். இந்தச் செயல்முறைக்கு அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். எந்த வலியும் இருக்காது.