

மனைவி கருவுற்றிருக்கும்போது, கணவன், மனைவி இருவருக்குமே பிரசவ நேரம் நெருங்கும்போது ஒருவித பதற்றமும், பரபரப்பும் இருக்கும். குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கும் இவர்கள், ‘ஒரு புதிய வாழ்க்கையை குழந்தையுடன் தொடங்கப்போகிறோம்’ என்பதை மறந்து விடுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் பெற்றோராக தங்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
1. வீட்டை தயார்ப்படுத்துதல்: பிரசவம் முடிந்து குழந்தையுடன் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால் கடைகளில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான நேரம் குறைவாக இருக்கும். முக்கியமான மளிகைப் பொருட்களை, குறிப்பாக சோப்பு, டிடர்ஜெண்டு போன்றவற்றை பிரசவத்திற்கு முன்பே வாங்கி வைத்து விடுவது உங்களுக்கும் குழந்தைக்கும் சௌகரியமாக இருக்கும்.
2. உணவுகள் தயார் செய்து வைப்பது: குழந்தை பிறந்தவுடன் குழந்தையைப் பார்க்க நண்பர்களும், உறவினர்களும் வீட்டுக்கு வருவார்கள். அதோடு, குழந்தையைப் பார்த்துக்கொள்ளவே உங்களுக்கும் நேரம் சரியாக இருக்கும் என்பதால் வீட்டுக்கு வருபவர்களுக்கும், உங்களுக்கும் சமைப்பது சவாலான விஷயமாக இருக்கும். அதற்காக முன்கூட்டியே மசாலாக்கள், கட்டிங் வெஜிடபிள்ஸ், கிரேவிஸ் போன்றவற்றை ஃப்ரீசரில் சேமித்து வைத்துக்கொள்வது சமையலறையில் செலவிடும் நேரத்தை சிறிதளவு குறைத்து குழந்தையுடனும், உறவினர்களுடனும் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தும்.
3. ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்: பிரசவத்திற்குப் பிறகு சில நாட்கள் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் மாறி மாறி ஓட வேண்டிய நிலை இருக்கும். அப்போது கொஞ்சம் காற்றோட்டமான, சௌகரியமான இடத்தில் அமர்ந்து உங்களை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். படுக்கையறை சௌகரியமாக இருந்தாலும் நீங்கள் ஹாலில் அமரும் இடத்தில் சின்ன டேபிளில் ஸ்நாக்ஸ் பாக்ஸ், வாட்டர் பாட்டில், வலி நிவாரணி மருந்து பெட்டிகள் ஆகியவை இருக்குமாறு பிரசவ நேரத்திற்கு முன்பு தயார்படுத்தி வைத்திருங்கள். இதனால் டென்ஷன் குறைந்து ஒரே இடத்தில் வேண்டிய பொருட்களை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
4. வேலைகளைப் பிரித்துக் கொள்வது: பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, இருவரும் அமர்ந்து தங்களுக்கான வேலைகளையும், அதற்கான நேரத்தையும் சரியாகத் திட்டமிட்டு பிரித்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இரவில் குழந்தைகளை எப்போது யார் பார்த்துக்கொள்வது, லாண்டரி துணிகளை கொடுத்து வாங்குவது என முக்கியமான வேலைகளைப் பிரித்து இருவரும் செய்யும்போது, மற்ற வேலைகளை மனச்சோர்வு இல்லாமல் எளிதாகக் கையாள முடியும்.
5. பிணைப்பை அதிகரித்தல்: தம்பதிகளின் முழு கவனமும் பிரசவம் நெருங்க நெருங்க குழந்தைகளைப் பற்றியதாகவே இருக்கும். குழந்தை பிறந்த பிறகும் குழந்தையோடுதான் முழு நேரமும் செலவிட முடியும். ஆகவே, தம்பதிகளின் பிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகப்படுத்த பிரசவத்திற்கு முன்பு தினமும் மாலையில் ஒரு மணி நேரம் இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி நேரத்தை செலவிடுவது இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
பிரசவத்திற்கு முன்பு பிரசவ நேரம் நெருங்க நெருங்க கணவன், மனைவி இருவருக்கும் பதற்றமும் மன அழுத்தமும் இல்லாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திட்டமிடுதலையும், அன்பையும் பரிமாறிக் கொண்டால் பிரசவ காலம் மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லா காலமுமே இனிமையானதாக இருக்கும்.
