

இரட்டை வருமானம், குழந்தைகள் இல்லை எனும் பொருள்பட DINK (Double Income, No Kids) எனும் கலாசாரம் பரவி வருகிறது. வேலை செய்து வருமானம் ஈட்டும் தம்பதிகள் இருவரும் குழந்தைகளைப் பெற வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள். இந்தத் தம்பதிகள் பெரும்பாலும் தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்காக இந்த முறையை தேர்வு செய்கிறார்கள். இந்த வாழ்க்கை முறை நகர்ப்புறங்களில் பெருகி பிரபலமடைந்து வருகிறது.
1. தொழில் முன்னேற்றம்: இன்றைய காலகட்டத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகமான பெண்கள் உயர் கல்வியைத் தொடர்வதுடன், வெற்றிகரமான தொழில்களையும் நிறுவுகின்றனர். இதன் விளைவாக பெற்றோராக இருப்பதை கருத்தில் கொள்வதற்கு முன்பு தம்பதிகள் நிதி ஸ்திரத்தன்மை, தொழில் முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட சந்தோஷத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் மற்றும் சேமிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். இது நகர்ப்புறங்களில், குறிப்பாக படித்த, தொழில் வல்லுநர் பிரிவினரிடையே அதிகரித்து வரும் ஒரு வாழ்க்கை முறை தேர்வாகும்.
2. நிதி நிலைத்தன்மை: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறிப்பாக நகர்ப்புறங்களில் குழந்தைகளை வளர்ப்பது என்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். அதற்கு முதலில் தங்களை நிதி ஸ்திரத்தன்மையை பெறுவதற்கு போராடி நிலைநிறுத்திக் கொள்வதற்கு முயல்கிறார்கள். வீட்டுச் செலவுகள், விலை உயர்ந்த கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் என பல தம்பதிகள் கண் முன் தோன்றி பெரிய தடைகளாக உள்ளன. DINK வாழ்க்கை முறை, குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமை எதுவும் இல்லாமல் வாழ்க்கையை உயர்ந்த தரத்தில் அனுபவிக்கவும், பல இடங்களுக்கு பயணம் செய்யவும், தனிப்பட்ட வளர்ச்சியில் முன்னேற்றம் காணவும், முதலீடு செய்யவும், ஆடம்பரமாக வாழவும் முடிகிறது.
3. தனிப்பட்ட சுதந்திரம்: இந்த DINK வாழ்க்கை முறை, தனி நபர்கள் தங்கள் ஆர்வங்களை தொடரவும், பெற்றோர் என்ற பொறுப்புகள் இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்கவும், சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்கிறது. தனிப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்தும் திறனும், வேலை-வாழ்க்கை சமநிலையைப் பேணவும், குழந்தைகளை வளர்ப்பதில் தொடர்புடைய மன அழுத்தத்தை தவிர்ப்பதுமாக இருப்பதால் இந்த முறை பலரை மிகவும் கவர்ந்திழுக்கிறது.
4. பயணம்: பெற்றோர் என்ற பெரிய பொறுப்பு இல்லாததால் பொழுதுபோக்குகளிலும், பயணம் செய்வதிலும், உணவகங்களுக்கு செல்லுதல், சுதந்திரமாக சுற்றி திரிவது போன்றவற்றிற்கும் அதிக நேரமும், நிதியையும் செலவிட முடிகிறது. பாரம்பரிய குடும்ப கட்டமைப்புகளுக்கு பதிலாக, தனிநபர் சுதந்திரம் மற்றும் சுய-நனவுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அத்துடன் திருமண வயது அதிகரித்துள்ளதால், குழந்தைகள் பெறுவதற்கான முடிவும் ஒத்தி வைக்கப்படுகிறது.
5. ஓய்வு நடவடிக்கைகள்: தனிப்பட்ட விருப்பங்களுக்கு அதிக நேரம் செலவிட முடிகிறது. அத்துடன் தம்பதிகளுக்கு இடையே அதிக நேரத்தை ஒன்றாகக் கழிக்க வாய்ப்பும் கிடைக்கிறது. DINK என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம். மாறிவரும் காலத்திற்கேற்ப, தனிமனித சுதந்திரத்திற்கும் பொருளாதார திட்டமிடலுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதையே இது காட்டுகிறது.
DINK என்ற சொல் முதலில் 1980களில் பிரபலமடைந்தது. ஆனால், youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்தத் தளங்களில் தம்பதிகள் தங்கள் குழந்தைகளற்ற, அனுபவம் நிறைந்த சுதந்திரமான வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் மக்கள் தொகையில் குறைந்த விழுக்காடே என்றாலும் இது இக்கால இளைஞர்களை ஈர்க்கிறது.