உங்கள் குழந்தை பற்றிய புகழ்ச்சி மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதை அறிவீர்களா?

குழந்தை பற்றிய புகழ்ச்சி
குழந்தை பற்றிய புகழ்ச்சி
Published on

‘எனது மகன் யார் தெரியுமா? எனது மகள் என்ன செய்தாள் தெரியுமா?’ என்று ஆரம்பித்து உங்கள் குழந்தையை பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் பல விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளின் சின்னச் சின்ன செயல்பாடுகளை அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களாக எடுத்து பேஸ்புக்கில், வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்துகொள்ளும் பெற்றோர் எண்ணிக்கை இன்று அதிகம்.

10 வயது மகன் பைக் ஓட்டினான், 7 வயது மகள் டான்ஸ் ஆடியதைக் கண்டு அரங்கமே அதிர கைத்தட்டல் என்று வாய்க்கு வாய் குழந்தைகளை புகழும் பெற்றோர், அதனைக் கேட்கின்ற மற்றவர்கள் புகழப்படுகின்ற குழந்தைகளின் நிலையும் கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். பிஞ்சு குழந்தையை பாராகிளைடில் தனியே பறக்க வைத்து மற்றவர்களை பதற வைத்த பெற்றோரையும் இந்த உலகம் மறக்கவில்லை. குழந்தைகளை மற்றவர்கள் முன்னிலையில் புகழத் தொடங்கும் பெற்றோர் சில விஷயங்களை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

தாய், தந்தைக்கு உள்ள போட்டி மனப்பான்மை, தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் குழந்தைகளை சாதிக்க வேண்டும் என்ற மனோபாவமும் இதற்கும் காரணம் ஆகும். அதேபோன்று சொந்த வாழ்க்கையில் பல சாதனைகளை எளிதில் எட்டிப்பிடித்தவர்களும் தங்கள் குழந்தைகளும் அதுபோன்ற நிலைக்கு வரவேண்டும் என்ற அதிக ஆர்வம் இதற்குக் காரணம்.

போட்டிகள் நிறைந்த உலகம் இது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. எதற்கும் போட்டி, தேர்வு என்ற நிலைக்கு மாறிவிட்ட நிலையில் குழந்தைகளும் அதில் பெற்றோரால் திணிக்கப்படுகின்றனர். தாங்கள் பெருமை பேசிக்கொள்ள வாய்ப்பு வேண்டும் என்பதற்காக குழந்தைகளை இரையாக்கி வருகின்றனர்.

குழந்தைகளின் வெற்றியை சில பெற்றோர் தங்களது திறமை என்றும், தங்களது குடும்பத்தின் தன்மை என்றும் கூறி ஆனந்தப்படுகின்றனர். சமூகத்தில் மேல்தட்டில் உள்ள மக்களிடம் இந்த நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பெற்றோரால் அதிகமாகப் புகழப்படுகின்ற குழந்தைகள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை கடந்து வர மிகவும் கஷ்டப்படுவர். தோல்வி பயம் காரணமாக அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளத் தவறுவர்.

இதையும் படியுங்கள்:
காது குத்திக்கொள்வதன் நன்மைகள் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன தெரியுமா?
குழந்தை பற்றிய புகழ்ச்சி

குழந்தைகளின் வெற்றியை மட்டும் கொண்டாடுகின்ற பெற்றோர் அவர்களின் சிறு சிறு முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். பெற்றோரை போன்று தானே பிள்ளைகளும் இருப்பர் என்று பெற்றோர் கூறினால் குழந்தைகள் தங்களின் தவறுகளை மறைக்கத் தொடங்குவர்.

தனது குழந்தைகளின் உயர்வை மற்றவர்களிடம் புகழும்போது அதனைக் கேட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒப்பீடு செய்வது பல எதிர்வினைகளை உருவாக்குகிறது. தனது மகள் ஓட்டபந்தயத்தில் முதலிடம் வந்தாள் என்று கேட்கின்ற ஊனமுற்ற குழந்தையின் தாயாரின் நிலையை உணர வேண்டும். அதுவே குழந்தை பாக்கியம் இல்லாத பெற்றோர் எனில் அவர்களின் மனம் வேதனைப்படும்.

குழந்தைகளின் விருப்பங்களும், செயல்பாடுகளும் அவர்களுடன் நேரம் செலவிடுகின்ற பெற்றோருக்கு மட்டுமே புரிய தொடங்கும். ஒவ்வொரு குழந்தையின் வெற்றிக்கு பின்னாலும் பலர் இருப்பர். அவரது நண்பர்கள், ஆசிரியர், குழந்தைகளின் தனிப்பட்ட முயற்சி போன்றவை இதற்குக் காரணம். அவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேசுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com