

பல பேருக்கு தங்களது வேலை நேரம் போக மீத நேரம் கிடைக்கும்போது அவர்கள் தேடுவது தங்கள் மொபைல் போனாகத்தானிருக்கும். இலக்கில்லாமல் எவ்வளவு நேரம் போனில் மூழ்கி இருந்தாலும் கடைசியில் வெறுமைதான் மிஞ்சும். நேரம் வீணாகக் கழிந்ததும் புரியும். இவர்களில் சிலர் போனை தவிர்த்து, அமைதியாக சில உபயோகமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அது அவர்களுக்கு உள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்க உதவும். அப்படி ஏழு வகையான செயல்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. புத்தகம் படிப்பது: புத்தகத்தில் ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ படிக்கையில் நம் மனம் அதனோடு ஆழ்ந்து ஒன்றிப்போய், மனதிற்குள் ஒருவித அமைதி கிடைக்கும். சோசியல் மீடியாவில் உள்ளது போல் எவரது கருத்துக்கும் நாம் பின்னூட்டம் தர வேண்டிய அவசியமிருக்காது. நாமும் எந்தவிதமான பதிவு போடவோ, ஒப்பீடு செய்யவோ தேவையில்லை. புத்தகத்திலுள்ள விஷயங்களை உள்வாங்கி நல்லவற்றை பின்பற்றினாலே வாழ்வு சிறக்கும்.
2. தோட்ட வேலை செய்வது: சிறிய அளவிலான தோட்டம் வைத்துப் பராமரிப்பதும் உங்கள் பொறுமையை வளர்க்க உதவும். மண்ணை கைகளால் கிளறி விதை போட்டு, அதிலிருந்து முளைக்கும் செடியின் இலைகள், பூ, காய் மற்றும் விதைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி உங்கள் மனதை சென்றடையும் முன் உடல் அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விடும்.
3. பெயிண்டிங்: ஓர் உருவத்தை வரைவதற்கான ஸ்கெட்ச் போடுவது அல்லது உருவத்திற்கு வண்ணப் பெயிண்ட் பூசுவது போன்ற செயல்கள் ஒருவரது ஆழ்மனது வரை சென்று அமைதி தரும். ஈடுபாட்டுடன் அந்தச் செயலை நாம் செய்கையில் அதை முழுவதும் முடிக்கிறோமோ இல்லையோ, பிறரிடம் காட்டி பெருமைபட வேண்டிய அவசியம் எதுவுமின்றி, அந்தச் செயல் தரும் மகிழ்ச்சி அலாதியான அனுபவம் தரும்.
4. சமையல் செய்தல்: சமையல் தரும் சந்தோஷம் அளப்பரியது. நம் கையால் சமைத்து பிளேட்டில் வைத்து பிறர் உண்ணக் கொடுக்கும்போது, அது அவர்களின் சுவை அரும்புகளை மட்டும் திருப்திப்படுத்துவதில்லை. உயிர் சத்தை அளித்து வளமுடன் வாழவும் வழி வகுக்கும். மெக்ஸிகன், இத்தாலியன் என வெவ்வேறு நாட்டு உணவுகளையும் விதவிதமான சுவையில் சமைத்து அசத்தும்போது நம் திறமையின் வெளிப்பாடு வேற லெவல் என்றாகிவிடும்.
5. தனிமையில் நடைப்பயிற்சி: பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் பயணித்துக் கொண்டிருப்பது பயம். பயத்திலிருந்து விடுபடவே நாம் எப்பவும் ஒரு துணையைத் தேடுகிறோம். நடைப்பயிற்சி செல்லும்போது தனியாக செல்வதே ஆரோக்கியம். உலகம் இயங்கும் ஓசை, தலைக்கு மேலிருக்கும் ஆகாயம், ரெஸ்டாரண்டில் தயாரிக்கும் ஓர் உணவின் மணம் என பலவற்றையும் ரசித்து அனுபவித்துக் கொண்டே செல்லலாம். குறிப்பாக, நம் மனதிற்குள் ஓடும் எண்ண ஓட்டங்களைக் கவனிப்பது சுவாரஸ்யம்.
6. புதிர்களை விடுவித்தல் மற்றும் நுண்கலை பயில்தல்: உங்கள் கவனத்தை நிகழ் காலத்திற்கு திருப்ப உதவுபவை புதிர்களை விடுவித்தல் மற்றும் நுண்கலைகள். நம் கைகள், ஒரு தலையணை உறை மீது எம்பிராய்டரி போட்டுக்கொண்டிருக்கும்போது நம் மனம் அமைதியுற்றிருக்கும். நாம் வரையும் டிசைன், நூலின் நிறம், துணியின் தன்மை போன்றவற்றில் மனம் லயித்திருக்கும். சோசியல் மீடியா நம் கவனத்தை திசை திருப்பும். ஆனால், நுண் கலைகள் நம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.
7. டைரி எழுதுதல்: ஒரு நாள் முடிந்து நாம் தூங்கச் செல்லும்போது அன்றைய பத்து வகையான நிகழ்வுகள் நம் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றை நாம் டைரியில் எழுதி வைத்துவிட்டோமானால் மனம் தெளிவாகும். நிகழ்வுகள் முறையான வரிசையில் எழுத்துருவு பெற்றிருக்கும். நமது கவலைகள் எழுத்துருவாக்கப்பட்ட பின் அவை வலுவற்றுப் போய்விடும். தினசரி டைரி எழுத வேண்டுமென்ற அவசியம் இல்லை. தோன்றும்போது கிறுக்கல்களாக எழுதிவிடுவது கூட நம் மனநிலை மாற்றத்திற்கு உதவி புரியும்.
நீங்களும் மேற்கூறிய செயல்களுக்காக தினமும் சிறிது நேரம் செலவழித்து உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.