குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள், தம்பதிகளாக இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்நிலையில், திருமணம் ஆகாத தனிநபர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியுமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கான விடையைத் தருகிறது இந்தப் பதிவு.
இன்றைய நவீன யுகத்தில் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனைத் தீர்க்க தம்பதிகள் பலரும் நவீன மருத்துவத்தை நாடிச் செல்கின்றனர். சிலர் குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது ஏக்கத்தை தீர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக '2016 மாதிரி குழந்தை வளர்ப்பு' வழிகாட்டுதலின் படி திருமணம் முடிந்து குழந்தையில்லாத தம்பதிகள் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கூட சில நிபந்தனைகள் உண்டு.
திருமணம் ஆகாத ஆணோ அல்லது பெண்ணோ குழந்தைகளைத் தத்தெடுக்கும் அனுமதி இதுவரையில் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், இவர்களும் இனி குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
திருமணத்தில் விருப்பம் இல்லாத நபர்களும், தனியாக வாழும் நபர்களும் வாழ்வில் தனக்கென ஒரு பிடிப்பு வேண்டும் என நினைப்பதுண்டு. அவர்களுக்கு முதல் தேர்வாக இருப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது தான். இருப்பினும் சட்டத்தில் இதற்கு இடமில்லாத சூழல் இருந்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் அனுமதி பெற்று சட்டத்தை திருத்தியுள்ளது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம். இதன்படி '2024 மாதிரி குழந்தை வளர்ப்பு' சட்டத்தின் வழிகாட்டுதலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திருமணம் ஆகாதவர், விவகாரத்து ஆனவர், இணையை இழந்தவர் மற்றும் திருமணம் ஆகியும் தனியாக பிரிந்து வாழ்பவர்களும் இனி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க முடியும்.
வழிகாட்டுதல்கள்:
35 முதல் 60 வயதுடைய தனிநபர்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து 6 வயதுடைய குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில் 2 ஆண்டுகளுக்கு குழந்தைப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தான் தத்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருமணம் ஆகாத ஆண்கள், ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுத்துக் கொள்ள முடியும். திருமணம் ஆகாத பெண்கள் ஆண் மற்றும் பெண் என இரு பாலின குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொள்ளலாம்.
திருமணம் ஆகி குழந்தை இருக்கும் தம்பதிகள் கூட குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ள இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது. இதன்படி, தம்பதிகள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சுமுகமான இல்லற வாழ்வில் இருக்கின்றனர் என்பதற்கான சாட்சியை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://wcd.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகள், உரிய ஆவணங்களை இந்த இணையத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் இந்த முயற்சியின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் எண்ணற்ற குழந்தைகளுக்கு அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.