

உலக அளவில் அதிக மக்களால் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையான கிறிஸ்துமஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது . இருப்பினும் சில இடங்களில் ஜனவரி 6ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஜுலியன் நாட்காட்டியை பின்பற்றுவதாலோ அல்லது பாரம்பரியத்தின் காரணமாகவோ டிசம்பர் 25ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 6ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதுபோல், கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் மாறி கொண்டாடும் சில நாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆர்மீனியா: ஆர்மீனிய அப்போஸ்தலிக் தேவாலயம் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகிறது. ஜனவரி 6ம் தேதி இயேசுவின் பிறப்பு மற்றும் அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதையும் கொண்டாடும் முக்கிய நாளாக இருக்கிறது. ஆர்மீனியா அப்போஸ்தலிக் தேவாலயம் மற்றும் சில இடங்களில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் இன்னாளில் ஞானஸ்நானத்தையும் (Baptism) கிறிஸ்துமஸையும் ஒன்றாகக் கொண்டாடுகிறது.
லெபனான்: இங்கு வாழும் ஆர்மீனிய வம்சாவளி மக்கள் ஜனவரி 6ம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்கள்.
அப்பலாச்சியா (அமெரிக்கா): அமெரிக்காவின் அப்பலாச்சியா (Appalachia) போன்ற பகுதிகளில் வாழும் சில பாரம்பரிய அமிஷ் (Amish) சமூகங்கள், குறிப்பாக பென்சில்வேனியாவில் ‘பழைய கிறிஸ்துமஸ்’ (old Christmas) என்று அழைக்கப்படும் கொண்டாட்டங்களில் பாரம்பரியங்களுடன் கொண்டாடுகின்றன.
மெக்சிகோ: ஜனவரி 6ல் 'மூன்று ஞானிகளின் திருவிழா' (Three King's Day - Epiphany) கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அப்பொழுது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது இயேசுவை பார்க்க மூன்று ஞானிகள் வந்த நாளை நினைவுகூரும் வகையில் பரிசுகளை பரிமாறிக் கொண்டு, ஊர்வலங்கள் மற்றும் விருந்துகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விடுமுறை நாளாகும்.
பிரிட்டனின் ஃபௌலா தீவு: பிரிட்டனில் உள்ள சிறிய தீவான ஃபௌலாவில் வசிக்கும் மக்கள் பழைய ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி ஜனவரி 6 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.
கொல்கத்தா: இந்தியாவில் கொல்கத்தாவில் உள்ள ஆர்மீனிய தேவாலயங்களில் ஜனவரி 6 அன்று கிறிஸ்துமஸ் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.