

வீடு கட்டுவது ஒரு பெருங்கனவாக இருந்தாலும் வீடு கட்டிய பின்னர், அதன் செலவுகள், ஏன்டா வீடு கட்டினோம் என்று யோசிக்க வைத்துவிடும். வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் தங்களின் கனவுபோல, வீடுகளின் அறைகளையும் அதன் உள் அலங்காரங் களையும் அமைக்க எண்ணி இருப்பார்கள். வீடு கட்டும்போது ஒப்பந்தகாரர் காட்டிய படத்தின் தோற்றத்தையும், வீடு கட்டி முடித்த பிறகு உள்ள தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம்.
அதுபோல வீட்டு அறைகளில் சமையலறைகளுக்கு நாம் பலவிதமான வசதிகளை எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால், ஒப்பந்ததாரர் அதற்கெல்லாம் தனியாக கூடுதல் பணத்தை கேட்பார். அப்போது நாம் போடப்பட்ட ஒப்பந்தத்தைக் காட்டி அந்த பணத்திற்குள் கேட்ட அனைத்தையும் பூர்த்தி செய்யுமாறு வற்புறுத்தலாம், ஆனாலும் ஒப்பந்ததாரர் அதற்கெல்லாம் மசிய மாட்டார். மீறி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும், நாம் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படிதான் நடவடிக்கை இருக்கும். பெரும்பாலும் ஒப்பந்தத்தை தயார் செய்து ஓப்பந்ததாரரே கொண்டு வருவதால், அவருக்கு சாதகமான முறையில்தான் அதை தயார் செய்து இருப்பார்.
ஒப்பந்தத்தில் இல்லாதது:
அந்த ஒப்பந்தத்தில் உள்ள தொகையானது, வரைபடத்தில் உள்ளவாறு வீடு கட்டுவதற்கு மட்டுமே என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அதில் செப்டிக் டேங்க், தண்ணீர் தொட்டி, காம்பவுண்ட் சுவர், இன்டீரியர் வடிவங்கள், கப்போர்ட்கள், சமையலறை அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகள், தரைக்கு உயர்ந்த மார்பில், கிரானைட் போன்ற கற்கள் பதிப்பது, மாடிப்படியின் கைப்பிடிகள், தரமான கதவுகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்காது.
சாதரணமாக உங்களுக்கு வெஸ்டர்ன் டாய்லட் வேண்டும் என்று கேட்டால் கூட, அதற்கு தனியாக தொகையை ஒப்பந்ததாரர் கேட்பார். இது போன்ற விஷயங்களால் வீடு கட்டும்போதே பாதியில் வீட்டுக்காரருக்கும், ஒப்ப்பந்ததாரருக்கும் சண்டை வந்து வேலை பாதியில் நின்றுவிடும். அதன் பின் வேறு ஒரு ஒப்பந்ததாரரை நியமித்தால், அவரும் தன் இஷ்டத்திற்குதான் வேலைகளை செய்து முடிப்பார்.
ஒப்பந்தம் போடும் முறை:
முதலில் ஒப்பந்தம் போடும் முன்னர், ஒப்பந்ததாரரின் அலுவலக முகவரி, அவரது ஆதார், பான் கார்ட் எண், அவருடைய வங்கி கணக்கு பற்றிய தகவல்கள், அவரது ஜி.எஸ்.டி எண், தொடர்பு எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட்டு ஓப்பந்தத்தை நிரப்புங்கள். இந்த நடைமுறைக்கு முன்னர், அந்த ஒப்பந்ததாரர் கட்டிய வீட்டை பார்த்து, அதன் தரம், உறுதி ஆகிய தன்மைகளையும் , ஒப்பந்ததாரரின் தனிப்பட்ட குணங்கள், நடவடிக்கைகள், நேர்மை ஆகியவற்றை முன் கூட்டியே விசாரித்து கொள்ளுங்கள்.
ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டியவை:
முதலில் வீடுகட்ட வேண்டிய பொருட்களை எல்லாம் தரமான நிறுவனத்தில் இருந்து பெறவேண்டும். அதற்காக இரும்புக் கம்பிகள், சிமெண்ட் முட்டைகள், எலக்ட்ரிகல் பொருட்கள், பெயிண்ட், தண்ணீர் பைப்கள், தண்ணீர் மோட்டார் ஆகியவற்றை தரமான பிராண்ட் பெயரைக் குறிப்பிட்டு, அந்த நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும் என்பதை தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள்.
வீட்டிற்கு தேவையான வசதிகள்:
ஒவ்வொரு அறையிலும் தேவையான கப்போர்ட்கள், அதற்கு கதவுகள், பாத்ரூம், டாய்லட்களில் தேவைப்படும் வசதிகள், ஒவ்வொரு அறையிலும் தரைக்கு போடப்பட வேண்டிய கற்கள், செப்டிக் டேங்க், சம்ப், தண்ணீர் தொட்டி மெட்டீரியல், கைப்பிடிகள் உலோகம், மாடிப்படி, பால்கனி கைப்பிடிகள் எந்த பொருளில் கட்டப்பட வேண்டும்.
ஒவ்வொரு அறைக்கும் பாத்ரூம , டாய்லட் ஆகியவற்றிற்கு போடப்பட வேண்டிய கதவுகளின் தரம், சமையலறை இன்டீரியர் , கூடம் மற்றும் பூஜை அறையின் இன்டீரியர், அளவுடன் காம்பவுண்ட் சுவர் மற்றும் அதற்கான கிரில் கதவுகள் ஆகியவற்றையும் உங்கள் ஓப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பணம் வழங்குதலையும் குறிப்பிடுங்கள்:
வீடு கட்டுவதற்கு முன் கூட்டியே மொத்தமாக பணம் வழங்காமல், அஸ்திவாரம், ஜன்னல் மட்டம், ரூப் மட்டம், முழு பூச்சு வேலை, உள் அலங்காரம், மற்ற வேலை என பகுதிப் பகுதியாக பணத்தினை வழங்க ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் பணத்தினை இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவே ஓப்பந்ததாரருக்கு பணம் அனுப்புங்கள். அதுபோல குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடிக்காவிட்டால், அதனால் பொருள் விலையேற்றம் ஏற்பட்டால் அதற்கு ஒப்பந்ததாரரே பொறுப்பு என்றும் குறிப்பிட்டு கொள்ளுங்கள்.
சரிபார்ப்பு:
ஒவ்வொரு வேலையும் முடிந்த பின்னர், அதன் தரம் மற்றும் உறுதித்தன்மையை சோதித்து கொள்ளுங்கள். கட்டிடம் கட்டும் பொருட்கள் மொத்த கொள்முதல் விலையில் கிடைத்தால், அதை நீங்களே வாங்கி கொடுத்துவிடுங்கள். சரியான ஒப்பந்தம் இருந்தால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது.