
தாயத்து என்பது நம் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த பொருளாகும். இது நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளில் இருந்து நம்மை பாதுகாத்து நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தரும். இவை தீய சக்திகளை நம்மிடம் அணுக விடாமல் செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் போன்ற நன்மைகளைத் தருவதுடன் மனதை அமைதிப்படுத்தி நேர்மறையான எண்ணங்களையும் உண்டாக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை இருந்தால் வாழ்வின் லட்சியத்தை எளிதில் அடைந்து விடலாம் அல்லவா?
தாயத்தை அணிவதற்கு முன் அதை பூஜையறையில் வைத்து பூஜித்த பின்பு அணிய வேண்டும். வலது கையில் அணிவது சிறப்பு. கருப்பு, நீலம் அல்லது சிவப்பு வண்ண நூலில் கோர்த்து அணியவது நல்லது. தாயத்துதான் அணிந்து விட்டோமே என்று அலட்சியமாக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது எந்த பலனையும் தராது. கடமைகளை செய்யாமல் பலனை எதிர்பார்ப்பது தவறு அல்லவா? எனவே தாயத்து என்பது நம்முடைய முயற்சிகளுக்கு ஒரு கூடுதல் பலமாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம்.
தாயத்தை நல்ல நாட்களில் வாங்கி அமாவாசை அல்லது பௌர்ணமி போன்ற நாட்களில் அணியலாம். தாயத்தை அணிவதால் ஆரோக்கியம் மேம்படும்; மன அழுத்தம் குறைந்து அமைதி நிலவும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கி வெற்றிநடை போட முடியும். எனவே தாயத்தை அணியும்போது நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பது அவசியம். தாயத்து அணிவது என்பது பழங்காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகும். பெரும்பாலும் உலோகங்கள், ரத்தினக் கற்களால் வடிவமைக்கப்படும் இவை, பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதை அணிவதால் வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்றும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது. தாயத்துகள் மரம், கல், உலோகம், கண்ணாடி போன்ற பல்வேறு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சில தாயத்துக்களில் பல பொருட்களின் கலவையும் இருக்கும். தாயத்துக்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் பயன்பாடு இன்றும் கூட பரவலாக உள்ளது. விபத்துக்கள், கண் திருஷ்டி படாமல் இருக்க, நல்ல அதிர்ஷ்டத்திற்காக கூட தாயத்துகளை அணிவது வழக்கமாக உள்ளது.
தாயத்துகளை பொதுவாக கைகளில், மணிக்கட்டு, இடுப்பு பகுதியில், கழுத்தில் என கட்டிக்கொள்வது வழக்கம். வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் தாயத்து செய்து அணிவது வழக்கம். அறிவியல் ரீதியாக பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்ற வழக்கமும் உள்ளது. பட்டு நூலினால் ஆன தாயத்து கயிறு கட்டுவது நல்ல பலன் அளிக்கும்.
சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும். கருப்பு நிற கயிறு கட்டுவதால் கண் திருஷ்டி போன்ற தீயவற்றின் பார்வையில் இருந்து விடுபடலாம். ஆரஞ்சு அல்லது காவி நிற கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தாயத்து கயிறுகளை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.