தூக்கமின்மைக்குக் காரணமும் தீர்வும்!

Causes and Remedies for Insomnia
Causes and Remedies for Insomniahttps://zeenews.india.com

தூக்கமின்மை என்பது தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்னையாகும். இந்த தூக்கமின்மைக்கான காரணங்களையும் அவற்றுக்கான தீர்வையும் இந்தப் பதிவில் காணலாம்.

* உடல் உழைப்பு குறைவாக இருப்பது.

* அதிக நேரம் டிவி, மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கமின்மை பிரச்னைதான். இவை மூளையை அமைதியாக்கவிடாமல் தடுக்கும்.

* வயிறுமுட்ட இரவு நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிக காரம் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ, செரிமானக்கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவற்றை உண்டாக்கி, தூக்கத்தை பாதிக்கும்.

* மனஅழுத்தம், மன உளைச்சலுடன் இருந்தாலும் தூக்கம் வராது.

* பெரிய நோய்கள், வலிகள் உள்ளவர்களுக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வராது.

* ஆஸ்துமா, சளி பிரச்னை இருந்தாலும் தூக்கம் வராது.

பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை இருக்கும். இதற்கு மன அழுத்தம், மனதில் சஞ்சலங்கள், வீட்டில் சச்சரவுகள் எண்ணங்களின் போராட்டம் இருந்தாலும் தூக்கம் வராது.

பெரும்பாலோருக்கு முதுமையில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் முதலிடத்தை தூக்கமின்மை பிடிக்கிறது. ஐந்து மணி நேரத் தூக்கம்கூட அறுபது வயதுக்கு போதுமானதுதாகும். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவை விட ஒருவர் எவ்வளவு நேரம் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பது அவசியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதற்கு, தூக்கம் ஒரு இயற்கையான வழி. ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. தினமும் ஒருவருக்கு பொதுவாக ஆறு முதல் எட்டு மணி வரை தூக்கம் அவசியமாகும். தூக்கம் குறையும்போது உடல் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வருவதோடு, தேவையில்லாமல் கோபம் உண்டாகும்.

ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெட்டால் பசி குறையும். அஜீரணம் ஏற்படும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்கு கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இக்காலத்தில் முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 'வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை' என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை வகுக்கிறது. பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்னை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.

இதையும் படியுங்கள்:
கடுமையாக உழைப்பதை விட, திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
Causes and Remedies for Insomnia

தூக்கம் வர சில டிப்ஸ்:

* தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

* இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

* மதியம் 5 மணிக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* கண்டிப்பாக இரவில் டிவி, மொபைல் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரதிற்கு முன்பாகவே லேசான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல வாழ்வியல் முறை என்பது நாம் வகுத்துக்கொள்வதே. தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து யோகா, தியானம், நடைப்பயிற்சி போன்ற வாழ்வியலை சிறப்பாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com