
தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் மற்றும் முறுக்கு சுடும் போதே நாம் உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கும் தருவதற்காகவே சேர்த்து செய்வோம். முறுக்கு சுட்டு எடுத்து வைக்கும்போதே யார் யாருக்கெல்லாம் தர வேண்டுமோ அவர்களுக்கு உடனே பேக் செய்து, அதன் மீது பெயர் எழுதி வைத்து விட்டால் அடிக்கடி முறுக்கு டப்பாவை திறக்க வேண்டியதில்லை. முறுக்கும் ஃபிரெஷ்ஷாக இருக்கும். பேக் செய்வதற்கென்றே பிரத்யேகமாக Zip-lock covers தேவையான அளவுகளில் கடைகளில் கிடைக்கின்றன.
நாம் ஸ்வீட் கடைகளில் வாங்கும்போது தரும் டப்பாக்களை எடுத்து வைத்து, இனிப்பு வகைகளை தருவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் வீட்டு குழந்தைகளிடம், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வீடுகளுக்குப் பலகாரங்களை கொடுத்து வர அனுப்ப வேண்டும். இதனால் அந்த வீட்டுக் குழந்தைகளுடன் நட்பு வளரும்.
பண்டிகையன்று செய்யும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, சோம்பு போன்ற செரிமான ஊக்கிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் நன்மை பயக்கும். மேலும், அன்று பூரி போன்ற எண்ணெய் பலகாரங்கள் நமது உணவில் சேருவதால் ஏற்படும் அஜீரணக் கோளாறு நீங்க, இஞ்சி டீ, லெமன் டீ போன்ற பானங்களை சூடாக அருந்துவது நல்லது.
வீட்டில் உள்ள பெண்கள் சமையலறையில் அதிக நேரம் வேலை செய்வதால், நல்ல பருத்தியிலான ஆடைகளை அணிந்து கொள்வது அவசியம். குழந்தைகள், தீபாவளி அன்று எண்ணெய் நிறைந்த பலகாரங்கள் சாப்பிடுவதால், அடிக்கடி சிறிது வெந்நீரைக் கொடுக்க வேண்டும். இது ஜீரணத்திற்கு உதவும்.
தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் குளியல் செய்யும்போது, காய்ச்சிய நல்லெண்ணெயில் இரண்டு மிளகாய் தட்டி போட்டு தலைக்கு தேய்த்துக் குளித்தால் சளி பிடிக்காது. தலை துடைக்கும் துணிகள் மற்றும் கைத் துடைக்கும் துணிகள் போன்றவற்றை நன்கு கொதிக்கும் நீரில் போட்டு, லிக்விட் சோப் ஊற்றி அலசி, வெயிலில் காயவைத்து எடுத்தால் எண்ணெய் வாடை இல்லாமல் இருக்கும்.
பட்டாசு வெடிக்கும்போது, முன்னறையில் ஒரு பழைய டவலை வைத்து, குழந்தைகள் வெளியே விளையாடி வந்து அல்லது பட்டாசு வெடித்து விட்டு வந்து உள்ளே செல்லும்போது அதில் கைகளைத் துடைத்து, பிறகு கைகளை கழுவினால் பட்டாசின் மருந்து நெடி இருக்காது.