
கணினி யுகம் மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வந்துள்ளது. இது ’டிஜிட்டல் யுகம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது நாம் வாழும் முறை, பணியிட சூழல், தொடர்பு கொள்ளும் முறை அனைதையும் மாற்றியுள்ளது. இதன் காரணமாக நம்மில் பெரும்பாலோர் சவாலான ஒரு உலகத்திற்குள் நுழைந்துள்ளோம்.
இதைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை திருடும் முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளில் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு புதிய உத்திதான் டிஜிட்டல் கைது என்பது. சமீப காலமாக இந்தியர்களை குறி வைத்து இந்த முறைகேடு தொடர்ந்து நடைபெறுகிறது.
நடப்பது என்ன?
டிஜிட்டல் கைது என்பது ஒருவர் காவல்துறையை சேர்ந்தவரை போலவோ, சிபிஐ அல்லது அமலாக்க துறையை சேர்ந்தவரைப் போலவோ நடித்து நமக்கு குறுஞ்செய்தியையோ அல்லது வீடியோ அழைப்பையோ அனுப்புவார். அதில் நாம் போதை பொருள் வழக்கிலோ அல்லது பணக்கையாடல் வழக்கிலோ நாம் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அல்லது நாம் வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருந்ததாக தெரிவிப்பார்கள். நாம் எதையும் அனுப்பவில்லை என்று மறுத்தால் நம் ஆதார் எண்ணும் நம் தொலைபேசி எண்ணும் அந்த பார்சலில் இருப்பதாக கூறுவார்கள். இதன் பின்னர் நீங்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் ஸ்கைப் கால் அல்லது whatsapp வீடியோ காலில் அதிக நேரம் இருக்குமாறு கூறுவார்கள்.
உங்களுக்கு பிணை வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையிலான பணத்தை அனுப்புங்கள் என்று கூறி அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விவரங்களைக் கூறுவார்கள். பணம் அவர்களுக்கு போய் சேர்வது உறுதியாகும் வரை 'டிஜிடல் கைதில்'தான் இருக்க வேண்டியிருக்கும் என்றும் நாம் பணம் கொடுத்தால் வழக்கு தொடர மாட்டோம் என்றும் சொல்லுவார்கள். வீடியோ காலில் ஒரு போலீஸ் அதிகாரி சீருடையில் காவல் நிலையத்திலோ அல்லது அரசு அலுவலகத்திலோ அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
இது மட்டுமல்ல அவர்கள் வேறு பல வழிகளையும் பின்பற்றுகிறார்கள்.
பலருக்கு இது சார்ந்து மின்னஞ்சல் வரும். அது அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை போல, சிபிஐ அல்லது ஏதோ அரசு அதிகாரி அந்த நோட்டீசை அனுப்பியது போலவும் மேற்கொண்ட விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
இதுவரை 31 லட்சம் சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 2023- 2024 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 127 கோடி ரூபாய் பணம் இந்த மோசடிகள் மூலம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதைத்தவிர ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளில் மோசடிகள் பல நடந்து அதிகளவிலான பணம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான மோசடி நமக்கு நடந்தாலோ அல்லது யாராவது நம்மிடம் மோசடி செய்ய முயன்றாலோ அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் உடனே சரியான விவரங்களை பதிவு செய்யத் தவறக் கூடாது. இந்த இணையத்தளத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை அழைப்பதன் மூலம் நாம் நம் புகாரை பதிவு செய்யலாம்.
குறிப்பு:
’டிஜிட்டல் கைது’ என்று ஒரு நடை முறை வழக்கில் இல்லவே இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் நம்மை அவ்வாறு கைது செய்ய முடியாது. எவரையும் கைது செய்ய பல நடைமுறைகள் சட்டத்தில் உள்ளன. அதிலும் உள்ளூர் காவல் நிலையத்தின் சம்மன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.