உங்கள் வீட்டு பொருட்களை நாசமாக்கும் எலுமிச்சைப் பழம்... இந்த 7 இடங்களில் அடியோடு தவிர்ப்பது நல்லது!

Cleaning Tips with Lemon
Cleaning Tips with Lemon
Published on

மது வீடுகளில் இயற்கையான முறையில் பொருட்களை சுத்தம் செய்யவேண்டும் என்றால் எலுமிச்சம் பழம்தான் முதலில் பயன்படுத்துவோம். இது பிசுபிசுப்பான எண்ணெய் கறைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், வீடு முழுவதும் ஒரு அருமையான நறுமணத்தையும் கொடுக்கும். இது ஒரு இயற்கையான பொருள் என்பதால் வீட்டின் அனைத்து மூலைகளிலும் இதை எந்த பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என பலரும் நினைக்கிறார்கள். 

ஆனால் அது மிகப்பெரிய தவறு. இதில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை வீட்டின் சில முக்கியமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை நிரந்தரமாக பாழாக்கிவிடும் தன்மை கொண்டது. அப்படி எந்தெந்தப் பொருட்களுக்கு எலுமிச்சை சாற்றை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விலையுயர்ந்த கற்கள் மற்றும் மரத்தரை!

கிரானைட், மார்பிள் அல்லது லைம்ஸ்டோன் போன்ற இயற்கையான கற்களால் ஆன சமையலறை மேடைகளில் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தவே கூடாது. இதன் கடுமையான அமிலத்தன்மை அந்தக் கற்களின் பளபளப்பை முழுமையாக அழித்து நிரந்தரமான கறைகளை உருவாக்கிவிடும்.

அதேபோல, மரத்தால் செய்யப்பட்ட விலை உயர்ந்த தரைகளைத் துடைக்கும்போது இதைக் கலந்தால் மரத்தின் வார்னிஷ் உறிஞ்சப்பட்டு தரை ரொம்பவே மங்கிப்போய்விடும். இதற்குப் பிரத்யேகமாக விற்கப்படும் மிதமான சோப்பு திரவங்களை மட்டுமே பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

சில குறிப்பிட்ட உலோகங்கள் மற்றும் வார்ப்பிரும்பு!

துருப்பிடிக்காத சில்வர் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய எலுமிச்சை மிகவும் சிறந்தது. ஆனால் பித்தளை, செம்பு மற்றும் அலுமினியப் பாத்திரங்களில் இதைப் பயன்படுத்தினால் ரசாயன மாற்றம் ஏற்பட்டு பாத்திரத்தின் நிறமே மோசமாக மாறிவிடும். குளியலறையில் உள்ள குரோம் பைப்புகளையும் இது அரித்துவிடும்.

அதேபோல, இரும்பு கடாய்களில் உள்ள கறைகளை நீக்க இதைப் பயன்படுத்தலாம், ஆனால் அதிக நேரம் அப்படியே ஊறவைத்தால் இரும்பு கடாயின் பாதுகாப்புப் படலம் நீங்கி சீக்கிரமே துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். எனவே பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவதே இதற்குச் சரியான சாய்ஸ்.

இதையும் படியுங்கள்:
வெள்ளைத் தும்பைக்குள் ஒளிரும் ஆரோக்கிய வாழ்வு!
Cleaning Tips with Lemon

விலையுயர்ந்த, மென்மையான உடைகள்!

வெள்ளைத் துணிகளில் உள்ள கறைகளை நீக்க எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச் போலச் செயல்படும். ஆனால் இதை எந்த ஒரு காரணத்திற்காகவும் கருப்பு மற்றும் அடர்த்தியான நிறம் கொண்ட துணிகளில் பயன்படுத்தக் கூடாது. இது துணிகளின் நிறத்தை வெளுக்கச் செய்து உங்களின் புது துணியைப் பழசு போல மாற்றிவிடும். மேலும் பட்டு மற்றும் உல்லன் போன்ற மிகவும் மென்மையான ஆடைகளின் நூலிழைகளையும் இது கடுமையாகச் சேதப்படுத்தும்.

எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ரப்பர் சீல்கள்!

டிவி, லேப்டாப் போன்ற ஸ்மார்ட் திரைகளை எலுமிச்சை சாறு கொண்டு துடைக்கவே கூடாது. இது திரையின் மேல் உள்ள பாதுகாப்புக் கோட்டிங்கை அழித்துவிடுவது மட்டுமில்லாமல், திரையைப் பிசுபிசுப்பாக மாற்றி அதிக தூசியை ஈர்க்கும். அதேபோல வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற இயந்திரங்களில் உள்ள ரப்பர் பேண்டுகளில் இதைப் பயன்படுத்தினால், நாளடைவில் அந்த ரப்பர் தேய்ந்துபோய் தண்ணீர் கசிய ஆரம்பித்து வீணாகிவிடும்.

எச்சரிக்கை!

வீட்டைச் சுத்தம் செய்யும் போது எந்த ஒரு சூழ்நிலையிலும் எலுமிச்சை சாற்றையும் கடைகளில் விற்கும் ப்ளீச்சிங் லிக்விட் போன்றவையையும் ஒன்றாகக் கலந்துவிடக் கூடாது. இது இரண்டும் சேரும்போது ஒரு மிக ஆபத்தான நச்சு வாயுவை உருவாக்கும். இதனால் மூச்சுத் திணறல் மற்றும் கண்கள் எரிச்சல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐடி துறையை அதிரவைக்கும் AI… இந்த ஸ்கில்ஸ் கத்துக்கிட்டா மாசம் பல லட்சம் கன்பார்ம்!
Cleaning Tips with Lemon

சமையலறையில் பல மேஜிக்குகளைச் செய்யும் எலுமிச்சை பழம், சரியான இடத்தில் பயன் படுத்தாவிட்டால் ஒரு பெரிய வில்லனாக மாறிவிடும். இயற்கையான பொருள்தானே என்று அலட்சியமாக இல்லாமல், எந்தப் பொருளுக்கு எது செட் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதே எப்போதுமே பாதுகாப்பானது. இனிமேல் வீட்டைச் சுத்தம் செய்யும்போது இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைக் கவனத்தில் வைத்துக்கொண்டு உங்களின் விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாகப் பராமரியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com