தீபாவளியை இப்படி கொண்டாடுங்கள் சிக்கனமாகவும் மகிழ்ச்சிகரமாகவும்!

Budget Deepavali Ideas
Budget Deepavali Ideas
Published on

தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணி, பட்டாசுகள் ஆகியவற்றை வாங்கியும், பலகாரத்தை வீட்டில் செய்தும் சிறப்புடன் கொண்டாடுவோம். தீபாவளி என்பது ஒரு பெரிய பண்டிகை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தை வெளியில் கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நேரங்களில் மக்கள் அனைவரின் கைகளிலும் பணம் அதிகமாக புழங்கிக் கொண்டிருக்கும்.

இந்த தருணத்தில் தான் புதுத்துணி, பட்டாசு, போன், டிவி, கார், பைக் உள்ளிட்ட பல தேவையான பொருட்களையும் மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். இந்த நேரத்தில் நடக்கும் வியாபாரத்தை அதிகமாக்க, ஒரு சில ஸ்கேம்களும் சந்தையில் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் இருந்து உஷாராக இருப்பது எப்படி என்றும், பொருட்களை எப்படி வாங்குவது என்றும், பலகாரத்தை எப்படி சிக்கனமாக செய்வது (Budget Deepavali Ideas) என்பதை பற்றியும் பார்க்கலாம்.

புதுத்துணி மற்றும் புதிய பொருட்கள்:

தீபாவளிக்கு 15 நாட்கள் முன்பு இருந்தே துணிக்கடைகளில் 50%-70% வரை தள்ளுபடி என்று விளம்பரம் செய்து இருப்பார்கள். இதே போல ஆன்லைனில் உள்ள பேஷன் ஸ்டோர்களிலும் 50% மேல் ஆபர் போட்டு உங்களுக்கு வலை விரித்து காத்துக் கொண்டிருப்பார்கள். சில ஆன்லைன் ஆப்களில் டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்து இருப்பார்கள். இதே போல தான் கார் ஷோரூம் மற்றும் பைக் ஷோரும்களில் சில இலவசப் பொருட்களை உங்களுக்கு தருவதாக கூறியிருப்பார்கள்.

உண்மையில் இங்கு என்ன நடக்கிறது தெரியுமா?

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னரே உடைகளின் விலைப் பட்டியல் மாற்றி அமைக்கப்படும். இந்த நடைமுறை ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. துணியின் விலை ₹1000 என்றால் பில்லில் ₹3000 என்று விலையிட்டு 50% தள்ளுபடி என்று ₹1500 க்கு விற்கிறார்கள். உண்மையில் தள்ளுபடியில் சாதாரண நாட்களை விட 30% - 50% வரை அதிக விலைக்கு தான் விற்கிறார்கள். இதே நடைமுறையை தான் ஈயடிச்சான் காபியாக ஆன்லைன் விற்பனை செயலிகளும் செய்கிறது.

கார், பைக் ஷோரூம்களில் இலவசப் பொருட்களின் விலையை அடிப்படை விலையோடு சேர்த்து இருப்பார்கள். இலவச பொருட்கள் வேண்டாம் என்றால் கார், பைக்கின் விலையும் குறைப்பார்கள். ஊரில் புதியதாக திறக்கப்பட்ட துணிக் கடைக்கு சென்றால், பேரம் பேசி விலையைக் குறைக்கலாம். ஆன்லைன் பொருட்களின் விலையை உள்ளூர் கடைகளில் ஒப்பிட்டு வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த விலையை காண்பித்து கடைகளில் பேரம் பேசி வாங்கலாம்.

பட்டாசுகள்:

விலை குறைவு என்று கிப்ட் வெடி பாக்ஸ் போன்றவைகளை வாங்க வேண்டாம். அதில் நிறைய பட்டாசு வகைகள் இருந்தாலும், எல்லாம் விரும்பும் படி இருக்காது. அதனால் உங்களுக்கு விருப்பட்ட பட்டாசுகளை தனித்தனியாக வாங்கவும். குறைந்த பட்சம் தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்னர் வாங்கவும், தீபாவளி நெருங்க நெருங்க பாட்டாசு விலைகள் 100% - 200% வரை அதிகரிக்கும். சிவகாசி பக்கம் ஊர் இருந்தால் ஒரு முறை நேரில் சென்று வாங்கி விட்டு அடுத்த முறை போன் மூலம் ஆர்டர் போடலாம். சிவகாசியில் பட்டாசுகள் வெளியூரில் விற்பதை விட 50% - 70% வரை குறைவாக இருக்கும்.

தீபாவளி பலகாரங்கள்:

1. அரிசி மாவு பலகாரங்கள்:

தீபாவளி பலகாரத்திற்கு மூலம் அரிசி மாவு தான். அரிசி மாவில் எள், சீரகம், வெண்ணெய் அல்லது வனஸ்பதி, உப்பு ஆகியவற்றை சேர்த்து முறுக்கு சுடலாம். இந்த மாவில் தேங்காய் பால் சேர்த்தால் தேங்காய்பால் முறுக்கு, பூண்டு கலவை, சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பூண்டு முறுக்கும் செய்யலாம். அரிசி மாவில் எள்ளடை, சீடை ஆகியவற்றையும் செய்யலாம். அரிசி மாவில் வெல்லப்பாகு, ஏலக்காய் சேர்த்தால் அதிரசம் செய்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த விஷயங்களை செய்தால் அடுத்த தீபாவளிக்குள் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்!
Budget Deepavali Ideas

2. கடலை மாவு பலகாரம்:

கடலை மாவை சலித்து, வாணலியில் லேசாக வறுத்து சீனிப்பாகுடன் நெய் ஊற்றி அடிப் பிடிக்காமல் கிண்டி மைசூர் பா செய்யலாம். கடலை மாவில் ஓமம் கலந்து சிறிய புள்ளி அச்சில் பிழிந்தால் ஓமப் பொடி, அதே மாவில் காரம் சேர்த்தால் ரிப்பன் பக்கோடா, அதே மாவில் தண்ணீர் குறைத்து விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வெங்காய பக்கோடா போடலாம். மேலும் இனிப்பு பூந்தி,கார பூந்தி, லட்டு ஆகியவற்றையும் கடலை மாவில் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மொத்த விலையில் தீபாவளிக்கு பட்டாசு வாங்க சில ஆன்லைன் ரகசியங்கள்!
Budget Deepavali Ideas

3. இனிப்பு இல்லாத கோவா பலகாரம்:

இனிப்பு இல்லாத கோவா உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொறித்து, சீனிப் பாகில் ஊற வைத்தால் குலாப் ஜாமூன் தயார். கோவாவில் தண்ணீர் சேர்த்து அதில் மைதாவையும் சேர்த்து பஜ்ஜி போல எண்ணெயில் பொறித்து, ஜீராவில் ஊற வைத்தால் மால்புவா தயார். அரைத்த முந்திரியை பாலில் இட்டு அதனுடன் சீனி மற்றும் கோவாவை கலந்து காஜூ கத்லி செய்யலாம், இந்த முறையில் பாதாமை கலந்தால் பாதம் அல்வா தயாராகி விடும். இது போன்ற எளிய முறைகளில் பலகாரம் செய்தால் நேரமும் செலவும் மிச்சமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com