சொற்கள் முக்கியமா? சொல்பவர் முக்கியமா?

Kavignar Kannadasan
Kavignar Kannadasan
Published on

ல்லா காலத்திலும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு விஷயம் அறிவுரை மட்டும்தான். சிறியவர்களில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை நிறைய பேருக்கு பிடிக்காத விஷயமும் இதுதான். ஆனால், நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

பொதுவாக, யாராவது ஒரு நல்ல கருத்தை சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சொல்வது யார், அதை சொல்வதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து குழப்பிக் கொள்ளக் கூடாது. பிரணவ மந்திரத்தை மகன் முருகனிடமே மண்டியிட்டு கேட்டார் ஈசன். 'தன் மகன்தானே? சிறு பிள்ளைதானே? இவர் என்ன பெரிதாக சொல்லி விடப் போகிறார்?’ என்று அவர் நினைக்கவில்லை. சொல்பவர் யார் என்று பார்க்கவில்லை. சொல்லும் கருத்து என்ன என்பதைத்தான் இந்த உலகை ஆளும் இறைவனே நினைத்தார்.

ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் பேச சென்றிருந்தபோது அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ''இளைஞர்களே நீங்கள் மது குடிக்க வேண்டாம். அது உங்கள் வாழ்வையே அழித்துவிடும்'’ என்று சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள், ''இதை சொல்றதுக்கு உங்களுக்குத் தகுதி இருக்கா?’’ என்று நகையாடினார்கள்.

அப்போது வெகு நிதானமாக கண்ணதாசன், ''ஆமாம், இதை சொல்வதற்கு எனக்கு முழு தகுதி இருக்கிறது. ஏனென்றால், நான் மது பழக்கத்துக்கு ஆளாகி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். சாக்கடையில் விழுந்த ஒரு மனிதன், மேலே சுற்றி நிற்பவர்களிடம், 'நான் இந்த சாக்கடைக்குள் விழுந்து கிடக்கிறேன். இங்கு யாரும் வராதீர்கள்’ என்று சொன்னால் மேலே நிற்கும் மனிதர்கள் கேட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதை விடுத்து, ‘சாக்கடை நாற்றம் எப்படி இருக்கிறது என்று நாங்கள் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்வோம்’ என்று நினைத்து சாக்கடைக்குள் குதிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அது போலத்தான் எந்த அறிவுரையும். அதை நாங்கள் அனுபவித்துதான் வாழ்க்கையில் தெரிந்து கொள்வோம் என்று நினைப்பது வீண் வேலை.  நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதானா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். சொல்வது யார் என்று பார்த்தால் நஷ்டம் கேட்பவர்களுக்குதான்'’ என்று சொன்னார்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால மனச்சோர்வை எதிர்கொள்ள உதவும் உணவுகளும், பழக்க வழக்கங்களும்!
Kavignar Kannadasan

ஆளைப் பார்த்து எடை போட்டு நல்ல கருத்துக்களை புறம் தள்ளுவது கேட்பவர்களுக்கு நஷ்டத்தையே தரும். மிகவும் நல்ல மனிதர் என்று நாம் நினைத்திருக்கும் ஒருவர் தகாத தீய விஷயங்களை போதித்தால் ஏற்றுக் கொள்வோமா? அதை விலக்கி விடுவோம்தானே? அதனால் எப்போதும் சொல்பவர் யார் என்று பார்க்காமல், சொல்லும் கருத்துக்கள் ஏற்புடையவைதானா என்று மட்டும் பார்த்தால் போதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com