

ஒருவர் செய்யாத குற்றத்திற்காக அவரை பழிப்பது சரியான செயலா? அப்படி செய்வதால் வீண்பழி சுமத்தப்பட்டவர் மன உளைச்சலையும் கவலையையும் கொள்வார். மனம் வேதனையில் துடித்து கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பிறர் மீது வீண்பழி சுமத்துவது தவறு. வீண்பழி போடும்பொழுது தவறே செய்யாதவர்கள் கூட தவறு செய்யக்கூடும்.
1. அமைதியாக இருப்பது: வீண் பழி சுமத்துபவர்களை சமாளிப்பதற்கு அமைதியாக பேசுவதும், அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்த்து தகுந்த பதில் அளிப்பதும் பலன் தரும். அவர்கள் குற்றம் சாட்டும் பொழுது நாம் கோபம் அடைந்தால் நிலைமை மோசமாகலாம். எனவே, கோபம் அல்லது பதற்றம் அடையாமல் அமைதி காத்து அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து பதில் அளிக்கலாம். சிலரின் சுபாவம் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பதுதான். அவர்களிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நம் பேச்சில், சமாதானத்தில் திருப்தி அடையவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி விடுவது நல்லது.
2. உண்மையை விளக்கலாம்: தவறான குற்றச்சாட்டுகளுக்கு வீண்பழி சுமத்துபவர்களிடம் உண்மையை அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்க முயற்சி செய்யலாம். கோபம் இல்லாத தொனியில் பேசுவது மிகவும் முக்கியம். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நம்மை பலவீனமாக காட்டிக் கொள்ளாமல் தடுக்கும். நடந்த செயலுக்கும் நமக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதை அவர்களுக்குப் புரியும்படி நிதானமாக எடுத்து சொல்லலாம். அவர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். எனவே, கோபம் சிறிது தணிந்ததும் நம் நிலையை விளக்கலாம். அத்துடன் நம் மீது தவறு இல்லாதபொழுது குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கவும் செய்யலாம்.
3. சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல்: வீண்பழி சுமத்துபவர்கள் நம்மைத் தவறாக புரிந்து கொண்டால் நம் மீது குற்றம் சுமத்துவது இயல்பு. இந்த சூழ்நிலையில் நாம் அவர்களைப் புரிந்துகொண்டு அமைதியான முறையில் நம் தரப்பு நியாயங்களை பேசிப் பார்க்கலாம். அது அவர்களுக்கு நம் மீதுள்ள தவறான நம்பிக்கையைக் குறைக்கவும், நம் பக்கம் உள்ள நியாயத்தை தெரிந்து கொள்ளவும் உதவும்.
4. நம்பிக்கையானவர்களுடன் பேசுவது: நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் நம் கவலைகளை பகிர்ந்து கொள்வது நமக்கு ஆதரவையும் நிம்மதியையும் தரும். வீண்பழி சுமத்துபவர்கள் பெரும்பாலும் பொறாமை, பழிவாங்கும் உணர்வு அல்லது பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் அவ்வாறு நடந்து கொள்ளலாம். எனவே, உணர்ச்சிவசப்படாமல், புத்திசாலித்தனமாகவும், திட்டமிட்டு செயல்படுவதும் முக்கியம்.
5. தொழில்முறை ரீதியாக இருந்தால்: சம்பந்தப்பட்ட நபருடன் தனிப்பட்ட முறையில் அமைதியான சூழ்நிலையில் பேச முயற்சிக்கலாம். அந்த நபரின் தவறான நடத்தை தொடர்ந்தால் அவர்களுடன் பழகுவதை குறைத்துக் கொள்ளலாம். தொழில் முறை ரீதியாக மட்டும் தொடர்பு வைத்துக்கொள்ளலாம். தொழில் முறை ரீதியாக, அதாவது பணிபுரியும் இடத்தில் இப்படி நடந்தால், நிறுவனத்தின் மனிதவளத் துறைக்கு எழுத்துபூர்வமாக புகார் அளிக்கலாம். இந்தப் பிரச்னையை HRன் கவனத்திற்கு கொண்டு செல்லும். HR அல்லது உடனடி மேலாளர்கள் உதவ மறுத்தால், தொழிலாளர் ஆணையர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
6. சட்ட ஆலோசனையைப் பெறலாம்: நிலைமை தீவிரமடைந்து நம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருந்தால், ஒரு சிறந்த வழக்கறிஞரை அணுகி சட்ட ஆலோசனை பெறுவது அவசியம். நம் உரிமைகளைப் புரிந்து கொண்டு, அவதூறு வழக்குப் பதிவு செய்வது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதால் நம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.