
ஹோட்டல் கிச்சனை அப்படியே சுருக்கி வீட்டு கிச்சனுக்கு கொண்டு வந்தால் அதுதான் க்ளவுட் கிச்சன். வீட்டு சமையலறையிலோ, மொட்டை மாடியில் ஒரு சிறிய இடம் இருந்தாலோ போதும். அந்த இடத்தில் சமையல் அறையை அமைத்து உணவுகளை தயார் செய்து 'டேக் அவே' முறையில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு டெலிவரி செய்வதுதான் கிளவுட் கிச்சன்.
க்ளவுட் கிச்சனில் கடை முகப்பு இல்லை, சாப்பிடும் அறை கிடையாது. உணவு விநியோகத்திற்காக உகந்த சமையலறை மட்டுமே இருப்பதால் அதிகப்படியான செலவுகள் இல்லாமல் ஆர்டர்களை எடுக்க முடிகிறது. இது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. முழு சேவை உணவகத்தை விட வணிக சமையலறையை வாடகைக்கு எடுப்பது மிகவும் மலிவானது. ஏசி அமைப்பது, மேசை நாற்காலிகள் போன்ற வசதியான இருக்கைகள் அமைப்பது என்று நிர்வாக சுமைகள் இல்லாமல் சமையலில் எளிதாக கவனம் செலுத்தி அதிக லாபம் பார்க்க முடிகிறது.
வெளிநாடுகளில் பிரபலமான இந்த க்ளவுட் கிச்சன் இந்தியாவிலும் நிறைய இடங்களில் இயங்குகிறது. குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த பிசினஸ் சூடு பிடித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்துக்கு பிறகு எல்லாத் துறைகளும் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டுள்ளது போல் ஹோட்டல் துறையும் இந்த புதிய மாற்றத்தை கண்டுள்ளது.
பொதுவாக ஹோட்டல் தொடங்க வேண்டும் என்றால் அதற்கென்று இடம் பார்க்க வேண்டும். அத்துடன் ஹோட்டலை அமைக்க நிறைய அளவில் பண முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற எந்த முதலீட்டு செலவுகளும் இல்லாமல் சிறிய இடத்தில் கிச்சனை அமைத்து செய்வதால் தரமான உணவுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவதுடன் நிறைவான லாபத்தையும் பெற முடிகிறது.
வெளியூர்களிலிருந்து வேலை நிமித்தம் வந்து இங்கு தங்கும் பேச்சுலர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் கிடைப்பதால் இதற்கு நிறைய வரவேற்புள்ளது. அதிக மசாலாக்கள் சேர்க்காமல் வீட்டில் செய்வது போன்ற ருசியும், ஹோட்டலில் சாப்பிடுவதைவிட குறைவான விலையிலும் கிடைப்பதால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.