ஒரு வீட்டிற்குக் கதவு எவ்வளவு முக்கியமோ அதேபோல ஜன்னல்களும் மிகவும் முக்கியமாகும். வீட்டினுள் வரவேண்டிய வெளிச்சம், காற்று, வீட்டின் அழகை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு ஜன்னலை சரியாக அமைப்பது மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஜன்னல்களின் வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கேஸ்மெண்ட் ஜன்னல் (Casement window):
இந்த வகை ஜன்னலில் கொக்கி கொடுக்கப்பட்டிருக்கும். உள்ளிருந்து வெளிப்பக்கமாக திறக்கக்கூடிய அமைப்பில் அமைந்திருக்கும். எல்லா வீடுகளிலும் பரவலாக வைக்கப்படும் டிசைன் இது. இந்த வகை ஜன்னலை ‘Cranked window’ என்றும் சொல்வார்கள். இந்த வகை ஜன்னலை வீட்டில் வைப்பதால் அதிக காற்றோட்டம் கிடைக்கிறது.
ஸ்லைடிங் ஜன்னல் (Sliding window):
இந்த வகை ஜன்னலை முழுமையாகத் தள்ளித் திறப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். இதை செங்குத்தாகவே அதிகம் அமைத்திருப்பார்கள். வீடுகளில் இந்த வகை ஜன்னல்களை சுலபமாகப் பயன்படுத்தலாம். வீட்டினுள் எந்த அளவு காற்று வர வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு ஜன்னலை சரிசெய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பே ஜன்னல் (Bay Window):
இந்த வகை ஜன்னல் மேன்ஷன் போன்ற இடங்களில் அழகுக்கு வைக்கப்படுவது. இதை வைப்பதால் அதிக அளவில் வெளிச்சம், காற்று வீட்டினுள் வரும். இது மூன்றுக்கும் மேற்பட்ட ஜன்னல்களைக் கொண்டது. இது சுவற்றை தாண்டி சற்று வெளிப்பக்கமாக வருவது போல அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் இருக்கும் ஜன்னலை திறக்க முடியாது. இரண்டு பக்கமும் இருக்கும் ஜன்னல்களைத் திறக்கலாம். இந்த வகை ஜன்னல் வீட்டின் மதிப்பை அதிகரிக்கும்.
ரூப் லேட்டர்ன் ஜன்னல் (Roof latern window):
வீட்டில் வெளிச்சத்திற்காக ஜன்னல்கள் வைப்பதைக் காட்டிலும் கூரையில் வைப்பது அதிக அளவில் வெளிச்சத்தைக் கொடுக்கும். அத்துடன் தனிமையை விரும்புவோருக்கு இதுபோன்ற அமைப்பு ஏற்ற ஒன்றாகும். இதுபோன்ற ஜன்னல் அமைப்பது வெயில் காலங்களில் வெப்பத்தை அதிகரிக்காது. குளிர்க்காலங்களில் வெப்பத்தை இழக்காது. 16ம் நூற்றாண்டிலிருந்து இதுபோன்ற ஜன்னல்கள் புழக்கத்தில் உள்ளது.
ஆவ்னிங் ஜன்னல் (Awning window):
இந்த வகை ஜன்னல்களில் மேலே பிணைப்பு போன்ற அமைப்பு வைக்கப்பட்டிருக்கும். கீழே திறப்பது போல அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் ஜன்னலை திறந்து வைத்தாலும் வீட்டினுள் சாரல் வராது. இந்த வகை ஜன்னல் சூரிய ஒளி, தூசி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். இந்த ஜன்னலை Privacy வேண்டும் என்பதற்காக சற்று உயரத்திலேயே அமைத்திருப்பார்கள். இதை அதிகமாக ஆபீஸ் மற்றும் ரெஸ்டாரெண்டில் பயன்படுத்துகிறார்கள். பார்ப்பதற்கு அழகாகவும், ஸ்டைலாகவும் உள்ளதால் தற்போது அதிக புழக்கத்தில் இது உள்ளது.