தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இச்சமயத்தில் அனைவருக்கும் பொதுவாக எழும் சந்தேகம்தான், மழை பெய்யும்போது ஏசி பயன்படுத்தலாமா, கூடாதா? என்பது. இந்தப் பதிவில் அது சார்ந்த உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். குறிப்பாக மழை பெய்யும் போது ஏசி பயன்படுத்துவதன் நன்மை தீமைகளை முழுமையாகப் பார்க்க போகிறோம்.
இந்த கேள்விக்கு ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்ல வேண்டுமென்றால் ஆம், பயன்படுத்தலாம். கனமழையின் போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஏனெனில் வெளியே இருக்கும் ஏசி அவுட்டோர் யூனிட் கடுமையான வானிலை களையும் தாக்கு பிடிக்கும் வகையிலும், மழை உட்பட எல்லா விதமான தட்பவெட்ப சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இருப்பினும் மழை பெய்யும் போது பாதுகாப்பு சார்ந்த விஷயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கனமழை வீட்டின் உள்ளே ஈரப்பதத்தை அதிகரித்து, ஒரு சங்கடமான உணர்வை ஏற்படுத்தலாம். எனவே அச்சமயத்தில் ஏசி பயன்படுத்தினால் அறையின் வெப்பநிலை முறையாக பராமரிக்கப்பட்டு அதிகப்படியான ஈரப்பதம் குறையும்.
மழை பெய்யும் போது பெரும்பாலும் காற்றில், தூசி மற்றும் மகரந்தம் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தும் துகள்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே சரியான பில்டர்கள் பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனரை பயன்படுத்தும் போது, காற்றில் உள்ள துகள்களை ஏசி சுத்திகரித்துவிடும்.
ஒருவேளை நீங்கள் மழையில் நனைந்து உடை ஈரமாக இருந்தால், ஏர் கண்டிஷனரை பயன்படுத்தினால் அது விரைவாக ஆறிவிடும்.
மழை பெய்யும் போதும் நீங்கள் ஏசி பயன்படுத்தினால், அதிக மின்சாரப் பயன்பாட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே உங்கள் ஏசியை தேவையான போது மட்டும் பயன்படுத்தவும்.
ஒருவேளை உங்கள் ஏசி சரியாக நிறுவப்படாமலோ அல்லது முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தாலோ, தண்ணீர் அதன் உள்ளே சென்று ஏசியை பழுதாக்கலாம்.
தேவைப்படாத போது ஏசியை அதிகம் பயன்படுத்தினால், உங்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் தாக்கங்களிலும் பங்களிக்கிறது. மின்சார உற்பத்தி பெரும்பாலும் புதைப்படிவ எரிபொருட்களையே நம்பியுள்ளதால், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
எனவே கடுமையான மழை பெய்யும்போது ஏசியை திறம்பட பயன்படுத்துங்கள். ஏசியை வாங்கும்போதே ஆற்றல் திறனுள்ள அதிக தரம் வாய்ந்த ஏசி மாடல்களை தேர்ந்தெடுக்கவும். மேலும் அவ்வப்போது ஏசியை பராமரிப்பதன் மூலம், கனமழையின் போது ஏசி பழுதாவது தடுக்கப்படும்.