
வரதட்சணை என்கிற இந்த சம்பிரதாயத்தை, ஆண்டாண்டு காலமாக இந்தியா முழுவதும் எல்லா மதத்தினரும் பின்பற்றுகின்றனர். எத்தனையோ வளர்ச்சியில் இந்தியா முன்னிலையில் இருந்த போதும் இந்த வரதட்சணை கேட்கும்/கொடுக்கும் வழக்கம் மட்டும் கொஞ்சம் கூட மாறவில்லை.
வரதட்சணை என்றால் திருமணத்தின்போது பெண் வீட்டார் வரப்போகும் மாப்பிள்ளைக்கு செய்யும் சீர் ஆகும்.
அவரவர் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு தங்கம், பணம், பாத்திரம், வெள்ளி, கார், வீடு என தருவார்கள். வசதி இல்லாதவர்கள் கடனை வாங்கியாவது முடிந்த பொருட்களை வரதட்சணையாகத் தருவார்கள். காலம் காலமாக இதுதான் நடக்கிறது.
நாம் ஏன் இந்த வரதட்சணை என்ற சொல்லிற்கு ஒரு புதிய இலக்கணத்தை கொடுக்கக்கூடாது? மாற்றலாமே? இல்லையா....
என் புதிய இலக்கணத்தின்படி வரதட்சணை என்றால் புதியதாக வரும் ஒருவருக்கு கொடுக்கப்படும் தட்சணை. அந்த தட்சணை பணமாகவோ பொருளாகவோ இருக்க கூடாது. அது ஆத்மார்த்தமாக மனதிலிருந்து அன்போடும் பாசத்தோடும் கொடுக்கப்படும் ஒரு உறுதி மொழியாக இருக்க வேண்டும்.
தட்சணை என்றாலே பயபக்தியோடு தானே கொடுக்கவேண்டும்? அப்போதுதான் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்குமே நன்மை கிடைக்கும்.
சரி இப்ப எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாமா...
மணமகன் வரப்போகும் மனைவிக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணை:
கணவன் என்றால் மனைவிக்கு கண்ணாகவும், தன் கண்ணில் அவளை வைத்து காப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று பொருள்.
கண் + காப்பவன் = கணவன்.
ஆகவே ஒரு ஆண்மகன் தனக்கு வரப் போகும் மனைவியிடம், “நான் இனி உன் கண்ணாக இருப்பேன்; உன்னை உன் பெற்றோர்கள் பராமரித்தது போல நானும் அன்பையும் பாசத்தையும் கலந்து உன்னை அரவணைப்பேன்; உனக்கு நல்ல கணவராகவும், நண்பனாகவும் இருப்பேன்” என்ற உறுதி மொழியை வரதட்சணையாக எல்லோர் முன்னிலையிலும் தர வேண்டும்.
மணமகள் வரப் போகும் கணவருக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணை:
மனைவி என்றால், தான் புகுந்த மனையின் விளக்காகத் திகழ வேண்டும் என்று பொருள்.
மனை + விளக்கு = மனைவி
ஆகவே, ஒரு பெண் தனக்கு வரப் போகும் கணவரிடம், “நான் என் புகுந்த வீட்டின் விளக்காக எப்போதும் புன்முறுவலோடும், அனுசரணையோடும் இருப்பேன்; ஒருபோதும் என் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த நற்பண்புகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன்; உங்களுடைய சுக துக்கங்களில் பங்களித்து எப்போதும் உங்களுக்கும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துணையாக இருப்பேன்” என்ற உறுதி மொழியை வரதட்சணையாக எல்லோர் முன்னிலையிலும் தர வேண்டும்.
இரண்டு பெற்றோர்களுக்கும் இணைந்து மணமக்களுக்கு தர வேண்டிய வரதட்சணை:
இரண்டு பெற்றோர்களும் இணைந்து மணமகனுக்கும் மணமகளுக்கும், “இந்த புதிய நாளிலே இருவரும் இணைந்த நாளிலே, நீங்கள் இருவரும் பதினாறு செல்வங்களையும் பெற்று, சந்ததிகளை உருவாக்கி வாழையடி வாழையாக சந்தோஷமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” என்ற ஆசீர்வாதத்தை வரதட்சணையாக தர வேண்டும்.
மணமக்கள் இருவரும் இணைந்து பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணை:
இருவரும் இணைந்து பெற்றோர்களை நமஸ்கரித்து கொண்டு, “நாங்கள் இருவரும் சேர்ந்து இரு குடும்பத்தினருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவோம். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் இரண்டு குடும்பத்திற்கும் மனஸ்தாபமோ, களங்கமோ வராமல் பார்த்து கொள்வோம். உங்கள் நால்வரையும் எங்களால் முடிந்தவரை சிறப்பாக நன்றாக பார்த்து கொள்வோம்”என்று கூறி தட்சணை தர வேண்டும்.
நம்மிடம் உழைப்பும் தைரியமும் இருந்தால் நமக்கு தேவையான பொருட்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். ஆனால் நமக்கு தேவையான நிம்மதியையும் அமைதியையும் இன்பத்தையும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஆகவே விலை மதிப்பில்லாத அவைகளை வரதட்சணையாக கொடுப்போம் மற்றும் பெறுவோம்.