
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப நீரானது நம்மை வளர்க்கிறது, வாழ்விக்கிறது என்றால் மிகையில்லை. தற்போது மினரல் வாட்டர், பிளாக் வாட்டர் என பல விதங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளும், அதிலிருந்து கிடைக்கும் நன்மை, தீமைகளைப் பார்க்கலாம்.
சாதாரண நீரானது சரும வியாதிகள், சூலை நோய், மகோதரம், வாதம், பித்தம் முதலிய நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
ஆற்று நீரானது சளி, இருமல், தாகம், வாதம், பித்தம் முதலிய வியாதிகளை நீக்கி ஆண்மையைப் பெருக்கும்.
சிந்து நதி நீரானது வியர்வை, சிறுநீரகப் பிரச்னைகள், தாகம், சரும வியாதிகளைப் போக்க வல்லது.
யமுனை நதி நீரானது குஷ்ட வியாதிகள், காச நோய், தாகம், பித்த வியாதிகள் மற்றும் தாது நஷ்டத்தைப் போக்கும்.
கங்கை நதி நீரானது உடல் சூடு, வாத பித்தத்தைப் போக்கும். தாகம் தணிக்கும். உடல் எரிச்சலை நீக்கும்.
கோதாவரி நீரானது ஜுரம், வாந்தி, விக்கல், வயிற்று உப்புசம், காமாலை, உடல் எரிச்சல், நீர்க்கட்டு, சளி, இருமலைப் போக்கும்.
துங்கபத்திரா நதி நீரானது காச நோய், கண் நோய், நீரடைப்பு, தாது நஷ்டம் ஆகியவற்றை குணப்படுத்தும். உடல் நலம் தேறும்.
தாமிரபரணி நீரானது எல்லாவித ஜுரங்கள், புகைச்சல், உள்காய்ச்சல், காச நோய், உடல் எரிச்சல் முதலியவற்றை குணமாக்கும்.
வைகை நதி நீரானது குஷ்டம், இரத்த சோகை, கரப்பான், உடல் எரிச்சல், நடுக்கு வாதம், தாது நஷ்டம், அதிக தாகத்தைப் போக்கும்.
காவிரி நதி நீரானது இருமல், சளி, வயிற்று பொருமல், இரத்த சோகை, இரத்த மூலம், நா வறட்சி முதலியவற்றை குணப்படுத்தும். உடலுக்கு தேக அழகைத் தரும்.
ஊற்று நீரானது பித்தத்தைத் தணித்து சந்தோஷத்தைக் கொடுக்கும். தாகம் தணியும்.
கிணற்று நீரானது வெப்பத்தை அடக்கி, குளிர்ச்சியை உண்டாக்கும். சளி, இருமலைப் போக்கும்.
குளத்து நீர் வாத நோய், கப யோகத்தை அதிகப்படுத்தும்.
சுனை நீரானது வாத நடுக்கம், சீதள ஜுரத்தை தடுக்கும்.
ஓடை நீரானது அதிக தாகத்தைக் கொடுக்கும்.
பாறை நீர் ஜுரத்தை உண்டாக்கி வாதத்தைக் கொடுக்கும்.
இப்படிப் பல விதங்களில் நீரானது நம்மோடு கலந்து நம்மை உயிர்விக்கிறது.