மனிதர்களிலும் உறவுகளிலும் பலர் பலவித குணங்களைக் கொண்டவர்களாக இருப்பாா்கள். சிலர் வெகுளியாகவே இருப்பாா்கள், சிலர் வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக இருப்பாா்கள், சிலர் அமைதியாக இருப்பாா்கள், சிலரோ அமைதியாக இருப்பவர்களைப்போல நடித்து நயவஞ்சகமாய் பழகுவாா்கள்.
தூங்கும் ஒருவரை எழுப்பிவிடலாம் தூங்குவது போல பாசாங்கு செய்யும் நபரை எழுப்புவது கடினம். நமது வாழ்வில் பல சங்கடங்களையும் சந்தோஷங்களையும் கடந்து போகத்தான் வேண்டியுள்ளது. பல்வேறு தரப்பினர்களுடன் பழகித்தான் காலம் கடத்த வேண்டிய சூழலும் வருகிறது.
வசதியைப் பெருக்கி சந்தோஷமாய் வாழ்ந்தால் பொறாமைப்படாத நபர்களைத்தேட வேண்டிய சூழல் வரும். அதே நேரம் வாழ்க்கையில் கொஞ்சம் நொடித்துப்போய்விட்டால், பாா்த்து எள்ளி நகையாடும் கூட்டமும் உண்டு.
நமது வளா்ச்சிகண்டு பொறாமைப்படும் நபர்களிடம் நாம் தான் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். சில மனிதர்களுக்கு பிறவியிலேயே வஞ்சகம், அடுத்துக்கெடுத்தல், திரைமறைவில் இருந்து நமது வளா்ச்சிக்கு தடை செய்தல், போன்ற செயல்களும் உண்டு. அது அவர்களோடு கூடவே பிறந்தது.
பத்து போ் கூடி, நான்கும் மூன்றும் கூட்டினால் ஆறுவரும் என சொல்லுகின்ற இடத்தில் போய், நாம் தலையிட்டு, 'ஆறு வராது, ஏழுதான் வரும்' எனச்சொன்னால் நம்மை பைத்தியக்காரனாகப் பாா்ப்பாா்கள். அது போன்ற இடங்களில் நாம் வெகு ஜாக்கிரதையாக பழக வேண்டும்
சிலர் தனது உறவுகளிடமோ, அல்லது நண்பர்களிடமோ, 'இருக்கும் சேமிப்பில் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டலாம் என இருக்கிறேன்' எனச்சொன்னால், நமது நலம் விரும்பிகளோ 'நல்ல காாியம்தான்; அகலக்கால் வைக்காமல் இருப்பிற்கு தகுந்தாற்போல வீட்டைக்கட்டுங்கள்' என அனுபவ பூா்வமான நடைமுறையைச் சொல்வாா்கள்.
சில பசுந்தோல் போா்த்திய உறவு மற்றம் நட்புப் புலிகளோ, 'அதெல்லாம் வேண்டாம் வீடு என்பது ஒருமுறைதான் கட்டப்போகிறோம்; அதை வங்கியில் லோன்வாங்கி அல்லது குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி ஒரு வழியாய் முடித்துவிடு' என்பாா்கள். 'இப்போதுதான் மாதாந்திர தவணையும் கொடுக்கிறாா்களே' என்றெல்லாம் சொல்லி நம்மை சந்தியில் இழுத்து விட்டுவிடுவதும் உண்டு; அது அவர்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று!
பொதுவாகவே நமக்கு வருவாய்க்குத்தகுந்தாற்போல செலவுகளை செய்யவேண்டும். வாழந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும் உலகத்தில் நாம் தான் ஜாக்கிரதையாய் தடம் பதிக்க வேண்டும். இருக்கும் தொகைக்கேற்ப மனைவி மற்றும், தாய் , தந்தையர்களிடம் கலந்து பேசி எந்த முடிவையும் எடுக்கவேண்டும்.
சிலர் நயவஞ்சகமாகவே பழகும் குணம் கொண்டவர்கள். அவர்களின் பிறவிக்குணம் மாறாது. இதற்கு உதாரணமாய் ஈசாப் நீதிக்கதைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாய் கடைபிடிக்கலாம்..
ஆட்டுக்குட்டியும், ஓநாயும்
ஒரு விவசாயி தான் வளா்த்துவரும் ஆடுகளை வயல்காட்டிற்கு ஓட்டிச்சென்று மேய்ச்சலுக்கு விடுவதும் மாலை அழைத்து வருவதும் வாடிக்கை. அப்படி ஒரு நாள் மதிய வேலையில் மழை வந்துவிட்டது. அந்திமழை விடாது என்பதால், ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வரும் வழியில் ஒரு ஓநாய்க்குட்டி பிறந்து கொஞ்ச நாளானது மழையில் நனைந்து கொண்டிருப்பதைப்பாா்த்து இறக்கப்பட்டு, தூக்கி வந்து வளா்த்து பால் கொடுத்து, உணவளித்து வந்திருக்கிறாா். ஓநாயும் தன் பிறவி குணங்களை விட்டு ஆடுகளோடு நட்பு பாராட்டி வளர்ந்து வந்துள்ளது. சில மாதங்கள் ஆன பிறகு அதன் பிறவி குணம் அதற்கு நினைவுக்கு வரவே மந்தையில் உள்ள ஒரு ஒரு ஆட்டுக்குட்டியை தின்று வந்திருக்கிறது. அதனிடம் இருந்த எஜமான விசுவாசம் மறந்து அதன் கேடு கெட்ட குணத்தை கடைபிடித்துள்ளது. பின்னா் ஆடுகள் குறைவதைக்கண்டுபிடித்த ஆட்டுக்காரர் அதை அடித்து துவைத்து விரட்டி விட்டாராம்.
அதே போலத்தான், நம் முன்னேற்றம் கண்டு வஞ்சக எண்ணம் உள்ளவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்பதே சிறப்பான விஷயமாகும். சிலரது பிறவி குணங்களை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டாம். அவர்களிடமிருந்து விலகி எச்சரிக்கையாய் வாழலாமே!