தீபாவளி பர்ச்சேஸ்: கூட்டத்தில் சிக்காமல் ஸ்மார்ட்டா ஷாப்பிங் செய்வது எப்படி?

கூட்ட நெரிசலில் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து மகிழ்வோடு ஷாப்பிங் செய்ய வழிமுறைகள்
தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,
தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,Image credit: Gemini
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்ற பெயரில் எழுதும் எஸ்.விஜயலட்சுமி, கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன், குங்குமம் தோழி இதழ்களில் 40 சிறுகதைகள், 55 ஒரு பக்கக் கதைகள், 17 நூல் விமர்சனங்கள் எழுதியவர். போட்டிகளில் பல பரிசுகள் வென்றவர். கல்கி ஆன்லைனில் வாழ்வியல், ஆரோக்கியம், உளவியல் கட்டுரைகளை எழுதுகிறார்.

Updated on: 

தீபாவளி நெருங்கும் வேளையில் கடைவீதிகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. தீபாவளி ஷாப்பிங் செய்வது ஜாலியான அனுபவம்தான் என்றாலும் கூட்டத்துக்குள் செல்லும் போது சில ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன.

நகை, பணம், செல்ஃபோன் பத்திரம்:

கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் கும்பல் அதிகம் இருக்கும். விலையுயர்ந்த தங்க நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்கவேண்டும். கைப்பையைத் தோளில் தொங்கவிடாமல் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்கள் கைபேசியைப் பின் பாக்கெட்டில் வைத்தால் திருடர்களுக்குச் சௌகரியமாகிவிடும். பெண்கள் கைபேசியை கையில் வைத்துக்கொள்ளாமல் கைப்பையில் வைக்கலாம். யாராவது வேண்டுமென்றே உங்கள் மீது மோதினாலோ அல்லது பேச்சுக் கொடுத்து கவனத்தைத் திசைதிருப்ப முயன்றாலோ விழிப்புடன் இருக்க வேண்டும்; உடைமைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜிபே/ கார்டு பெஸ்ட்:

பெருமளவு பணத்தைக் கையில் கொண்டு செல்வதைக் காட்டிலும் UPI அல்லது கார்டு பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தலாம். எனினும் ரகசியக் குறியீட்டைப் பிறர் பார்க்காதவாறு மறைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள்/முதியவர் பாதுகாப்பு:

கூட்டத்தில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், மற்றும் முதியவர்களை அழைத்துச் செல்லாமல் இருப்பது நலம். சிறுவர்களின் கைகளை எப்போதும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டும். குழந்தைகளின் சட்டைப் பையிலோ அல்லது பாக்கெட்டிலோ பெற்றோர் பெயர், முகவரி மற்றும் அவசரத் தொலைபேசி எண் எழுதிய ஒரு சீட்டை வைப்பது கட்டாயம்.

தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,
தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,Image credit: Gemini

வழிதவறினால் அங்கிருக்கும் காவலர்களிடமோ அல்லது கடைகளின் பணியாளர்களிடமோ மட்டுமே உதவி கேட்க வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்குச் செல்லும்போது, வழிதவறினால் எந்தக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு இடத்தை முன்னதாகவே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

கூட்ட நெரிசலை சமாளிக்கும் முறைகள்:

கூட்டம் அதிகம் உள்ள மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களைத் தவிர்க்கலாம். காலை நேரம், மதிய நேரம் அல்லது வார வேலை நாட்கள் மிகவும் பாதுகாப்பானவை. கடைகளுக்குள் நுழையும்போதே அவசரகால வெளியேறும் வழி எங்கே இருக்கிறது என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். தள்ளு முள்ளு ஏற்பட்டால், பதற்றமடையாமல் கூட்டத்தின் போக்கிலேயே நகர்ந்து மெதுவாக வெளியே வர முயற்சி செய்யவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்திப் பூட்டிவிட்டுச் செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டின் இந்த 3 இடங்களில் பட்டாசு வச்சா… வெடிச்சு சிதறும் உஷார்!
தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,

போலித் தள்ளுபடி:

‘இன்று மட்டும் 70% தள்ளுபடி’ போன்ற விளம்பரங்களில் மயங்கக் கூடாது. அவை பெரும்பாலும் மோசமான தரத்தில் இருக்கும். ரிடர்ன் வசதி இருக்காது. துணியின் தரம் மற்றும் அசல் விலையைச் சரிபார்த்து வாங்க வேண்டும். பில் கேட்டு வாங்க வேண்டும். எக்ஸ்சேஞ்ச் (Exchange) வசதி இருக்கிறதா என்று விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன் ஷாப்பிங்:

ஆன்லைன் ஷாப்பிங்கிலும் உஷாராக இருக்க வேண்டும். கூட்டத்திற்குப் பயந்து இணையத்தில் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போலியாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகளில் வரும் பரிசுக்கூப்பன்கள் மற்றும் 80% தள்ளுபடி கொண்ட சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்.

OTP, ஏடிஎம் கார்டு PIN, வங்கி விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள். அதிகாரப்பூர்வமான, நம்பகமான இணையதளங்களில் மட்டும் பொருட்களை வாங்குங்கள். அறிமுகமில்லாத செயலிகளில் வாங்கும்போது 'கேஷ் ஆன் டெலிவரி' முறையைப் பயன்படுத்துவது நல்லது.

வீட்டுப் பாதுகாப்பு:

ஷாப்பிங் செல்லும்போது வீட்டின் பாதுகாப்பும் முக்கியம். ‘நாங்கள் குடும்பத்தோடு ஷாப்பிங் செய்கிறோம்’ என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதெல்லாம் பகல் நேரத்திலேயே திருடர்கள் தம் கைவரிசயைக் காட்டுகிறார்கள். முறையாக பிளான் செய்து கொண்டு போனால் ஷாப்பிங் ஜாலியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிவகாசி ஆன்லைன் பட்டாசு மோசடி: தீபாவளிக்கு பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?
தீபாவளி ஷாப்பிங் - Diwali shopping safety,