

பள்ளிக்கூடம் முடித்த உடனே அடுத்து என்ன படிக்கப் போகிறாய் என்ற குழப்பம் எல்லா மாணவர்களுக்கும் வருவது மிகவும் சகஜமான ஒரு விஷயம். ஆனால் பல மாணவர்கள் தாங்கள் என்ன படிக்கப் போகிறோம், அந்தப் படிப்பு எதைப் பற்றியது, படித்து முடித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல் ஒரு கோர்ஸை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு சின்ன மொபைல் போன் வாங்குவதற்கு கூட பல நாட்கள் யூடியூபில் ரிவியூ பார்க்கும் நாம், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒரு தொழிலை எந்த ஒரு தெளிவும் இல்லாமல் ஏனோதானோவென்று தேர்ந்தெடுப்பது ரொம்பவே வருத்தமான விஷயம். மாணவர்கள் தங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத மற்றும் புரியாத துறைகளை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெற்றோர் மற்றும் சமூகத்தின் அழுத்தம்!
நமது ஊரைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்ன படிக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் அவனது பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் தான் முடிவு செய்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர் பையன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டான் என்பதற்காக, எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் தனது பிள்ளையையும் அதே படிப்பில் சேர்ப்பது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த மாணவனுக்கு கலைத்துறையிலோ அல்லது விளையாட்டிலோ ஆர்வம் இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சமூகத்தில் ஒரு கெத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே பல பெற்றோர்கள் தங்களுக்குப் புரியாத, மாணவர்களுக்கும் செட் ஆகாத கோர்ஸ்களில் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி ஈவு இரக்கமின்றி சேர்த்து விடுகிறார்கள்.
சினிமா, மீடியாவின் மாயை!
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பலரும் சினிமா அல்லது வெப் சீரிஸ்களைப் பார்த்து தங்களது எதிர்கால வேலையைத் தீர்மானிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார்கள். திரையில் வரும் ஒரு ஹீரோ போலீஸ் அதிகாரியாகவோ அல்லது பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் சிஇஓ ஆகவோ மாஸாக என்ட்ரி கொடுப்பதைப் பார்த்து, நாமும் அதுபோல ஆகிவிடலாம் என குருட்டுத்தனமாக ஒரு துறைக்குள் நுழைகிறார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த வேலைக்குச் செல்ல எவ்வளவு கஷ்டப்பட வேண்டும், தினமும் எவ்வளவு மன அழுத்தத்தையும் சவால்களையும் சந்திக்க வேண்டும் என்ற எதார்த்தம் அவர்களுக்கு சுத்தமாகத் தெரிவதில்லை. வெறும் பகட்டான வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து பல இளைஞர்கள் ஏமாந்துவிடுகிறார்கள்.
போதிய வழிகாட்டுதல் இல்லாமை!
பள்ளிகளில் படிக்கும்போது அதிக மதிப்பெண்களை வாங்குவதில் மட்டுமே முழு கவனமும் செலுத்தப் படுகிறது. ஒவ்வொரு மாணவனின் திறமை என்ன, அவனுக்கு எந்தத் துறை சரியாக வரும் என்பதை அவனுக்கு எடுத்துக்கூற சரியான வழிகாட்டிகள் நமது கல்வி முறையில் மிகக் குறைவு.
இதனால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் நண்பர்கள் எந்தக் கல்லூரியில் சேர்கிறார்களோ அதே கல்லூரியில் இவர்களும் போய் சேர்ந்து விடுகிறார்கள். தனக்கு அந்தப் படிப்பு வருமா வராதா, அதன் எதிர்கால வாய்ப்புகள் என்ன என்ற எந்த ஒரு சுய பரிசோதனையும் அவர்கள் செய்வதில்லை.
ஒரு மாணவன் தனக்குப் புரியாத ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது அவனது முழுமையான திறமை அங்கேயே முடங்கிப் போய்விடுகிறது. வாழ்க்கையின் பாதி நேரத்தை நாம் வேலை பார்க்கும் இடத்தில்தான் செலவழிக்கப் போகிறோம். அப்படிப்பட்ட வேலையை ஒரு சின்ன புரிதல் கூட இல்லாமல் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
மதிப்பெண்களை வைத்து மாணவர்களை எடைபோடாமல், அவர்களின் உண்மையான ஆர்வத்தைக் கண்டுபிடித்து சரியான பாதையில் பயணிக்க வைப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here