

உறவுகளை இணைக்கும் இடமாக இருக்கும் வீட்டின் சமையலறை இதயம் போன்றது. சமையலறை ஒழுங்காக இருந்தால்தான் சமையல் செய்யும் ஆர்வம் ஏற்பட்டு, சமைக்கும் உணவு சுவையாக இருக்கும். அந்த வகையில் சமையலறையை வாஸ்துப்படி சரியாக அமைப்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
சமையலறைக்கான சரியான திசை: வாஸ்து சாஸ்திரத்தின்படி அக்னி தேவனின் தென்கிழக்கு திசையில் சமையலறையை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதோடு, வீட்டில் அமைதி நிலவும். சமையலறை தண்ணீருடன் தொடர்புடைய இடமாக இருப்பதால், தென்மேற்கில் இருந்தால் குடும்ப தகராறுகளும், வடமேற்கில் இருந்தால் தேவையற்ற நிதி செலவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளதால், தென் கிழக்கு திசையில் அடுப்பு மற்றும் நெருப்பு தொடர்பான வேலைகளை செய்து விடுங்கள்.
சமையலறையில் பொருட்கள் வைக்கும் இடங்கள்: சமையலறையில் அடுப்பு மற்றும் சிங்க்கை தென்கிழக்கு மூலையில் வைப்பதோடு, சமைக்கும்போது உங்கள் முகம் கிழக்கு நோக்கி இருந்தால் இது, உணவு சமைப்பதற்கு சிறந்த திசையாக இருப்பதோடு, உணவில் நேர்மறை அதிர்வுகளைக் கொண்டுவருகிறது. நீர் தொடர்பான பொருட்களான சிங்க் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்றவற்றை வடகிழக்கில் வைப்பதன் மூலம், நெருப்பு மற்றும் நீர் ஆகிய இரண்டு எதிரெதிர் சக்திகளுக்கு இடையே மோதலைத் தடுக்கலாம். பிரதான கதவுக்கு எதிரே அல்லது ஜன்னலுக்கு அடியில் அடுப்பை வைப்பது நேர்மறை சக்திகளை வெளியேற்றும் என்பதால் எத்தகைய சூழ்நிலையிலும் அவ்வாறு வைக்கக் கூடாது.
நேர்மறை ஆற்றல்: சுத்தமான சமையலறை நேர்மறை ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, எப்போதும் காலியாகவும் சுத்தமாகவும் கவுண்டர்டாப்புகளை வைத்திருக்க வேண்டும். பாத்திரங்களை தவறாமல் சுத்தம் செய்வது லட்சுமி தேவியை மகிழ்வூட்டும் செயலாக உள்ளது. சமையலறையில் பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற கனமான பொருட்களை தெற்கு அல்லது மேற்கு திசையில் சேமிப்பதோடு, அடுப்புக்கு மேலே கனமான அலமாரிகள் அல்லது திறந்த அலமாரிகளை வைக்கக் கூடாது.
சமையலறைக்கு உகந்த நிறம்: சமையலறையில் மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா மற்றும் வெளிர் பச்சை நிறங்களை தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது. எதிர்மறை சக்தியை ஈர்த்து நெருப்பின் ஆற்றலை அடக்கும் என்பதால் ஒருபோதும் கருப்பு அல்லது அடர் நீல நிறத்தை சமையலறை சுவர்கள், தரைகள் அல்லது கவுண்டர்டாப்புகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமையலறையில் செய்யக் கூடாதவை: குளியலறை, பூஜையறை அல்லது படுக்கையறைக்குக் கீழே அல்லது மேலே சமையலறையைக் கட்டுவது சமையலறையில் தூய்மையைக் கெடுப்பதோடு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகிறது. மேலும், சமையலறையின் குழாய்கள் மற்றும் வடிகால் குழாய்கள் அடைக்கப்படாமல் பார்த்துக் கொள்வதோடு உடைந்த மற்றும் விரிசல் விழுந்த பாத்திரங்கள் நிதி சிக்கல்களின் அறிகுறியாகவும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்பதால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை சமையலறையில் கையாள்வதன் மூலம் வீடு சுபிட்சமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.