ஒரு சிலருக்கு இரவில் தூங்கும்போது, முகத்தை மூடித் தூங்கினால்தான் தூக்கமே வரும். குளிர்காலத்தில் நம்மில் பெரும்பாலோனோர் குளிரில் இருந்து தப்பிக்க, உடலோடு முகத்தையும் சேர்த்து கவர் செய்துகொண்டு தூங்குவது வழக்கம். இவ்வாறு, முகத்தை மூடித் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இரவில் முகத்தை மூடித் தூங்கும்போது, வெளியே இருந்து சுத்தமான காற்று உள்ளே வராது. அதேசமயம், போர்வைக்குள் உள்ள தூய்மையற்ற காற்று வெளிய செல்ல முடியாது. இதனால் தூய்மையற்ற காற்றை நாம் சுவாசிக்க நேரிடும். இவ்வாறு, தூய்மையற்ற காற்றை சுவாசிக்கும்போது, சருமத்தின் நிறம் மங்கி, முகப்பரு, சுருக்கங்கள் போன்ற சருமப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். அதோடு, தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படலாம்.
மேலும், போர்வையால் முகத்தை மூடித் தூங்கும்போது, நுரையீரலில் ஆக்சிஜன் பரிமாற்றம் முறையாக நடைபெறுவதில்லை. இதனால் தலைவலி, உடல்சோர்வு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் அதிகரிப்பதோடு, நுரையீரல் சுருங்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் முகத்தை மூடித் தூங்குவதை அறவே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறது.
போர்வையால் முகத்தை மூடித் தூங்கும்போது, ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு பரிமாற்றத்தில் தடை ஏற்படலாம். இதன் விளைவாக, சில சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட வழிவகுக்கிறது. இது இதயத்தில் நேரடியாக பாதிப்புகளை உண்டாக்கி, மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கலாம். உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்.
கூடுதலாக, இவ்வாறு தூங்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு செறிவு அதிகரித்தும், ஆக்சிஜன் செறிவு குறைந்தும் காணப்படும். இதனால், மூளையின் செயல்பாடுகள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். இது, பிற்காலத்தில் அல்சைமர் போன்ற மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போர்வைக்குள் இருக்கும் காற்றை சுவாசிக்கும்போது, தொண்டையில் ஈரப்பதம் குறைந்து தொண்டை வறட்சி ஏற்படலாம்.
போர்வையால் மூடித் தூங்கும் பழக்கம் உடைய பெரும்பாலான நபர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னையாக தூக்கமின்மை பிரச்னை உள்ளது. உடல் முழுவதும் மூடித் தூங்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இது, வியர்வை வெளியேற்றத்திற்கு வழிவகுத்து தூக்கம் பாதியில் கலையக் காரணமாகலாம். அதே சமயம், இந்தப் பழக்கம் உள்ளவர்கள், போர்வை இல்லமால் தூங்கும்போது, முழுமையற்ற தூக்கத்தை உணர்வார்கள். எனவே, போர்வை இல்லாத அல்லது விலகும் சமயத்தில் அவர்கள் தூக்கம் தடைபடலாம்.