
திருமணம் என்பது அது காதல் மணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட மணமாக இருந்தாலும் சரி இப்போதெல்லாம் அதில் பல பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை வேண்டின், திருமணத்திற்கு முன்பு ஆண், பெண் இருபாலரும் அவசியம் அறிய வேண்டிய 8 பரிசோதனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. உங்களின் இரத்த வகை: நாம் திருமணம் செய்துகொள்ளும் நபரின் இரத்த வகையை தெரிந்து வைத்துக்கொள்வதால் ஒருவருக்கொருவர் இரத்த தானம் செய்து கொள்ள முடியும் என்பதற்கும் மேலாக, உடல் ஆரோக்கியம், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளை முன்கூட்டியே சரி செய்ய உதவும்.
2. கருவுறுதல் சோதனை: திருமணத்திற்கு முன்பு கருவுறுதல் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் நாம் இனப்பெருக்கத்திற்கு தகுதியானவரா என்பதனை அறிந்துகொண்டு குழந்தையின்மை பிரச்னையை தீர்க்க முடியும்.
3. மரபணு மருத்துவ வரலாறு: உங்கள் துணைக்கு இதய நோய், நீரிழிவு நோய் போன்ற குடும்ப சம்பந்தமான நோய்கள் உள்ளதா என்பதனைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே சிகிச்சை எடுப்பதால் உங்கள் குழந்தைகளுக்கும் அது ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
4. எச்ஐவி அல்லது பாலியல் நோய்: உடல் தொடர்பு மூலமாக பரவுகின்ற நோய்களான எச்ஐவி மற்றும் பாலியல் நோய்கள் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்துகொள்வது திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் பலவித பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
5. மனநல சோதனை: உங்கள் துணைக்கு நல்ல மனநலம் இருக்கிறதா என்பதனை முன்கூட்டியே பரிசோதித்துக் கொள்வதால் பின்னாளில் வாழ்வில் நீங்கள் எரிச்சல் அடைய தேவையில்லாமல் இருக்கும்.
6. நாள்பட்ட நோய் சோதனை: உங்கள் துணை நீண்ட காலமாக எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவருடைய / அவளுடைய நாள்பட்ட பரிசோதனையை நீங்கள் செய்துகொள்ளலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நிலையை அறிந்து கொள்வது அவசியம்.
7. மரபணு சோதனை: ஒரு குழந்தை தனது பெற்றோரின் மரபணுக்களை மட்டுமே பெறும் என்பதால் சில சமயங்களில் இந்த மாதிரியான பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.
8. தலசீமியா சோதனை: குழந்தைகளில் பிறப்பில் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்க இரு கூட்டாளிகளும் செய்ய வேண்டிய முக்கியமான சோதனை தலசீமியா பரிசோதனையாகும். தம்பதி இருவரில் யாருக்காவது தலசீமியா மைனர் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இருவருக்கும் சிறிய அளவில் தலசீமியா இருந்தால், அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதைப் போல, திருமணத்துக்கு முன்பு இந்த எட்டு முக்கியமான பரிசோதனைகளையும் செய்து கொள்வது திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை நலமாக இருப்பதற்கு உதவுகிறது.