காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை ஓயாமல் உழைப்பவர்கள் பெண்கள். இந்தியக் குடும்பங்களில் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரியும் பெண்களும் சரி, இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களும் சரி நாள் முழுவதும் உழைக்கிறார்கள். இவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6ம் தேதி அன்று ‘Lazy Mom Day’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்க, அவர்களின் வீட்டினர் அவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து தருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை இந்தியப் பெண்களுக்கு வாய்க்குமா என்று கேட்டால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
பொதுவாக, ஒரே மாதிரி வேலைகளை திரும்பத் திரும்பச் செய்யும்போது ஒருவித சலிப்பும் அலுப்பும் ஏற்படுவது இயற்கை. இதைப் புரிந்து கொண்டு மாதம் ஒரு நாளாவது அம்மாவிற்கு அல்லது வீட்டுத் தலைவிக்கு ஓய்வு தர வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்பத் தலைவியின் பொறுப்புகளை ஏற்க முன்வரும்போது அந்த ஓய்வு அவளுக்குக் கிடைக்கும். பின்வரும் வீட்டுப் பணிகளை அவர்கள் எடுத்துச் செய்யலாம்.
சுத்தம் செய்தல்: வீட்டை தூசி தட்டி துடைத்து பெருக்கி, பாத்திரங்களைக் கழுவி, துணிகளை அலசி காயப்போடுதல் போன்ற துப்புரவுப் பணிகளை கவனித்துக் கொள்ளலாம்.
உணவு தயாரித்தல்: தனது மனைவிக்குப் பிடித்த உணவை கணவரும் பிள்ளைகளும் சேர்ந்து செய்து தரலாம். அன்றைய நாள் முழுவதும் அவள் சமைப்பதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கிற சந்தோஷத்தை அவளுக்குத் தர வேண்டும்.
குழந்தைகளை கவனித்தல்: சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களை குளிக்க வைத்தல், வீட்டுப் பாடங்களில் உதவுதல், உறக்க நேர நடைமுறைகளை நிர்வகிப்பது என்பது போன்ற செயல்களை மற்றவர்கள் செய்யலாம்.
ஓய்வெடுத்தல்: மாதத்தில் ஒரு நாள் குடும்பத் தலைவி நன்றாக தூங்கட்டுமே. சீக்கிரம் அவளை எழுப்பாமல், சில மணி நேரம் இடைவிடாத தூக்கத்தை அவள் அனுபவிக்கட்டுமே என்று விட்டுவிட வேண்டும்.
பிடித்த நிகழ்ச்சிகள்: அன்றைய நாள் அவளுக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை பார்க்க ரிமோட்டை அவள் கையில் கொடுத்து விடலாம். தனக்குப் பிடித்த தொடர்கள், திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கலாம்.
ஆச்சரியப் பரிசுகள்: தனது அம்மாவிற்கு பிடித்த பல சின்னச் சின்ன பரிசுகளை பிள்ளைகளும், மனைவிக்குப் பிடித்தமான பரிசை கணவனும் வாங்கித் தரலாம். புத்தகம், உடை, அணிகலன், பூச்செடி போன்ற சிறிய பரிசு கூட அவளை மகிழ்விக்கும்.
விளையாட்டுகள்: அன்றைய நாள் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடி மகிழலாம். பிக்னிக், பூங்கா, கோயிலுக்கு போவது என குடும்பத்துடன் சேர்ந்து வெளியில் செல்லலாம்.
பிற நாட்களில் செய்ய வேண்டியவை: தினமுமே பெண்களுக்கு, தனக்கான நேரத்தை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் புத்தகம் வாசிப்பது, கைவினைப் பொருள்களை செய்வது, தூங்குவது, நடனமாடுவது, பாட்டு பாடுவது என்று அவளுக்கு என்ன விருப்பமோ அதை தடையில்லாமல், இடையூறுகளின்றி செய்ய அனுமதிக்க வேண்டும். இவற்றால் அவள் தன்னை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.
பாராட்டுகள்: நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்ணை குடும்பத்தில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டும். இதயபூர்வமான வார்த்தைகளில் பாராட்டும்போது அவள் மனம் மகிழ்ந்து போவாள். தன் மதிப்பை அவள் உணர இது வழிவகை செய்யும்.
உதவுதல்: மாதத்தில் ஒரு நாள் மட்டும் என்றில்லாமல் தினமுமே பெண்களுக்கு வீட்டு வேலைகளில், ஆண்களும், பிள்ளைகளும் கட்டாயம் உதவ வேண்டும். அதனால் பெண்களின் உடல் நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும்.