சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்களை அதிக பொருட்கள் வாங்க தூண்டுவதற்கு பல விதமான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.
பால் மற்றும் பால் ஆடை (பன்னீர்) போன்ற அடிக்கடி தேவைப்படும் பொருட்களை கடைக்குள் வெகு தொலைவில் வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடை முழுவதும் நடந்து சென்று பொருள் தேட வேண்டி இருக்கும். இதனால் அவர்கள் மற்ற பொருட்களைப் பார்த்து, ஆர்வம் கொண்டு அதை வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஜன்னல்கள், கடிகாரங்கள் மற்றும் வெளிப்புற வெளிச்சங்கள் இல்லாதவாறு அமைப்பதன் மூலம், வரும் வாடிக்கையாளர்கள் கடையில் எவ்வளவு நேரம் உள்ளே இருக்கிறார்கள் என்பதை உணர முடியாது போகலாம். இதனால் அவர்கள் மேலும் பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க கடை வாசலில் அல்லது கடையின் முக்கிய பாதையில் திடீர் ஆஃபர்களை வைப்பதன் மூலம் மக்களை எளிதாக கவர்ந்து அந்த பொருட்களை வாங்க வைத்து விடுகிறார்கள்.
மக்கள் அடிக்கடி வாங்கும் பொருட்களை எளிதாக அடையாளம் கண்டு வாங்கும் படி கடையின் முகப்பு பகுதியில் வைத்து விடுகிறார்கள்.
குடும்பத்துடன் சூப்பர் மார்க்கெட் வருபவர்களை கவர்ந்திழுக்க குழந்தைகளுக்கு சிறிய பரிசுகள் கொடுப்பதன் மூலம் பெற்றவர்களை அதிகம் செலவு செய்ய வைக்கிறார்கள். இந்த தந்திரத்தினால் மனம் மகிழ்ந்த பெற்றோர்கள் தங்கள் பட்ஜெட்டை மீறி செலவு செய்து விடுகிறார்கள்.
கடையை விட்டு வெளியேறும் பாதையில் கூட விளம்பரங்களும், தள்ளுபடிகளும் வைப்பதன் மூலம் கடைக்கு வெளியே செல்லும் முன்பு, கடைசி நேரத்தில் கூட சில பொருட்களை வாங்கும் படி தூண்டுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்கள் இப்படி பல தந்திரங்களை கையாள்வதால் அதிகமாக விற்பனை செய்ய முடிகிறது.
வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செலவு செய்ய தூண்டும் சூப்பர் மார்க்கெட்கள் தெருவுக்கு தெரு அதிகரித்து வருகின்றன. அதில் மயங்கியோ விருப்பப்பட்டோ, அல்லது தெரிந்தோ தெரியாமலோ இறங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.