செயலற்ற ஆக்கிரமிப்பு (Passive aggression) என்பது ஒருவர் தனது எதிர்மறை உணர்வுகள், மனக்கசப்புகள் அல்லது கோபத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் மறைமுகமான அல்லது நுட்பமான வழியில் வெளிப்படுத்துவதைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். கணவன் மேல் கோபமாக உள்ள ஒரு மனைவி, பாத்திரங்களை உருட்டுவது, காபி டம்ளரை நங்கென்று டீப்பாயின் மேல் சத்தம் வர வைப்பது, மனைவியின் மேல் கோபம் உள்ள கணவன் பைக்கை ஓங்கி மிதிப்பது போன்ற செயல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
செயலற்ற ஆக்கிரமிப்பின் காரணங்கள்: கோபத்தை, எரிச்சலை, மனத்தாங்கலை ஒருவர் மறைமுகமாக வெளிப்படுத்துவதற்கு சில காரணங்கள் உள்ளன.
பயம்: தனது கோபத்தை, ஆத்திரத்தை, எரிச்சலை நேரடியாகக் காட்டினால் அதனால் தாங்கள் திட்டப்படுவோம் அல்லது மிரட்டப்படுவோம் என்று பயந்து நேரடி மோதலை தவிர்ப்பதற்காக மறைமுகமான வழிகளை நாடுகிறார்கள்.
பாதுகாப்பின்மை: நேரடியாக தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டினால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் நபர்கள் இப்படி மறைமுகமாக எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.
விரக்தி: தனக்கு சக்தி இல்லை, ஆற்றல் இல்லை என்று உணரும் சூழ்நிலைகளில் அல்லது அதிகாரத்தை நேரடியாக சமாளிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் விரக்தியின் காரணமாகக் கூட செயலற்ற முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.
செயலற்ற ஆக்கிரமிப்பின் பொதுவான அறிகுறிகள்:
தள்ளிப்போடுதல்: தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு வேண்டுமென்றே தனது பணிகளை அல்லது பொறுப்புகளை செய்யாமல் தாமதப்படுத்துவார்கள். அது மற்றவர்களை பாதிக்கும் என்று தெரிந்தே, வேண்டும் என்றே தனது எதிர்ப்பு அல்லது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அப்படிச் செய்வார்கள்.
கிண்டல் / கேலி: தங்கள் கருத்தை வெளிப்படையாகச் சொல்ல தைரியம் இல்லாமல் கிண்டல் அல்லது கேலி போன்ற மறைமுக விமர்சனங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.
செய்யும் வேலையில் அதிருப்தி: ஏதாவது வேலை செய்ய ஒப்புக்கொண்டாலும் அதை நன்றாக, சிறப்பாகச் செய்யாமல் தனது மனக்கசப்பை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். எப்படித் தெரியுமா? வேண்டுமென்றே அந்த வேலையை மோசமாக செய்து தங்கள் மனக்கசப்பை வெளிப்படுத்துவார்கள்.
நுட்பமான நாச வேலை: தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டாமல் நுட்பமான நாச வேலைகளில் ஈடுபடுவார்கள். முக்கியமான ஒரு வேலையை செய்ய மறந்தது போல நடிப்பது அல்லது தனக்கு இது செய்யவே தெரியாது என்று தன்னை திறமையற்றவராக காட்டிக்கொள்வது போன்ற நுட்பமான வழிகளில் இறங்குதல்.
உடல் மொழி: வாய் வார்த்தையாக கோபம் அல்லது எரிச்சலை வெளிப்படுத்தாமல் கண்களை உருட்டுதல், முறைத்துப் பார்த்தல், பெருமூச்சு விடுதல் போன்ற செயல்களின் மூலம் காட்டுதல்.
செயலற்ற ஆக்கிரமிப்பை நிர்வகித்தல்:
1. செயலற்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபருக்குத் தேவையற்ற மனப்பதற்றமும் மன அழுத்தமும் உருவாகும். எனவே, இது தனக்குத் தீங்கு செய்யும் என தன்னைப் பற்றிய சுய விழிப்புணர்வில் ஈடுபட்டு, அதிலிருந்து வெளியே வர வேண்டும்.
2. தன்னுடைய உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்துவதற்கு பதிலாக நேர்மையான தகவல் தொடர்புகளில் ஈடுபட வேண்டும். தன்னுடைய எண்ணங்களை தைரியமாக பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
3. தன் உணர்வுகளை நேர்மையாக, தைரியமாகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பயிற்சிகள் உதவும்.
4. மறைமுகமாக தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருக்காமல் விளைவுகளை சந்தித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். உதவி தேவைப்பட்டால் தகுந்த நபர்களின் ஆலோசனையை நாட வேண்டும்.
5. செயலற்ற ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக அதிலிருந்து வெளியே வருவது எப்படி என அறிந்து கொண்டு செயல்படுவதுதான் நல்லது. இல்லையெனில் அது சம்பந்தப்பட்ட நபருக்கே தீங்காக முடியும்.