'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்கள்.
இப்போது 'எங்கள் வீட்டு குளிர் சாதனப் பெட்டி பாடும், பேசும், சமையல் குறிப்புகள் அள்ளி வீசும்' என்று மார் தட்டிக் கொள்ளலாம்.
வீட்டு உபயோகப் பொருட்களான குளிர் சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், குளிர்பதனப் பெட்டி ஆகியவை முந்தைய காலங்களில் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்தன. அதனால், இந்தப் பொருட்களை பொதுவாக 'வெள்ளைப் பொருட்கள் (white goods) என்று குறிப்பிட்டு வந்தார்கள். ஆனால், காலப் போக்கில் இந்த சாதனங்கள், நுகர்வோர்களைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் கிடைக்க ஆரம்பித்தன.
தற்போது, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிணி சாஃப்ட்வேர் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்களால், குளிர்சாதனப் பெட்டிகளில் நுகர்வோர் வசதிக்காக சிறப்பு அம்சங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஊமையாக இருந்த குளிர் சாதனப் பெட்டியை 'இது கணிணியா?' என்று வியக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது செயற்கை நுண்ணறிவு!
தற்போது புழக்கத்திற்கு வருகின்ற குளிர் சாதனப் பெட்டிக்கு நான்கு கதவுகள். உணவுகளை சரியான தட்ப வெப்பத்துடன் வைக்கும் அறைகளுக்கு இரண்டு கதவுகள். பொருட்களை உறைய வைக்கும் அறைகளுக்கு இரண்டு கதவுகள்.
குளிர் சாதனப் பெட்டியின், இடது பக்கக் கதவு, எல்.சி.டி. திரையாகவும் இயங்குகிறது. இந்தத் திறையில் அன்றைய தேதி, நேரம் மட்டுமின்றி, குளிரூட்டும் அறை மட்டும், உறைய வைக்கும் அறையின் வெப்ப நிலை என்ன என்ற விவரங்களைத் தெரிவிக்கிறது. இதனால், தேவைப்பட்டால், வெப்ப நிலையை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.
ஒரு பொருளை இந்தப் பெட்டியில் வைக்கும் போது, உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமரா, அந்தப் பொருளைப் படம் பிடித்துத் திரையில் காண்பிக்கிறது. அந்தப் பொருளின் பெயரை, திரையில் இருக்கும் கீ போர்ட் மூலம் நாம் பதிவு செய்யலாம்.
பெட்டியை இயக்கும் கணிணியின் மெமரியில், பொருளின் படம், பெயர், பெட்டியில் வைக்கப்பட்ட நாள், வைக்கப்பட்டது இடது பக்கத்திலா அல்லது வலது பக்கத்திலா என்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பொருளில் 'பார் கோட்' இருந்தால், அதனை ஸ்கேன் செய்து, பொருள் காலாவதி ஆகும் தேதியும் கணிணியில் பதிவாகும்.
குளிர் சாதனப் பெட்டியில் என்ன பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, என்பதைத் தெரிந்து கொள்ள பெட்டியைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. எல்.சி.டி. திரையில், பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் படம், பெயர், வைக்கப்பட்ட நாள் ஆகியவை காட்சிப் படுத்தப்படுகின்றன.
குளிர் சாதனப் பெட்டியில் வைஃபை வசதியுள்ளது.
பல நாட்களாக ஒரு பொருள் எடுக்கப்படாமல் உள்ளே இருந்தால், அந்தப் பொருளைப் பயன்படுத்தி என்னென்ன உணவு வகைகள் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற சமையல் குறிப்புகள் திரையில் வருகின்றன.
சில பொருட்கள், அவற்றின் உபயோகிக்கும் காலம் முடிவடைந்து விட்டால் அதைப் பற்றிய எச்சரிக்கை வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் குளிர் சாதனப் பெட்டியின் கதவைத் திறக்கும் போது, எத்தனைப் பொருட்கள் பெட்டியின் உள்ளே வைக்கப்படுகின்றன, எத்தனை வெளியே எடுக்கப்படுகின்றன என்ற விவரங்கள் அளிக்கிறது.
பெட்டி அதிக நேரம் திறந்திருந்தால், எச்சரிக்கை ஒலியுடன், கதவு திறந்திருக்கிறது என்ற வாசகம் திரையில் காட்டப்படுகிறது. பெட்டியின் கதவை மூடும் வரை எச்சரிக்கை ஒலி வந்த வண்ணமிருக்கும்.
குளிர் சாதனப் பெட்டியின் மென்பொருள், ஷாப்பிங்க் பட்டியல் தயார் செய்யும் திறன் கொண்டுள்ளது. குளிர் சாதனப் பெட்டியை அலைபேசி எண்ணுடன் இணைக்கும் வசதி இருக்கிறது.
பொதுவாக, கடைக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும் போது, வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் என்ன இருக்கின்றன, எவ்வளவு இருக்கின்றன, என்ன வாங்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். அலைபேசி எண்ணுடன் பெட்டி இணைக்கப்பட்டிருப்பதால், கடையில் இருந்தபடியே பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப என்ன தேவை என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
வைஃபை இணைப்பு இருப்பதால், யூடியூப் சென்று பாடல் கேட்பதோ, சின்னத் திரை அல்லது சினிமா பார்ப்பதோ, தொலைக்காட்சியை நாடாமல், குளிர் சாதனப் பெட்டியில் காணலாம்.
கூகுளின் மெமரியில் நிழற் படங்கள் பதிவிட்டிருந்தால், அவற்றைப் பார்க்கலாம். அலெக்ஸா இணைக்கப்பட்டிருந்தால், கேள்விகள், சமையல் குறிப்புகள் அலெக்ஸாவிடம் கேட்டு பதில்களைப் பெறலாம்.
வீட்டு வாசல் கதவில் கேமரா பொருத்தப்பட்டிருந்தால், சமையலைறையில் இருந்தபடியே, வாசலில் வந்திருப்பவர் யார் என்று அறிந்து கொள்ளலாம்.
ஸ்லோகங்கள் மற்றும் மெல்லிசை அல்லது திரையிசை கேட்ட வண்ணம் சமையல் செய்வதற்கு நல்ல நண்பன் ஏஐ தொழில் நுட்பத்தில் இயங்கும் குளிர் சாதனப் பெட்டி.