
தீபாவளி கொண்டாட்டம் நெருங்கிவிட்டது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்க இப்போதே அனைவரும் தயாராகி இருப்பார்கள். பட்ஜெட்டும் தயாராகி இருக்கும். அந்த வகையில் உங்கள் பட்ஜெட்டை தாண்டி ஷாப்பிங் செய்யாமல் இருப்பதற்கான டிப்ஸ்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. தீபாவளி ஷாப்பிங் செல்வதற்கு முன்பாக என்னென்ன பொருட்களை அவசியமாக வாங்க வேண்டும் என்பதை முதலில் லிஸ்ட் போட்டு, திட்டம் தீட்டி, எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் நமது கவனத்தை முழுமையாக செலுத்தினால் மற்றவற்றை ஷாப்பிங் செய்து பட்ஜெட்டுக்குள் செலவை முடிக்கலாம்.
2. லிஸ்ட் போட்டு விட்டோமே என்று அஜாக்கிரதையாக எண்ணாமல் மனதில் தோன்றிய பொருட்கள் பக்கம் போகாமல் முதலில் லிஸ்டில் எழுதி வைத்த பொருட்களை நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் ஷாப்பிங் செய்து விட வேண்டும்.
3. ஷாப்பிங் செய்யும் கடைகளில் 'ஷாப்பிங் கார்டு' என்ற ஆப்ஷன்கள் இருக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அந்தக் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது நமக்கு சில தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. சில வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கும், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதால், அதனையும் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பு பில்லை செலுத்த வேண்டும்.
5 .ஷாப்பிங் செய்யும் கடைகளில் உள்ளே நுழைந்ததும் சலுகைகள், தள்ளுபடிகள் என ஏகப்பட்ட கார்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும் பகுதிகளில் பொருட்களை வாங்கும்போது சற்று கவனமாக வாங்குவது சிறந்தது. ஏனெனில், விழாக் கால கூட்ட நெரிசலில் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
6. நாம் தேடிய பொருள் நாம் நினைத்தது போலவே கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலோ அல்லது ஆர்வத்திலோ பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஆஃபர் இடங்களில் இருந்து தள்ளிப் போக நேரிட்டு தெரியாத்தனமாக சலுகை இல்லாத பொருளை வாங்க நேரிடும். அதனை பில் போட்ட பிறகு கவனிக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அவரவர்களுக்குத் தேவையான பொருட்கள் இருக்கும் இடத்தைத் தாண்டி ஷாப்பிங் செய்யாமல் இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீறி சென்று பொருட்கள் வாங்கும்போது செலவு அதிகரித்து நம் பட்ஜெட்டை தாண்டி சென்று விடும்.
7. குறைந்த விலையில், சலுகையில், தள்ளுபடியில் பொருட்கள் கிடைக்கிறது என்பதற்காக உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள். ஏனெனில், பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆஃபர்கள் வந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே, தேவையுள்ள பொருட்களை மட்டும் தேவைப்படும் நேரங்களில் வாங்குவது பட்ஜெட்டை தாண்டாமல் இருக்க உதவும்.
இவை எல்லாவற்றையும் விட கூட்ட நெரிசலிலும், விடுமுறை நாட்களிலும் ஷாப்பிங் செய்வதை விடுத்து, வார நாட்களில் தீபாவளி ஷாப்பிங்கை முடித்து விடுவது மனதிற்கு மகிழ்ச்சியையும், பட்ஜெட்டிற்குள் ஷாப்பிங் செய்யவும் முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.