

நமது சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரங்களில் மிகவும் அழகானது, விலை உயர்ந்தது என்றால் அது எனாமல் பூசப்பட்ட காஸ்ட் அயர்ன் பாத்திரங்கள்தான். பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், சமைப்பதற்கு ஆரோக்கியமாகவும் இருப்பதால் பலரும் இதை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதிகப்படியான வெப்பம் மற்றும் எண்ணெய் சிதறல்கள் காரணமாக இந்தப் பாத்திரங்களின் வெளிப்புறத்தில் கரிய நிறத் தீக்கறைகள் ஏற்படுவது வழக்கம்.
உள்ளே அடிபிடித்தால் எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம், ஆனால் வெளியே ஏற்படும் இந்தத் தீக்கறைகளை நீக்குவது அத்தனை சுலபமல்ல. பலரும் அறியாமல் செய்யும் தவறான சுத்தம் செய்யும் முறைகளால் பாத்திரத்தின் எனாமல் பூச்சு சேதமடைகிறது. இந்தப் பதிவில் உங்கள் பாத்திரங்களைப் பாதுகாக்கச் சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை!
முதலில் எதைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். எனாமல் பூச்சு என்பது உறுதியானது போலத் தெரிந்தாலும், அது அடிப்படையில் கண்ணாடித் துகள்களால் ஆனது. எனவே, இரும்பு நார் அல்லது கூர்மையான உலோகக் கரண்டிகளைக் கொண்டு சுரண்டுவது பாத்திரத்தின் மேல்பூச்சைக் கீறிவிடும். ஒருமுறை கீறல் விழுந்துவிட்டால், அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் அழுக்கு சேர்வதைத் தவிர்க்க முடியாது. அதேபோலக் கடினமான ரசாயனப் பொடிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும்.
கறைகளை நீக்கும் முறை!
சாதாரண கறையாக இருந்தால், முதலில் பாத்திரத்தை முழுமையாக ஆறவிட வேண்டும். சூடாக இருக்கும்போது குளிர்ந்த நீரை ஊற்றுவது பாத்திரத்தில் விரிசலை உண்டாக்கும். பாத்திரம் குளிர்ந்த பிறகு, வெது வெதுப்பான நீர் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் கொண்டு மென்மையான ஸ்பாஞ்ச் மூலம் தேய்க்கலாம். அப்படியும் போகவில்லை என்றால், சமையல் சோடா, நீர் கலந்து ஒரு பசை போலச் செய்து, கறை உள்ள இடங்களில் தடவி அரைமணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் மெதுவாகத் தேய்த்தால் கறைகள் மறைந்துவிடும்.
மிகவும் மோசமான, நீண்ட நாட்களாகப் படிந்திருக்கும் கறைகளுக்குச் சமையல் சோடாவுடன் வினிகரைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். இவை இரண்டும் சேரும்போது ஏற்படும் வேதியியல் மாற்றம் அழுக்கை நெகிழச் செய்யும். அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு கலவையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தேய்க்கலாம். இது எதற்கும் மசியாத கறைகளுக்கு, எனாமல் பாதுகாப்பான பிரத்யேக கிளீனர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்லதல்ல.
கறைகளை நீக்குவதை விட, அது வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம். எனாமல் பாத்திரங்களில் சமைக்கும்போது அடுப்பின் தீயை எப்போதும் மிதமான அளவில் அல்லது குறைவாகவே வைக்க வேண்டும். தீச்சுடர் பாத்திரத்தின் அடிப்பாகத்தைத் தாண்டி மேலே வந்தால், வெளிப்புறச் சுவர்கள் கருகிவிடும். அதேபோல, டிஷ்வாஷரைப் பயன்படுத்துவதை விட, கைகளால் மென்மையாகக் கழுவுவதே இந்தப் பாத்திரங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரும்.
விலை உயர்ந்த இந்தப் பாத்திரங்களைச் சரியான முறையில் பராமரித்தால் தலைமுறைக்கும் உழைக்கும். பாத்திரங்களைக் கழுவிய பின் ஈரம் இல்லாமல் துடைத்து, ஒன்றன் மீது ஒன்று உரசாதவாறு அடுக்க வேண்டும். இவற்றை சிறிது நேரம் ஒதுக்கிப் பராமரித்தால், சமையல் அறையின் அழகும் கூடும், பாத்திரத்தின் ஆயுளும் நீடிக்கும்.