சூப்பர் மார்க்கெட் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டுப் போங்க!

supermarket purchasing
supermarket purchasinghttps://www.choice.com

ற்காலத்தில் சூப்பர் மார்க்கெட் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. நமக்குத் தேவையான பொருட்களை நாமே தேர்வு செய்து வாங்கிக்கொள்ளும் வழக்கம் வந்துவிட்டது. இதில் சாதக, பாதகங்கள் என இரண்டும் உள்ளன.

நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் மளிகைப் பொருட்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. பலர் மாதத்தின் முதல் வாரத்தில் தேவையான மொத்த பொருட்களையும் வாங்கி விடுகிறார்கள். இப்படிச் செய்யாமல் இதை நான்காகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் ஆயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய்க்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும். மளிகைப் பொருட்களின் விலை நிரந்தரமானது அல்ல. தினம் தினம் ஏறும், இறங்கும். மொத்தமாக வாங்கியதும் அதில் பல பொருட்களின் விலை இறங்கினால் நஷ்டம் உங்களுக்குத்தான். வாரத்திற்கு ஒரு முறை வாங்கினால் உங்களுக்கு லாபம் கிடைக்கக் கூடும். அது மட்டுமின்றி, ஐந்தாயிரம் ரூபாயை ஒரே நாளில் செலவழிப்பதும் சரியல்ல.

வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போது வாங்க வேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு கொண்டு செல்லுங்கள். தேவையின்றி எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள். கடைகளில் சிறிய பிளாஸ்டிக் கூடையும் இருக்கும், டிராலியும் இருக்கும். இதில் நீங்கள் சிறிய பிளாஸ்டிக் கூடையை எடுத்துக் கொள்ளுங்கள். டிராலியை எடுத்தால் அது பெரியதாக இருப்பதால் அதிக பொருட்களை வாங்க நேரிடும். எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் அந்தப் பொருளின் காலாவதி தேதியை (Expiry Date) பார்த்து வாங்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயமாகும்.

பொதுவாக, ரேக்குகளில் முதலில் வந்த பொருட்களை உங்கள் கண்களில் படும்படி அடுக்கி வைத்திருப்பார்கள். அதன் பின்புறத்தில் சமீபத்தில் வந்த பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். உதாரணமாக போன மாதம் வந்த பொருள் முதலிலும் இந்த மாதம் வந்த பொருளை பின்புறத்திலும் வைத்திருப்பார்கள். முதலில் வந்ததை முதலில் விற்க வேண்டிய (First In First Out) கட்டாயத்தில் இருப்பதால் இப்படிச் செய்வார்கள். இதைத் தவறு என்று கூற முடியாது. உங்களுக்கு புதிதாக வந்த பொருள் தேவையென்றால் பின்புறத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர்மார்க்கெட்டிற்குச் செல்லுவதைத் தவிர்த்து விடுங்கள். பொதுவாக வார நாட்களில் மதிய வேளைகளில் சென்றால் கூட்டம் இருக்காது. நீங்கள் பொறுமையாக உங்களுக்குத் தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்கி வரலாம். பில் போடுவதற்கு வரிசையில் நிற்கும் நேரமும் மிச்சமாகும்.

காபித் தூள் முதலான வாசனைப் பொருட்களை அதிக அளவில் வாங்காதீர்கள். இப்படி வாங்கி டப்பாக்களில் கொட்டி வைத்து அடிக்கடித் திறந்து உபயோகித்தால் வாசனை போய்விடும். வாரத்திற்கொரு முறை சிறிய பாக்கெட்டுகளில் வாங்கி பயன்படுத்துவது நல்லது.

நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையை சரியாக பில் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். பிஸியான சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக கூட்டத்தின் காரணமாக வேகவேகமாக பில் போடுவார்கள். இதனால் பில் தொகையில் தவறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பில் போட்டு முடித்ததும் பில் தொகை மற்றும் வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து பணத்தைச் செலுத்தி விட்டுப் புறப்படுங்கள்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் மூலம் POS இயந்திரத்தில் பணம் செலுத்தும்போது நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையை சரியாக மிஷினில் பதிவிட்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து பின்னர் பின் கார்டின் ரகசிய எண்களைப் போடுங்கள். இதிலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது பல சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் வாங்கிய பில் தொகைக்கான ரிவார்ட் பாயிண்ட்டுகளைத் தருகிறார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் பத்து ரூபாயை உங்கள் கணக்கில் வரவு வைப்பார்கள். இந்தத் தொகை கணிசமாக சேர்ந்த பின்னர் உங்கள் பில்லில் கழிப்பதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்காக உங்கள் மொபைல் எண்ணைப் பெற்று ஒவ்வொரு முறை பில் செய்யும்போதும் உங்கள் கணக்கில் வரவு வைப்பார்கள். பில் செய்யும் போது உங்கள் மொபைல் எண்ணை தவறாமல் சொல்லுங்கள்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால உடல் சோர்வை அகற்றி, உற்சாகமளிக்கும் 7 உணவு வகைகள்!
supermarket purchasing

சூப்பர் மார்க்கெட்டுகளில் அடிக்கடி ஆஃபர்களை அறிவிப்பார்கள். இத்தகைய ஆஃபர்கள் உண்மையான ஆஃபர்களா என்பதை சோதித்து அறிந்து பின்னர் வாங்குங்கள். உதாரணமாக மூன்று எண்ணிக்கை வாங்கினால் ஒரு எண்ணிக்கை இலவசம் (3+1 Offer) என்று ஒரு ஆஃபர் வழங்குவார்கள். சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் அந்த குறிப்பிட்ட ஆஃபர் பொருளை எடுத்து அதன் விலையை நான்கால் பெருக்கி ஆஃபர் தொகையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இப்படிச் செய்து பார்த்தால் அது உண்மையான ஆஃபர்தானா என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூப்பர் மார்க்கெட்டிற்குச் செல்லும் போது மறக்காமல் சணல் அல்லது துணிப்பையைக் கொண்டு செல்லுங்கள். தற்போது பல சூப்பர் மார்க்கெட்டுகளில் பாலிதீன் கேரிபேகுகளுக்கு ஐந்து அல்லது பத்து ரூபாயை பெறுகிறார்கள். தேவையின்றி இதற்காக பணம் செலவழிக்க வேண்டாம். சுற்றுச்சூழலையும் கெடுக்க வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com