
நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும் பச்சோந்தி மனிதர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அது சுயநலமா? இல்லை, தற்பாதுகாப்பா?
சிலர் குணம் வெளியே வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பலருக்கு தெரியாது. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக சிலருடைய குணம் பகிரங்கமாக வெளிப்படுத்தபடும். இதில் பச்சோந்தி குணம் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது, நாம் வாழ நமக்கு ஒரு தகவமைப்பு.
தன்னை காப்பாற்றக் கூடிய சூழ்நிலைக்கோ அல்லது தனக்கு ஆதாயம் தரக்கூடிய சூழ்நிலைக்கோ ஏற்றவாறு அடிக்கடி மாற்றி கொள்ளும் மனிதர்களைத்தான் நாம் பச்சோந்தி என்று அழைக்கிறோம்.
சற்று சிந்தித்து பார்த்தால் ஒரு பக்கம் தவறாக இருந்தாலும் மறுபக்கம் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.
அவ்வாறு அடிக்கடி மாறுவதால் தனக்கு சந்தோஷமோ அல்லது சாந்தியோ கிடைக்கும் என்று ஒரு மனிதன் நம்பும் பட்சத்தில் அவனைப் பொறுத்த வரையில் அது தவறு இல்லைதானே?
பச்சோந்தி தன்னைத்தானே காப்பாற்றி கொள்வதற்காக தான் இருக்கும் இடமோ அல்லது பொருளுக்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக் கொள்கிறது. இது அதனுடைய இயற்கை தகவமைப்பு.
பல ஆறுகள் ஒன்றாக கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதியில் நேற்றைய தினம் நாம் குளித்த தண்ணீர் இப்போது இருக்காது; இன்று குளிக்கும் தண்ணீர் நாளை இருக்காது. ஏனெனில் அந்த தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்.
அதைப்போல மனிதர்கள் அனைவருக்கும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான எண்ணங்களும், செயல்களும், இருக்க முடியாது. அதை நாம் எதிர்பார்ப்பதும் தவறு.
சிலருக்கு சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப தனது எண்ணங்களை தனக்கு சாதகமான முறையில் வார்த்தைகளாக பிரயோகிக்கவும் தெரியாது. எப்படி நடந்து கொள்வது என்பதும் தெரியாது. இதனால் அவர்கள் பொங்கி வரும் உணர்ச்சி கொந்தளிப்பின் செயல்களில் தடுமாறுகிறார்கள். சிலருக்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ எப்படி பிரயோகிக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். அந்த வகையை கையாண்டு அவர்கள் தேவையானதை பெற்றுக் கொள்கிறார்கள், அவ்வளவு தான்!!
இப்படி பட்ட குணம் உள்ள ஒரு மனிதரை நாம் சந்தித்தால், அந்த நபர் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்புகள், செயல்கள், இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, நமது நிலைப்பாடுகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அவருடைய சூழ்நிலையில் இருந்தால் நாமும் கூட அப்படித்தான் நடந்து கொண்டிருப்போம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அல்லது சகஜமாக எடுத்து கொண்டு மேற்படி செல்ல வேண்டும்.
ஒரு வேண்டுகோள்! ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் போது கண்டிப்பாக அவருக்கு தற்காப்போ அல்லது பதவி உயர்வோ அல்லது எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால், அதனால் அடுத்தவர்களுக்கு தீங்கோ அல்லது நஷ்டமோ அல்லது மன வருத்தமோ நேரிடாதபடி செயல்பட வேண்டும்.
என்னை பொறுத்தவரை பச்சோந்தி மனிதர்கள் என்று ஒருவரை நாம் குறிப்பிடுவது சரியானது அல்ல. அவர்களின் மனநிலை, சூழ்நிலை, சிந்தனைக்கு ஏற்ப அப்படி நடந்து கொள்கிறார்கள் என்றே நாம் எண்ணவேண்டும்.
நாளுக்கு நாள் போட்டியும் பொறாமையும் நிறைந்த இவ்வுலகத்தில் எல்லோரும் அவர்களின் சூழ்நிலைக்கேற்றவாறு தத்தளிக்கிறார்கள். எப்படியாவது உயரந்த நிலையை அடைய வேண்டும் என்ற கருத்தே எல்லோரின் மனதிலும் ஆழமாக இருக்கிறது. சிலர் நிலையை மாற்றிக் கொள்ளாமலே இலக்கை அடைகிறார்கள். சிலர் ஆளுக்கு ஏற்றவாறு ஆசனத்தை போட்டு லாபத்தை பெறுகிறார்கள்.
இப்படிப் பட்டவர்களை பார்த்து நமக்கு நாமே தேவை இல்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதற்கு பதிலாக ஏதோ ஒரு நிர்பந்தத்தினால் அவ்வாறு நடந்திருக்கும் என்று எண்ணி செல்வதுதான் உத்தமம். சரிதானே?