
ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்கக்கூடாது. பெண்களிடம் வயதைக் கேட்கக்கூடாது என்று பொதுவாக சொல்வார்கள். பொதுவாகவே ஒரு ஆணிடம் சம்பளத்தை கேட்டாலோ, பெண்ணிடம் வயதைக் கேட்டாலோ அவர்கள் உடனடியாக பதில் தரமாட்டார்கள். சிறிது யோசனையில் மூழ்குவார்கள்.
அந்த கேள்வி அவர்களுக்கு அதிக சங்கடத்தை தரும். ஒரு பெண் தன் குடும்பத்தை வளர்க்க தன் வயதை பொருட்படுத்தாமல் இருக்கிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வயதைக் கேட்பது அவளுடைய அர்ப்பணிப்பு உணர்வை அவமதிப்பதாகும்.
ஒரு ஆண் தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த தன்னையே ஓடாக்கி உழைக்கிறான். அவனது வருமானம் அதிகமோ, குறைவோ அதை கேட்கும்போது அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு ஆணின் வருமானத்தைக் கேட்பது அவனது உழைப்பை அவமதிப்பதாகும்.
இந்தக் கேள்விகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றன. மேலும் அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுகின்றன. ஒரு பெண்ணின் வயதையும், ஆணின் வருமானத்தையும் கேட்பது சரியானது அல்ல. இந்தக் கேள்விக்கான பதில், தனிநபரின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றுடன் தொடர்புடையது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையானது எப்போதும் தன் குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதில் உள்ளது. பெண் தன் கணவனை புரிந்துகொள்வதோடு, அவனது குடும்பத்தினரையும் புரிந்துக்கொள்ள வேண்டும். கணவன் குடும்பத்தின் பொறுப்புகளையும் தன் குடும்பத்தைபோல நினைத்து கடமையாற்ற வேண்டும்.
குழந்தையை கருவில் சுமக்கும் அவள், குழந்தையின் ஆரோக்கியம் மீதான கவனிப்பில் தன் அழகை பராமரிப்பதில்லை. குழந்தை வளர வளர அதை பற்றிய சிந்தனையில், அவர்களின் வளர்ச்சியிலும், அவர்களை சரியான விதத்தில் வளர்க்கும் பொறுப்பு அனைத்தும் பெண் தலையில் வந்துவிடுகிறது.
நவநாகரீக பெண்ணாக அலுவலகம் சென்றாலும் கூட, வீட்டிற்கு வந்து வேலையும் செய்யவேண்டும். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் சொந்த ஆசைகள் பலவற்றையும் பெண் ஒதுக்கி வைக்கிறாள். அவளுடைய அடையாளம் அவளுடைய குடும்பப் பொறுப்புகளை சார்ந்து உள்ளது. அவளுடைய உண்மையான திருப்தி, குடும்பத்தின் மகிழ்ச்சியில் உள்ளது.
இதனால் பெண்கள் ஒரு கட்டத்தில் தங்கள் இளமை மீதோ, அழகு மீதோ கவனம் செலுத்துவதில்லை. வயதை வைத்து ஒரு பெண்ணின் திருமண நிலை, அவளது அழகை தீர்மானிக்க முயலுவதால் பல பெண்கள் தங்கள் உண்மையான வயதை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் பெண்களின் வயது இன்னும் சமூகத்தில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வியாக உள்ளது.
ஒரு ஆண் தன் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கடுமையான உழைக்கிறான். முழு குடும்பத்தின் எதிர்காலமும் அவனது வருமானத்தைப் எதிர்பார்த்து உள்ளது. ஆண் தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த அவன் கடுமையாக உழைத்து செல்வத்தினை சேர்க்கிறான். இதில் ஆணின் தியாகம் அதிகளவில் உள்ளது. அவனது உழைப்பு சுயநலமின்றி அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது.
சமூகத்தில், ஒரு மனிதனின் கௌரவமும் சமூக அந்தஸ்தும் அவனது வருமானத்தால் வைத்து மதிக்கப்படுகிறது. ஆணின் வருமானத்தை மற்றவர்கள் கேட்பது "அவனுடன் தங்களின் பொருளாதார நிலையை ஒப்பிட்டு கொள்ளதான். தங்களை விட வருமானம் குறைவாக இருந்தால், அந்த ஆணை குறைத்து மதிப்பிடவும், வருமானம் அதிகமாக இருந்தால் அவர் மீது பொறாமைப்படவும்" செய்கின்றனர். வருமானம் குறைவோ அதிகமோ அதை வைத்து அவதூறு செய்யவே பெரும்பாலும் இந்த கேள்வியை கேட்கின்றனர்.
குடும்பத்திற்காக ஆண்களும் பெண்களும் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் வயதைக் கேட்பதோ அல்லது ஆணின் வருமானத்தைப் பற்றி கேட்பதோ அவர்களின் பங்களிப்புகளை அவமரியாதை செய்வதைபோல ஆகிறது. ஆகவே இதுபோன்ற கேள்விகளை தவிர்த்துவிடுங்கள்.