

பண்டிகைகள் வந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒரு வித பதட்டம் தொற்றிக் கொள்ளும். காரணம் வீடுகளை சுத்தம் செய்யும் பணி குறித்த கவலை. இதோ விரைவில் வரப்போகிறது தீபாவளி. ஆயுத பூஜை நிமித்தம் வீடுகளை ஓரளவு சுத்தம் செய்து இருப்போம். இருப்பினும் இந்துகளின் பெரிய பண்டிகையாக தீபாவளிக்கு முன் வீடு முழுவதையும் சுத்தம் செய்வதை வழக்கமாக உள்ளது.
ஆனால் பதட்டம் தவிர்க்க ஒரே நாளில் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. தினமும் 30–60 நிமிடங்கள் ஒதுக்கினாலே, 7 நாட்களில் வீட்டைச் சுத்தமாகவும் அழகாகவும் மாற்றலாம். எப்படி தெரியுமா? இதோ 7 நாட்களுக்கான இந்த எளிய அட்டவணையை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள்.
நாள் 1 - வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்
பயன்படுத்தாத பழைய பொருட்களைத் தனியாக எடுத்து வையுங்கள். உடைந்த பொருட்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பழைய செய்தித்தாள்கள், அட்டைப்பெட்டிகளை பழையது வாங்குபவரிடம் தந்து விடுங்கள். தானமாகக் கொடுக்கக்கூடிய ஆடைகளைத் தனியாக வையுங்கள்.
சிறிய டிப்ஸ்: ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு, தேவையற்ற பொருட்களை அதில் சேகரித்தால் வேலை எளிதாகும். இதற்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் 30–45 நிமிடங்கள் மட்டுமே.
நாள் 2 - இரண்டாம் நாள் சமையலறையைச் சுத்தம் செய்ய 45–60 நிமிடங்கள் ஒதுக்கலாம்
சமையல் மேடை மற்றும் அடுப்பை அதற்கான லிக்விட் ஊற்றி சுத்தம் செய்யுங்கள். தேவையான பாத்திரங்களை ஒழுங்காக அடுக்குங்கள். அதிகம் புழங்காததை பிரித்து வையுங்கள். காலாவதியான உணவுப் பொருட்களை அகற்றுங்கள்.
மசாலாப் பொருட்கள், பருப்பு, அரிசி ஆகியவற்றைச் சரிபாருங்கள். முக்கியமாக குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்யுங்கள். தீபாவளிக்குத் தேவையான எண்ணெய், மாவு, இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை முன்கூட்டியே பட்டியலிட்டால் சிரமம் குறையும்.
நாள் 3- 30–45 நிமிடங்கள் ஒதுக்கி அன்றாடம் நிம்மதியாக உறங்க உதவும் படுக்கையறையை ஒழுங்குபடுத்தலாம்
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை மாற்றுங்கள். அலமாரியில் உள்ள கலைந்த ஆடைகளை ஒழுங்குபடுத்துங்கள். பயன்படுத்தாத ஆடைகளைத் அதிலேயே துருத்தாமல் தனியாகப் பிரியுங்கள். தினமும் பயன்படுத்தும் ஆடைகளை மட்டும் எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்தால் நோ டென்ஷன். அறையில் உள்ள கட்டில், மேசை, ஜன்னல்களைத் துடைக்கவும். மின்விசிறி மற்றும் மூலைகளில் உள்ள தூசியை அகற்றுங்கள்.
நாள் 4 - ஹால் மற்றும் வரவேற்பறையைச் சுத்தம் செய்யும் நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே
காலை எழுந்ததும் திரைச்சீலைகளை ஊறவைத்து துவைக்கவும். சோபா, நாற்காலிகளைச் சுத்தம் செய்யுங்கள். தொலைக்காட்சி மேசை மற்றும் அலமாரிகளைத் துடைக்கவும். புகைப்படங்கள், அலங்காரப் பொருட்களை தூசு துடைத்து ஒழுங்குபடுத்துங்கள். தரையை நன்றாகத் துடைக்கவும். குறிப்பாக வீட்டை விசாலமாகக் காட்ட, தேவையற்ற பொருட்களை மேசைகளில் வைக்காமல் அகற்றுங்கள்.
நாள் 5: நம் ஆரோக்கியம் காக்கும் முக்கியமான இடங்களான குளியலறை மற்றும் கழிப்பறையைச் சுத்தம் செய்யுங்கள்
டைல்ஸ் தரை மற்றும் சுவர்களில் உள்ள அழுக்குகளை தரமான லிக்விட் கொண்டு அகற்றுங்கள். பாதுகாப்பு அவசியம். ப்ளீச், அமிலக் கழிப்பறை கிளீனர் போன்றவற்றை ஒன்றாகக் கலக்காதீர்கள். ஆபத்தான வாயுக்கள் உருவாகலாம். கழிப்பறையைச் சுத்தம் செய்யுங்கள்.
கண்ணாடி, வாஷ்பேசினைத் துடைக்கவும். குறிப்பாக காலியான அல்லது பயன்படுத்தாத காலியான பாட்டில்களை அகற்றுங்கள்.
சோப்பு, ஷாம்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதற்கான இடத்தில் வைத்து ஒழுங்குபடுத்துங்கள்.
நாள் 6: ஜன்னல்கள், கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள அழுக்குகளை எடுப்போம்
45–60 நிமிடங்கள் ஒதுக்கி சோப் ஆமில் கொண்டு கதவுகள், கைப்பிடிகளைத் துடைக்கவும். ஜன்னல் கம்பிகள் மற்றும் ஜன்னல் ஓரங்களைச் சுத்தம் செய்யுங்கள். மின்விசிறி, விளக்குகள் ஆகியவற்றின் தூசியை அகற்றுங்கள். ஒதுக்குப்புற மூலைகளில் உள்ள ஒட்டடையை அகற்றுங்கள். வீட்டின் நுழைவாயிலைச் சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக உயரமான இடங்களைச் சுத்தம் செய்யும்போது நாற்காலி மீது ஏறுவதைத் தவிர்த்து உறுதியான ஏணியைப் பயன்படுத்துங்கள்.
நாள் 7 - இறுதிக்கட்ட சுத்தம் மற்றும் தீபாவளி அலங்காரம் செய்யலாம்
இதற்கு 30–45 நிமிடங்கள் தேவை. வீடு முழுவதும் தண்ணீரால் துடைக்கவும். பூஜையறையைச் சுத்தம் செய்யுங்கள்.
பூஜைப் பொருட்களைத் தயாராக வையுங்கள். வாசலில் கோலம் போடுவதற்கான இடத்தைச் சுத்தப்படுத்துங்கள். விளக்குகள், தோரணங்கள் போன்றவற்றைத் தயாராக வையுங்கள். தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் தயாரிப்பதற்கான பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள்.
மின்விளக்குகள் மற்றும் அலங்காரங்களைச் சரிபார்த்து, பாதுகாப்பாகப் பொருத்துங்கள்.
நேர மேலாண்மையுடன் செய்யப்படும் 7 நாள் வீட்டுச் சுத்தம் ரிலாக்ஸ் ஆக தீபாவளியைக் கொண்டாட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தீபாவளிக்கு முன்பு உடல் சோர்வடையாமல், படிப்படியாக வீட்டை மாற்றியமைக்கும் நடைமுறை மற்றும் பதட்டமில்லாத வழிமுறைகளுடன் வாசகர்கள் தெளிவு பெறுவார்கள்.