சமத்துவம் போற்றும் மஹாளய பட்ச வழிபாடு!

Mahalaya Patcham worship
Mahalaya Patcham worship
Published on

ஹாளய பட்ச விரதம் இந்த ஆண்டு 18.09.2024 முதல் 02.10.2024 வரை (புரட்டாசி பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அமாவாசை வரை) நம் முன்னோர்களை நாம் நினைவுகொள்ள வகுக்கப்பட்ட விரத காலமாகும். நாம் அறிந்தோ, அறியாமலோ அவர்களுக்கு இழைத்த இன்னல்களுக்கு மானசீகமாகவும் மந்திரபூர்வமாகவும் மன்னிப்பு கேட்கும் காலகட்டம். அவர்கள் நம்முடன் வாழ்ந்தபோது, அவர்கள் மனம் வருந்தும்படி நாம் செய்திருக்கக்கூடிய தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடிக் கொள்ளும் வகையில் எள்ளையும் தண்ணீரையும் இறைத்து தர்ப்பணம் செய்யும் காலம்.

இந்த பதினைந்து நாட்களில், அவரவர் மூதாதையர் மறைந்த திதியில் இப்படி நீத்தார் கடனை நிறைவேற்றுவது பொதுவான வழக்கம். ‘மறந்தவர்களுக்கு மாளயம்’ என்பார்கள். நம் முன்னோர்களில் யாருக்கேனும் மறதி காரணமாக ஈமக்கடன் விட்டுப்போயிருந்தால் அதன் பாதிப்பு நம் குடும்பத்துக்கு வரக்கூடாது என்பதற்காக இந்நாளை சிரத்தையுடன் அனுசரிப்பது வழக்கம். நம்மோடு இருந்தவர்கள் நம்மிடையே இல்லாமல் போனாலும் நம்முடன் வாழ்ந்த காலத்தில் நம் இயல்பான, சந்தோஷமான வாழ்க்கைக்கு வித்திட்டவர்கள் அவர்கள் என்ற நன்றியை மறக்காதிருக்க, நம் முன்னோர்கள் வகுத்திருக்கும் ஒரு நியதி - நீத்தார் நினைவுகூரல்.

குறிப்பிட்ட திதியன்று மறைந்த மூத்தவரை உளமாரத் தொழுது, அவர் நமக்காற்றிய கடமைகளுக்காக நன்றி தெரிவிக்கும் முறை. அவ்வாறு உயிர் நீத்த நம் வம்சத்து அத்தனை மூதாதையர்களுக்கும் மஹாளய அமாவாசை அன்று நன்றி சொல்வது என்பது நம்மிடையே தொன்று தொட்டு வரும் வழக்கம். மஹாளய பட்சத்தின் துவக்கத்தில் பூமிக்கு வந்து தங்கும் பித்ருக்கள், மஹாளய பட்ச முடிவில் அமாவாசை அன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் மேலுலகுக்குச் செல்வதாக ஐதீகம்.

இதிலும் பொதுவுடைமைப் பண்பை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கும் பாங்கை நினைத்து நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம். ஆமாம், அவ்வாறு நன்றிக்கடன் செலுத்தும்போது நாம் சொல்லும் ஒரு மந்திரம்:

‘ஏஷா நமாதா, நபிதா நப்ராதா நபந்து: நாந்ய கோத்ரிணஹ
தே ஸர்வே த்ருப்திமாயாந்து மயோத்ஸ்ருஷ்டைஹி குசோதஹை’

அதாவது, ‘என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான பந்தத்துக்கும் உட்படாத, என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத, எனக்கு முகம் தெரியாத, என்னையும் தங்களுக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்தை விட்டுப் போயிருக்கின்றன. எந்த உபாதையுமில்லாமல் விதிக் கணக்கிலோ, இயற்கை சீற்றத்தாலோ, நோய்வாய்ப்பட்டோ, விபத்தாலோ எந்த வகையிலும் இந்த உலகத்து உடலை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய அந்த ஆத்மாக்கள் எல்லாம் நற்கதி அடைய நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்:
ஆளுமையை வளர்த்துக்கொள்ள கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
Mahalaya Patcham worship

அந்த ஆத்மாக்கள் சாந்தியடைய, மேல் உலகில் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காதிருக்க, புது உடலோடு புதுப் பிறவி எடுக்கும் அடுத்த ஜன்மத்திலும் அந்த வாழ்க்கையிலும் எல்லா நன்மைகளையும் அவர்கள் பெற நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும்’ என்பது அந்த ஸ்லோகத்தின் பொதுப் பொருள்.

தன் நலத்தையும் மீறி, தன் குடும்ப நலத்தையும் மீறி, தன் உறவினர் நலத்தையும் மீறி, சாதி பேதம் பாராது, உயர்வு-தாழ்வு நோக்காது, வயது வித்தியாசம் பாராது, அனைத்து மக்களுக்காகவும் இப்படி வேண்டிக்கொள்ளும் பரந்த எண்ணம் இந்த தர்ப்பண மந்திரத்தில் அடங்கியிருப்பதும் அவ்வாறு தர்ப்பணம் மேற்கொள்வோர், அந்த மந்திரத்தை பொருளுணர்ந்து உச்சரிப்பதும்தான் எவ்வளவு உயரிய பண்பு!

இதற்காகவே, இப்படி ஒரு பொதுவுடைமை பிரார்த்தனையை உருவாக்கித் தந்த நம் முன்னோர்களுக்கு நாம் மீண்டும் நன்றி செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com