கோடைக்கால உடல் சோர்வை அகற்றி, உற்சாகமளிக்கும் 7 உணவு வகைகள்!
கோடை வெயிலின் கடுமையினால் அடிக்கடி உடல் முழுவதும் வியர்த்து மிக விரைவில் களைப்படைந்து விடுவோம். உடல் சோர்வடைந்து போகும். உடல் சோர்வை அகற்றி உற்சாகமாக வைக்கும் உணவு வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பி12: உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள B12 சத்து மிகவும் அவசியம். இந்த சத்து குறையும்போது சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். இது தயிர், கோழி இறைச்சி, பால், சீஸ், பனீர், ஒமேகா 3 கொழுபு அமிலம் உள்ள மீன் வகைகள், பாதாம், சோயாவில் அதிகம் உள்ளது.
2. இரும்புச்சத்து உள்ள உணவுகள்: இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையில் முடியும். இதனால் உடல் சோர்வும் பலவீனமும் ஏற்படும். கீரை, பருப்பு வகைகள், முருங்கைக்கீரை,டோஃபு, முழு தானியங்கள், கோதுமை, ஓட்ஸ் சிவப்பு அரிசி, சிறு தனியங்கள், டார்க் சாக்லேட்டுகள், பட்டாணி, லென்டில்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது.
3. வைட்டமின் சி உள்ள உணவுகள்: வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் ஜலதோஷத்தின் தீவிரத்தை குறைக்கவும் உதவும். சாத்துக்குடி, ஆரஞ்சு, தக்காளி, பாலக்கீரை, டோஃபு, மீன், வெண்ணெய் மிளகு தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது.
4. போலிக் அமிலம்: போலிக் அமிலம் அவகோடா, பருப்பு வகைகள் புரோக்கோலி, இலை கீரைகள், முழு தானியங்கள், சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. கீரை மசியல், கீரை சூப், சாலட் ஸ்மூத்தி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் ஃபோலிக் அமில அளவு அதிகரிக்கும்.
5. மெக்னீசியம்: மனித உடலின் நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்தில் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து ஆற்றலை உடல் கிரகிக்கவும் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் மெக்னீசியம் அவசியம். நட்ஸ், டார்க் சாக்லேட், இலை கீரை வகைகள், விதைகள், பீன்ஸ், கடல் உணவுகள், சோயா பொருட்களில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.
6. காஃபின்: நிறைய பேருக்கு காபி, தேநீர் போன்ற பானங்கள் உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கும். இவை ஆற்றல், கவனம் மற்றும் செறிவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
7. கிரீன் டீ: சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த பானம் கிரீன் டீ. இது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆற்றலை தருகிறது. தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்துவது ஒருவரை உற்சாகத்துடன் வைக்கிறது.