குழந்தைகள் அடிக்கடி சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். இத்தகைய சூழலில் நெபுலைசர் போன்ற சிகிச்சை முறைகள் குழந்தைகளின் சுவாசத்தை எளிதாக்க உதவுகின்றன.
நெபுலைசர் என்பது ஒரு மருத்துவக் கருவி. இது திரவ மருந்தை மிகச் சிறிய துகள்களாக மாற்றி அதை நோயாளி சுவாசிக்கச் செய்கிறது. இந்த மிகச்சிறிய துகள்கள் நுரையீரல் வரை சென்று, அங்குள்ள அழற்சியைக் குறைத்து, சுவாசத்தை எளிதாக்குகின்றன. நெபுலைசரில் திரவ மருந்தை நிரப்பி அதை இயக்கினால், அது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை உறிஞ்சி திரவ மருந்தை மிகச் சிறிய துகள்களாக மாற்றும். பின்னர், அதை ஒரு குழாய் வழியாக வெளியேற்றும். நோயாளி இந்த குழாயில் உள்ள முகக் கவசம் அல்லது வாய் போன்ற அமைப்பு மூலம் இந்த மருந்து துகள்களை சுவாசிக்கலாம்.
குழந்தைகளுக்கு நெபுலைசர் ஏன் தேவை?
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நெபுலைசர் மூலம் வழங்கப்படும் மருந்துகள், மூச்சுக் குழாய்களைத் திறந்து சுவாசிப்பதை எளிதாக்கும். மேலும், தீவிரமான இருமலுடன் சுவாசக் கோளாறுகளுக்கு நெபுலைசர் சிறந்த சிகிச்சை முறையாகும்.
சளி காரணமாக மூச்சுக் குழாய் அடைப்பு ஏற்பட்டால், நெபுலைசர் மூலம் வழங்கப்படும் மருந்துகள் சளியை நீர்த்துப்போகச் செய்து அதை வெளியேற்ற உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழாய் அழற்சி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும் நெபுலைசர் பயன்படுத்தலாம்.
நெபுலைசர் மூலம் வழங்கப்படும் மருந்துகள் மிக விரைவாக செயல்பட்டு சுவாசத்தை எளிதாக்கும். இதன் மூலமாக மருந்துகள் நேரடியாக நுரையீரலை அடைவதால் மருந்தின் திறன் அதிகரிக்கிறது. நெபுலைசர் மூலம் வழங்கப்படும் மருந்துகள், வாய் வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை விட குறைந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது தவிர, நெபுலைசர் பயன்படுத்துவது மிகவும் எளிது. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு நெபுலைசரை எப்படி பயன்படுத்துவது?
குழந்தைகளுக்கு நெபுலைசரை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைக்கு ஏற்ற அளவிலான சுவாசிக்கும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். மருந்து முழுவதும் துகள்களாக மாற்றப்படும் வரை நெபுலைசரை இயக்க வேண்டும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் நெபுலைசரை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும்.
சில நேரங்களில் நெபுலைசர் பயன்படுத்துவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, நெபுலைசர் பயன்படுத்திய பிறகு குழந்தைக்கு தொண்டை வறட்சி ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு வாய் அழற்சி, தோல் அரிப்பு போன்றவை அரிதாக ஏற்படும் வாய்ப்புள்ளது.
நெபுலைசர் என்பது குழந்தைகளின் சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு பாதுகாப்பான வழியாகும். இருப்பினும், நெபுலைசலை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் முக்கியம். இதை சரியான முறையில் பயன்படுத்தினால் குழந்தைகளின் சுவாசப் பிரச்சனையை குணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம்.