
தீபாவளி நெருங்கி விட்டது. பணி நிமித்தமாக பல ஊர்களில் தங்கி வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கிப் பயணமாகும் காலம் இது. இப்படி நாட்கணக்கில் நம் வீட்டை விட்டு வெளியேறும்போது வீட்டின் பாதுகாப்புக்காக பல பரிசோதனைகள் தேவைப்படுவது முக்கியமாகி விட்டது. எப்போதும் வீட்டுக்குள் இருக்கும்போது நமக்கு நம் வீட்டைக் குறித்த பாதுகாப்பு உணர்வு எழுவதில்லை. ஆனால், விடுமுறை தினங்களில் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் செல்லும்போது மட்டும்தான் வீட்டின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் கொள்கிறோம். நாம் மகிழ்வுடன் விடுமுறையை கழிக்கச் செல்லும்போதும் வீட்டைப் பற்றிய எண்ணத்துடனேயே இருப்பது சற்று நிம்மதியை இழக்கச் செய்யும் விஷயம். ஆனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை செய்து விட்டுச் செல்லும்போது நாம் கவலையின்றி நமது விடுமுறையை கழிக்கலாம். வீட்டுப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாடி இருக்கும் செடிகள் மற்றும் மூடி இருக்கும் திரைச்சீலைகள் போன்றவை எளிதாக அந்த வீட்டில் ஆள் இல்லை என்பதைக் குறிக்கும் குறியீடுகள். இதை தவிர்க்க நீங்கள் வீட்டை விட்டுச் செல்லும்போது உங்களுக்கு நம்பகமான ஆட்களை வீட்டை பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டுச் செல்வது நல்லது. அவ்வப்போது அவர்கள் செடிகளுக்கு நீர் ஊற்றுவது, விளக்குகளைப் போடுவது என்று இருந்தால் அந்த வீட்டில் யாரும் இல்லை என்பது போன்ற தோற்றம் தவிர்க்கப்படும்.
தற்போது டெக்னாலஜி வளர்ந்து விட்ட நிலையில் ஸ்மார்ட் பூட்டு உங்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமையலாம். வீட்டின் பாதுகாப்புக்கும் யாரும் உள்ளே நுழைய முடியாததை உறுதி செய்யும் வண்ணம் உங்கள் மொபைல் மூலம் கவனிக்கும் வசதியும் கொண்ட கதவுகளுக்கு ஸ்மார்ட் பூட்டு உபயோகமாக இருக்கும்.
பாதுகாப்பு மேம்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது வீட்டைத் தவிர, வீட்டைச் சுற்றி இருக்கும் மரங்கள், புதர்கள் போன்ற இடங்கள் குற்றவாளிகளுக்கு சரியான மறைவிடங்களாக விளங்கும் என்பதால் நிச்சயம் வெளிப்புறப் பாதுகாப்பு கேமராக்களை அமைப்பது நல்லது. ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராக்கள் உங்கள் ஸ்மார்ட் போன் வழியாக வீட்டை கண்காணிக்க உதவும்.
தற்சமயம் கணினி மயமாகிவிட்ட இந்த உலகில் நாம் எங்கு செல்கிறோம், எங்கு இருக்கிறோம் போன்ற விபரங்களை சமூக இணையதளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உங்களைப் போலவே குற்றவாளிகளும் அதே இணைய தளங்கள் மூலமாக எந்தெந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை நோட்டமிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னதான் அக்கம் பக்கத்து வீட்டினர் பார்வையில் நமது வீடு இருந்தாலும், அவரவர் அவரவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும்போது வீட்டினில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை அறிவிக்கும் விதமாக ஒரு அலாரம் சிஸ்டத்தை வீட்டிற்குள் அமைப்பது நல்லது. இந்த அலாரத்தை நமது ஸ்மார்ட் போன் மூலமாகவும் கண்காணிக்க முடிவது சிறப்பு.
வீட்டை பூட்டும் முன் இறுதியாக அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சரியாக சாத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். வீட்டின் சாவிகள் இரண்டு மூன்று இருக்கும் பட்சத்தில் நம்பிக்கைக்குரியவரிடம் இன்னொரு சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது நல்லது. அப்படி யாரும் இல்லை என்றால் வங்கி லாக்கரில் கூட நமது சாவிகளை வைத்து விட்டுச் செல்லலாம். அதேபோல், வீட்டில் உள்ள முக்கியமான பொருட்களான விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை வங்கி லாக்கரில் வைப்பது பாதுகாப்பானது. அப்படியே வீட்டில் வைக்கும் நிலை ஏற்பட்டாலும் எளிதில் கைக்குக் கிடைக்காதபடி எவரும் அறியாத இடத்தில் அவற்றை வைப்பது நல்லது.
தீபாவளி சமயம் மழைக்காலம் என்பதால் வீட்டின் முன் அல்லது உள்ளே ஈரப்பதத்துடன் பூஞ்சை பிடிக்கும் நிலையில் உள்ள சாமான்களை அப்புறப்படுத்திவிட்டு பிறகு வீட்டைப் பூட்டுங்கள். இல்லையெனில் அதிலிருந்து வெளிப்படும் பாக்டீரியாக்கள் மூலம் உங்கள் உடல் நிலையும் வீட்டில் உள்ள மற்ற பொருட்களும் பாதிக்கப்படும் அபாயத்திற்கு ஆளாகலாம்.
வீட்டில் உள்ள மின்னணு பொருட்களான தொலைக்காட்சி, கணினி, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி போன்ற அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து விடுவது நல்லது. இது மின்சார செலவை குறைப்பதுடன் மின் கசிவு அபாயத்தையும் தடுக்கும்.
இரவு நேரங்களில் வீட்டை இருட்டாக வைத்திருப்பது திருடர்களுக்கு வசதியாகப் போய்விடும். ஆகவே, வெளிப்புற பகுதியில் நிச்சயம் தானியங்கி விளக்குகளை அமைப்பது திருடர்களை தடுக்க உதவும்.
வீட்டின் உள்ளே உள்ள தண்ணீர் குழாய்களில் தண்ணீர் சரியாக நிறுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும். அதேபோல், வீட்டிற்கு வெளியே தேவையற்ற பொருட்களை மலை போல குப்பையாக போட்டுவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது நீங்கள் நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்.
‘என்ன… இப்ப நாங்கள் ஊருக்குப் போவதா? வேண்டாமா?’ என கேட்கத் தோன்றுகிறதா? தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு சந்தோஷமாக ஊருக்குப் போகலாமே.