காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அதுபோன்ற சமயங்களில் பால் சார்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும். எனவே, தயிர், மோர், பால், சீஸ் போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றால் சிரமப்படும்பொழுது சீனி கொண்டு தயாரித்த உணவுகள், சாக்லேட், இனிப்புகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமாக சாப்பிடும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஜலதோஷம் குணமாக நாளாகும்.
வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தக்கூடிய காபி, டீ, குளிர்பானம் மற்றும் சோடா போன்றவற்றை கண்டிப்பாகக் குடிக்க கூடாது. ஜலதோஷம், காய்ச்சல் இருக்கும்போது இவற்றை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக சத்து பானங்களைக் குடிக்கலாம்.
ஜலதோஷம் இருக்கும்போது பழச்சாறு குடிக்கக் கூடாது. அவ்வாறு குடித்தால் அதில் உள்ள அமிலத்தன்மை உடல் நலம் சீராவதை மேலும் தாமதப்படுத்தும். மேலும், அதுபோன்ற சமயங்களில் காரமான உணவுகள், ஊறுகாய், சிட்ரஸ் வகை பழங்கள் போன்றவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷம் இருக்கும்பொழுது இஞ்சி, டீ, சுக்கு காபி, இளநீர், தேன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற இயற்கை பொருட்களை சேர்த்துக் கொண்டால் ஜலதோஷம் சீக்கிரமாகவே குணமாக வாய்ப்பு ஏற்படும்.
ஜலதோஷத்தோடு காய்ச்சலும் இருந்தால் சீரகக் கஞ்சி, மிளகு போட்ட கஞ்சி, பால் சிறிதளவு கலந்த கஞ்சி வகைகளை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உடலின் சூடும் தணியும்.