

நீர் கசியும் குக்கரை சரி செய்வதற்கு பல வழிகள் உள்ளன. பொதுவாகவே இந்த நீர்க்கசியும் தொந்தரவு பழைய குக்கர்களில் காணப்படும். அவற்றை சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்!
முதலில் விசிலையும், வால்வையும் சுத்தமாக கழுவ வேண்டும். ஏனெனில் உணவுத் துகள்கள் அடைத்திருந்தால் நீர் கசிவு ஏற்படும். எனவே குக்கரின் விசிலை எடுத்து, அதன் உள் பகுதியையும், நீராவி வெளியேறும் வால்வையும் நன்கு சுத்தம் செய்யலாம். இதனால் உணவுத் துகள்கள் அடைத்திருந்தால் நீங்கிவிடும். அத்துடன் குக்கர் மூடியின் விளிம்பில் உணவுத் துகள்கள் ஒட்டியிருந்தால் அதையும் நன்றாகத் துடைத்து சுத்தம் செய்யவும்.
குக்கரில் அதிக தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்து, சரியான அளவு மட்டும் நீர் விட்டு மிதமான தீயில் சமைக்க இந்த தொந்தரவு ஏற்படாது. குக்கருக்குள் நிறைய தண்ணீர் விடுவதும் இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும். அத்துடன் குக்கரின் மேல்பகுதி வரை உணவை நிரப்ப வேண்டாம். சிலர் அரிசி, பருப்பு, காய்கள் என குக்கரின் மேல் பகுதி வரை அடைத்து வைப்பார்கள். இப்படி குக்கர் முழுவதும் நிரப்பாமல், அதிக தீயில் சமைக்காமல் இருப்பது நல்லது. மிதமான தீயில் சமைக்கும் போது தண்ணீர் கொதித்து வெளியே வராது.
குக்கரின் உதிரி பாகங்களையும் சரிபார்ப்பது நல்லது. குக்கர் மூடியில் உள்ள ரப்பர் கேஸ்கெட் (Gasket) என்னும் ரப்பர் வளையம் பழையதாகி, சேதமடைந்திருந்தால் புதிய ரப்பர் வளையத்தை மாற்றுவது அவசியம். அதேபோல் விசிலுக்குள் இருக்கும் சிறிய வளையங்கள் அல்லது போல்டுகள் சேதமடைந்திருந்தால் கூட நீர்க்கசிவு ஏற்படும். எனவே அவற்றை மாற்றுவதன் மூலம் சரி செய்யலாம்.
சிலர் குக்கரில் சாதம் எடுத்தவுடன் கரண்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்களை எடுப்பதற்கு கரண்டியை குக்கரின் மேல் பகுதிகளில் தட்டுவார்கள். இதனால் கண்ணுக்குத் தெரியாத சிறிய இடைவெளி ஏற்பட்டு சமைக்கும் பொழுது நீர்க்கசிவு ஏற்படும்.
உணவு சமைக்கும் பொழுது நீராவியுடன் சேர்ந்து உணவின் துகள்களும் வால்வை அடைத்துக்கொள்ளும். அவற்றை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகி தண்ணீர் முழுக்க வெளியே கசிந்து விடும் அல்லது பிரஷர் தாங்காமல் வெடிக்கவும் வாய்ப்புண்டு.
பொதுவான குறிப்புகள்:
சமைத்த பிறகு குக்கர் மூடியை கழுவும் போது, விசிலையும், வால்வையும் நன்றாக சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.
சாதாரண பாத்திரங்களைப் போல குக்கரை தேய்த்து சுத்தம் செய்யாமல் அவற்றை கவனமாக பராமரிக்க வேண்டும்.
அவ்வப்போது உதிரி பாகங்களை செக் செய்து மாற்றுவது அவசியம்.
குக்கரை சுத்தம் செய்வதும், தண்ணீரின் அளவை சரி பார்ப்பதும், உள்ளிருக்கும் உணவுப்பொருட்கள் பொங்கி வழியாமல் இருக்க சில துளிகள் எண்ணெய் சேர்ப்பதும் சிறந்த பலனளிக்கும்.
குக்கரில் பொருத்தப்படும் ரப்பர் நாளடைவில் தளர்வாகி விடும். இதனால் கூட தண்ணீர் வெளியேற வாய்ப்பு அதிகம். எனவே குக்கரின் ரப்பர் தளர்வாக இருக்கும் பொழுது ஃப்ரீசரில் போட்டு வைக்கலாம் அல்லது இரவு முழுவதும் ரப்பரை தண்ணீருக்குள் போட்டு எடுத்து பயன்படுத்தலாம். அப்படியும் நீர்க்கசிவு ஏற்பட்டால் உடனே மாற்றி விடுவது நல்லது.